Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டிற்கு இடைத் தேர்தல் அறிவிப்பு – அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப் பதிவு – தேர்தல் ஆணையம்


தமிழ்நாட்டில் மொத்தம் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து, பெரம்பூர் தொகுதியை தக்கவைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்து மதுராந்தகம் (தனி) எம்.எல்.ஏ. மரகதம் குமாரவேல், தாராபுரம் (தனி) எம்.எல்.ஏ. சத்யபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா, விராலிமலை எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர் மற்றும் கரூர் எம்.எல்.ஏ. எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில், திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய ஏழு தொகுதிகளும் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இந்நிலையில் இந்த ஏழு தொகுதிகளுக்கும் எப்போது இடைத் தேர்தல் நடத்தப்படும் எனும் எதிர்பார்ப்பு இருந்துவந்த நிலையில், தற்போது தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்துள்ளது.

அதன்படி இந்த இரண்டு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 9ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி நிறைவடையும் எனவும், வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் செப்டம்பர் 16ஆம் தேதியும் எனவும், வாக்குப் பதிவு அக்டோபர் 6ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஏழு தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர்த்து மற்ற ஐந்து தொகுதிகள் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

news18


 


Post a Comment

0 Comments