Ticker

6/recent/ticker-posts

ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க ஐக்கிய தேசியக்கட்சி முயற்சி


ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க ஐக்கிய தேசியக்கட்சி முயற்சி செய்து வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையைச் சுட்டிக்காட்டி அமைச்சர் இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ மீது குற்றஞ்சாட்டப்படுவதோ அல்லது அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவதோ ஒன்றும் புதிய விடயமல்ல என்பதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர்,

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்திலேயே அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எயார் பஸ் விமானக் கொள்வனவு விவகாரத்தில் 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவை நீதிமன்றமே விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

இந்தநிலையில், நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டதை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கை அந்தக் கட்சியின் தற்போதைய நிலையைத் தெளிவுபடுத்துகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியை உண்மையாக நேசிப்பவர்களும் அக்கட்சிக்காக நீண்டகாலம் உழைத்தவர்களும் கூட இந்த அறிக்கையைப் பார்த்து அதிர்ச்சியடைவார்கள் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

thinakaran


 


Post a Comment

0 Comments