
ஐபிஎல் 2027 சீசனுக்கு தற்போதில் இருந்தே வீரர்கள் டிரேடிங் தொடர்பான பேச்சுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட முக்கிய இந்திய வீரர்களை சுற்றி வெளியாகும் தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. தற்போது இந்த பட்டியலில் கே.எல். ராகுலும் இணைந்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், அவரை வேறு அணிக்கு மாற்றுவது தொடர்பாக மும்பை நிர்வாகம் பல அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கே ஹர்திக்கை வாங்குவதில் அதிக ஆர்வம் இருப்பதாக தெரிகிறது. அடுத்த சீசனுக்கு ஒரு அனுபவமிக்க இந்திய கேப்டன் தேவைப்படும் சூழலில், ஹர்திக் பாண்டியா அந்த அணிக்கு சரியான தேர்வாக இருப்பார் என கேகேஆர் நிர்வாகம் கருதுவதாக கூறப்படுகிறது.
ஆனால், ஹர்திக்கை கொடுப்பதற்கு மும்பை இந்தியன்ஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள்தான் பேச்சுவார்த்தையை சிக்கலாக்கியுள்ளதாக தெரிகிறது. ஹர்திக்கிற்கு மாற்றாக இரண்டு இளம் வீரர்களை மும்பை அணி கேட்டுள்ளதாகவும், இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான டிரேட் பேச்சில் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கே.எல்.ராகுலின் திடீர் முடிவு
இதற்கிடையே டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடி வரும் கே.எல்.ராகுலையும் டிரேடிங் மூலம் அனுப்புவதற்கான சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ரிஷப் பந்தை அணிக்குள் மீண்டும் டெல்லி அணி கொண்டு வந்துள்ளது. அவரை கேப்டனாக்கும் திட்டத்திலும் டெல்லி நிர்வாகம் உள்ளது. அப்படி அவரை கேப்டனாக்கி அவரது இடத்தை உறுதி செய்யும் நிலையில், ஏற்கனவே அணியில் இருக்கும் கே.எல். ராகுலின் இடம் கேள்விக்குறியாகும்.
இந்திய டி20 அணியில் மீண்டும் இடம்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் ராகுல், ஐபிஎல்லிலும் விக்கெட் கீப்பராக தொடர விரும்புவதாக கூறப்படுகிறது. டெல்லி அணியில் அந்த வாய்ப்பு கிடைக்காது என்பது உறுதியானால், டிரேடிங் மூலம் வேறு அணிக்கு செல்ல அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், இந்திய விக்கெட் கீப்பர் பேட்டரை தேடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கே.எல்.ராகுலுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒரே அணியில் ஹர்திக் - ராகுல்?
கேகேஆர் அணிக்கு தற்போது ஒரு இந்திய விக்கெட் கீப்பரும், அணியை வழிநடத்தக்கூடிய அனுபவமிக்க வீரரும் தேவைப்படுகிறது. இதனால் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் என இருவரையும் ஒரே நேரத்தில் அணிக்குள் கொண்டு வர அந்த நிர்வாகம் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இந்த டிரேட்கள் எதுவும் நிறைவேறவில்லை என்றால், இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே ஒன்றாக விளையாடும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. மும்பை இந்தியன்ஸுக்கும் டாப் ஆர்டரில் விளையாடக்கூடிய விக்கெட் கீப்பர் பேட்டர் ஒருவர் தேவைப்படுவதாக தெரிகிறது. 34 வயதாகும் கே.எல்.ராகுல், இன்னும் சில ஆண்டுகள் உயர்தர கிரிக்கெட்டில் விளையாடும் திறன் கொண்டவர் என்பதால், அவர் மும்பை அணிக்கு பொருத்தமான வீரராக இருக்கலாம்.
இதனால் கேகேஆர் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ராகுலை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பும் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதேபோல், ஹர்திக் பாண்டியாவையும் கேகேஆர் அணிக்கு மாற்ற முடியாத சூழல் ஏற்பட்டால், 2027 சீசனில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே தொடர வேண்டிய நிலை உருவாகலாம். குறிப்பாக, 2028 மெகா ஏலத்திற்கு முன்பாக அணி கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்பதால், அடுத்த சீசன் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதனால், தற்போதைய நிலவரப்படி ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அல்லது மும்பை இந்தியன்ஸ் அணிகளில் ஒன்றாக இணைந்து விளையாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments