Ticker

6/recent/ticker-posts

காஸாவை மீண்டும் கட்டியெழுப்பும் நிலப்பாட்டிலுள்ள அமெரிக்கா: மக்களை வெளியேற்றும் இஸ்ரேலிய திட்டத்தை முழுமையாக நிராகரிக்கின்றது!


எதிர்வரும் இஸ்ரேலியப் பொதுத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஏழு ஆண்டுகளில் காஸாவிலிருந்து 1.86 மில்லியன் பாலஸ்தீனர்களை வெளியேற்ற திட்டமிட்டிருப்பதாக 'ஒட்சுமா யெஹுதி'  கட்சியின் தலைவரான, இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடமார் பென்-க்வீர் கருத்து வெளியிட்டு வருகின்றார். 

பாலஸ்தீனிய மக்களை காஸாவிலிருந்து "சுயவிருப்ப இடப்பெயர்வு" என்ற பெயரில் வெளியேற்றுவது இத்திட்டத்தின் இலக்காகும்.

வெளியேறும் பாலஸ்தீனியர்களுக்கு வேலைவாய்ப்பு, விசா மற்றும் 24 மாத கால உதவிப்பணம் வழங்கப்படுவதற்காக திட்டம் தொடங்க முன்னர் சுமார் 10 பில்லியன் ஷெக்கெல்களை இஸ்ரேல் தனது முதலீடாக இட திட்டமிட்டிருப்பதோடு, சர்வதேச நாடுகளிடமிருந்து $15.6 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியையும் இஸ்ரேல் எதிர்பார்க்கின்றது. 
சர்வதேச நாடுகளிடையே கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் இத்திட்ட யோசனையை பகிரங்கமாக நிராகரித்து இதற்கு எதிராக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

 சர்வதேச மனிதநேயச் சட்டங்களின் கீழ், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வாழும் குடிமக்களை வலுக்கட்டாயமாக அல்லது மறைமுக நெருக்கடிகள் கொடுத்து இடம்பெயரச் செய்வது போர்க் குற்றமாகும்.

இத்திட்டம் நடைமுறைப்படுத்த படுத்தப் படுமேயானால்,  1948ம் ஆண்டு இஸ்ரேல் உருவானபோது லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் தாய்மண்ணை விட்டு விரட்டப்பட்ட 'நஜ்பா' பேரழிவை ஒத்ததாக இது இருக்கும் என பாலஸ்தீனிய மக்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி டிரம்பின் அமைதித் திட்டத்தின் 12வது விதியின்படி, "யாரும் காசாவை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட மாட்டார்கள்; வெளியேறியவர்கள் கூட மீண்டும் திரும்பி வருவதற்கு சுதந்திரம் உண்டு. காஸாவை மீண்டும் கட்டியெழுப்பவே நாங்கள் ஊக்குவிப்போம்" என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

பாலஸ்தீன  நிலத்தின் ஒட்டுமொத்த உரிமையும் பாலஸ்தீனர்களுக்கே உரியது என யூத மதகுருவான ரபி எல்ஹானான் பெக் (Rabbi Elhanan)பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்குத் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
 யூத மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் சீயோனிசத்தை எதிர்த்து வரும் இவர், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

செம்மைத்துளியான்.


 


Post a Comment

0 Comments