Ticker

6/recent/ticker-posts

நேபாளத்தை உலுக்கிவரும் பெருவெள்ளமும், எல்நினோவை எதிர்கொள்ளப்போகும் இலங்கையின் மத்திய மலைநாடும்!


இறுதியாகக் கிடைத்த செய்திகளின்படி, நேபாளம்-சீன எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை சுமார் 900 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 4,500 பேர் மாயமாகியுள்ளதாக அறிய முடிகின்றது.

நேபாள - திபெத் எல்லைக்கருகிலுள்ள  'லாங்டாங் லிருங்' (Langtang Lirung) மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,200 மீற்றர் உயரத்திலிருந்து பனித்திட்டின் பெரிய பகுதி ஒன்று பாறைகளுடன்  கீழ் நோக்கி சரிந்த நிலையில், ஏற்பட்ட பேரழிவு முழு நேபாளத்தையும் துயரத்தில் ஆழ்த்தியது;  மழை மட்டுமே இதற்குக் காரணமல்ல என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சரிவு, 'லெந்தே கோலா'  (Lhende Khola) ஆற்றில் விழுந்து தற்காலிக அணையாக மாறி ஆற்றை அடைத்து, பின்னர் அது உடைந்து பனித்திட்டு, பாறைகள், மண் மற்றும் தண்ணீருடன் சேர்ந்து பெருவெள்ளமாகி, 'போடே கோஷி' (Bhote Koshi) மற்றும்  'ட்ரிசூலி' (Trishuli) ஆறுகளின் வழியாக சுமார் 100 கிலோமீற்றர் தூரத்திற்கு சீறிப்பாய்ந்தது.

தடுப்பு உடைந்தபோது தண்ணீர் மட்டும் கீழ் நோக்கி வரவில்லை; பனித்திட்டும் பாறைகளும் மண்ணும் மரங்களும் வந்துள்ளன; அதன் வழியில் இருந்த மனித வாழ்க்கையே இப்போது கேள்விக் குறியாகியுள்ளது.

அதன் பிறகு நெடுஞ்சாலைகள், பாலங்கள் இருந்த இடங்களிலிருந்த அவைகள் இல்லாமற் போயின. வீடுகள் இருந்த இடங்களில் சேறும் கற்களும் வந்து குவிந்தன.
இவ்வாறான பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமான பனித்திட்டினையும், அது சரிந்து விழுவதையும், சீனாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் 'ட்ரோன்' (drone) கேமரா மூலம் எடுத்த  புகைப்படம் ஒன்று இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

அந்தப் பதிவில், கடல் மட்டத்திலிருந்து 5,200 மீற்றருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள 'லாங்டாங் லிருங்' (Langtang Lirung) சிகரத்திற்கு அருகிலுள்ள பனித்திட்டு மற்றும் பாறை ஆகியவற்றின் பிரம்மாண்டமான பகுதிகள் உடைந்து விழுவது தத்ரூபமாகப்  பதிவாகியுள்ளது. குறிப்பிட்ட படத்தில்,  மலைப் பகுதியிலிருந்து பெரும் தூசுப் படலம் எழுவதையும் காண முடிகின்றது.

உடைந்து வந்த பனித்திட்டு சுமார் 600 மீற்றர் அகலம் கொண்டதாகவும், சுமார் 1.2 கிலோ மீற்றர் உயரத்திலிருந்து கீழே சரிந்ததாகவும் வேறொரு தகவலிலிருந்து அறிய முடிந்தது.

அதேநேரம், இந்தப் பேரிடர் "பனித்திட்டு சரிவு" காரணமாகவே ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS - United States Geological Survey) அறிவித்துள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்களின்படி, உடைந்து விழுந்த பனித்திட்டு, பள்ளத்தாக்கின் கீழ்ப்பகுதியில் மோதிய தாக்கம் மிக வலிமையாக இருந்ததால், அது 5.2 ரிக்டர் அளவிலான நில அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு பெரிய பனித்திட்டும், பாறைகளும் மலையிலிருந்து கீழே விழுந்தபோது, அது ஆற்றுப் பகுதிக்குள் புகுந்து தண்ணீர், மண், பாறைகள் அனைத்தையும் சேர்த்துக்கொண்டு வேகமாக கீழ்நோக்கிப் பாய்ந்து சில நிமிடங்களுக்குள் திடீர் வெள்ளமாக மாறி கீழிருந்த கிராமங்களை சிதைத்துள்ளது.

புவி வெப்பமயமாதல் காரணமாக இமயமலைப் பகுதிகள் இத்தகைய ஆபத்தின் விளிம்பில் இருப்பதாக அறிவியல் அமைப்புக்கள் ஏற்கனவே தொடர்ந்து எச்சரித்து வந்தன.

இமயமலை ஒரு மலைத்தொடர் மட்டுமல்ல; அது ஆசியாவின் மிகப்பெரிய நீர்த்தொட்டிகளில் ஒன்று.

அங்கிருந்து வரும் நீர் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையுடன் இணைந்திருக்கிறது.

அங்கே ஏற்படும் மிகப்பெரிய மாற்றங்கள் நேபாளத்தை மட்டும் பாதிக்காது.

இந்தியா, சீனா, பங்களாதேஷ் நாடுகள் வரை நீண்டு செல்லும்.

அதன் விளைவுகள் நீர்வளம், விவசாயம், மின்சாரம், குடியிருப்புகள் என பல துறைகளுக்குச் செல்லலாம்.

இலங்கை நேரடியாக இந்த வெள்ளத்தின் நீரோட்டப் பாதையில் இல்லை. ஆனாலும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளிலிருந்து இலங்கையும் தனிமைப்படுத்தப்பட்ட தீவு அல்ல!

தித்வா புயலின்போது இலங்கையின் மத்திய மலைநாட்டில் ஏற்பட்ட பேரழிவு நடந்து முடிந்த நிலைமையில், நேபாள பெருவெள்ளம் பற்றிய கவலையான செய்தி முழு உலகையும் உலுக்கியுள்ளது.

தித்வா புயலின்போது இலங்கையின் மத்திய மலைநாட்டில் ஏற்பட்ட பேரழிவு நேபாள அழிவை விடவும் அளவில் ஓரளவு சிறிதாக இருந்தாலும் கிட்டத்தட்ட நேபாள வெள்ளத்திற்கு ஒப்பானது என்றுதான் குறிப்பிட வேண்டும்.
இதன்போது கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு மேலுள்ள பகுதிகளில் பயங்கரமாக மழை பொழிந்த நிலையில் அதன் பொறியியலாளர்கள் தவிர்க்க முடியாத சில தீர்மானங்களை எடுத்ததாக நம்பப்படுகின்றது; அதுவே, கம்பளை, கெலிஓய நகரங்கள் நீரில் மூழ்கிக் காரணமாக அமைந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் பயங்கர மழை பொழியும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ள நிலமையில்,
கண்டி மாநகரை அண்டியுள்ள ஹந்தான மலைப்பகுதியில் 500 மில்லி மீற்றரைத் தாண்டி மழை பொழியுமேயானால் பெரும் பேரழிவு ஒன்று ஏற்படலாம் என சிலர் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

மறுபுறம் கொத்மலை நீர்தேக்கத்திற்கு மேலுள்ள பகுதிகளிலும் இவ்வாறான கடும் மழைபொழிந்தால் ஒரு பயங்கர பெருவெள்ளம் ஏற்படுவது தவிர்க்க முடியாதாக மாறுவதுடன், மலைச் சரிவுகள் காரணமாக அழிவுகள் ஏற்படுவதற்குரிய சாத்தியமும் மறுப்பதற்கில்லை என மேலும்  சமூக ஊடகங்கள் பதிவிட்டு வரும் நிலையில், மகாவலியை அண்டியுள்ள தாழ் நிலங்களில் வசிப்போர் தடுமாறிப் போயுள்ளனர்.

இதே நிலைதான் நுவரெலியா, நாவலப்பிட்டிய மற்றும் அதனை அண்டிய ஏனைய மத்திய மாகாணத்தின் முக்கிய இடங்களின் நிலைகளும் காணப்படுகின்றது. கடந்த 3ம் திகதி ஏற்பட்ட தொடர் மழையின்போது, நாவலப்பிட்டி, கம்பளை மற்றும் கெலிஓய ஆகிய இடங்களில் தாழ் நிலங்களில் வாழ்ந்த மக்கள் ஓரளவு அசௌகரியங்களை எதிர் கொண்டனர். மழைக்காலம் என்றாலே, மேலைநாட்டு மக்கள் பீதி கொள்ளும் நிலைக்கு காலநிலையில் இப்போது மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது.

இந்த விடயத்தில் அரசு கூடுதல் கவனம் எடுத்து சட்டத்துக்கு புறம்பான பாதுகாப்பற்ற கட்டிடங்களை முறையாக அகற்றுவதுடன், அவ்வாறான கட்டிடங்களை அமைப்பதையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்.
இவ்வாறான பிரதேசங்களில் வாழும் மக்களும் நல்ல பல தீர்மானங்களை எடுத்து தமது பாதுகாப்பை திடப்படுத்திக் கொள்வது காலத்தின் தேவையாகும்!

செம்மைத்துளியான்

 


Post a Comment

0 Comments