Ticker

6/recent/ticker-posts

பெண் யானையின் கோரைப்பல்.. லட்சக் கணக்கில் டீல்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்


திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட அமராவதி நகர் பாறை பகுதியில், யானையின் கோரைப் பல்லை ஒரு நபர் விற்பனைக்காக வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. பெண் யானையின் கோரை பல் இருப்பதாகவும், அதைப் பல லட்ச ரூபாய்க்குப் பேரம் பேசி டீல் முடிக்கக் காத்துக்கிடப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இதனால் அமராவதி வனச்சரகர் புகழேந்தி தலைமையிலான குழுவினர், குழுக்களாகப் பிரிந்து தேடுதலில் இறங்கினர். அதில் சூர்யா என்பவர் வெளியூர் ஆட்களுக்கு செல்போனில் தகவல் கொடுத்து பேரம் பேசியதாகத் தெரியவர, உடனே அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சூர்யாவின் செல்போனில் பெண் யானையின், கோரைப் பற்களின் புகைப்படங்களை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரை வனத்துறை அலுவலகம் அழைத்து வந்து பலத்த பாதுகாப்பில் தொடர்ந்து விசாரித்துள்ளனர். அதில் அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட தலிஞ்சி வயல் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உயிரிழந்த பெண் யானையிலிருந்து எடுக்கப்பட்ட பல்லை விற்பனைக்காக அனுப்பியதாக சூர்யா கூறியுள்ளார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனச்சரகர் புகழேந்தி, கருப்பு சாமியையும் கைது செய்து கோரைப் பல்லைப் பறிமுதல் செய்த நிலையில் சூர்யா மற்றும் கருப்புசாமி இருவர் மீது வன குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் யானைத் தந்தங்கள் கடத்தப்பட்ட வழக்கில், வன ஊழியர் உட்பட மூவரைக் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதே பகுதியில் யானையில் பல் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பல் பிடுங்கப்பட்ட பெண் யானை உயிரிழந்தது எப்படி? தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டதா? உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. வனத்துறையினர் விசாரணையின் முடிவிலேயே அது தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும்..

news18


 


Post a Comment

0 Comments