1. கடவுள் வாழ்த்து
புகழுக்குரிய படைத்தவனை வணங்குதல்

1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
2.கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
3.மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.
4.வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
5.இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
6.பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்.
7.தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.
8.அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது.
9.கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.
10.பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.
1. கடவுள் வாழ்த்து
புகழுக்குரிய படைத்தவனை வணங்குதல்
1.எம்மொழிக்கும் முதல் எழுத்து அகரமாகும். அதுபோலவே, உலகம் படைத்தவனையே முதலாகக் கொண்டுள்ளது.
2.கற்ற கல்வியின் பயன் இறைவனடியை வணங்குவதேயாகும்.
3.நெஞ்சமலரில் வாழும் இறைவன் திருவடியை நினைப்பவர் நெடுங்காலம் வாழ்வர்.
4.விருப்பு வெறுப்பு அற்ற இறைவனை நினைப்பவர்க்கு என்றும் துன்பமில்லை.
5.இறைவன் புகழ்பாடி வாழ்பவரை அறியாமையால் வரும் இன்ப, துன்பம் சேர்வதில்லை.
6.ஐம்புலனை அடக்கி பொய்மையற்ற ஒழுக்க நெறியில் வாழ்பவரே நெடுங்காலம் வாழ்வார்.
7.ஒப்புவமை இல்லாத இறைவனை நினைக்காதவர்க்கு மனக்கவலை மாறுவது இல்லை.
8.அறக்கடலான இறைவனடியை வணங்காதவர் வாழ்க்கைக் கடலைக் கடக்க இயலாது.
9.கொள்கையற்ற உறுப்புகள் பயனற்றுப் போவதைப் போல இறைவன் திருவடியை வணங்காத தலை பயனற்றதாகும்.
10.இறைவனடியை வணங்குபவரே பிறவிக்கடலை நீந்திக் கடக்க இயலும்.
உரையாசிரியர்
தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர்
தமிழ்ச்செம்மல் பல்திறன்வளர்
இலக்கியமாமணி
முனைவர்
மு.க.அன்வர்பாட்சா
தமிழாசிரியர் (பணி நிறைவு)
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





1 Comments
சிறப்பு...அருமையான பதிவு...உங்களுடைய அறப்பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDelete