Ticker

6/recent/ticker-posts

60 தோட்டப்புறப் பாடசாலைகளில் ’ஸ்மார்ட்’ வகுப்பறைகள்


தோட்டப்புறப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், டிஜிட்டல் உபகரணங்களைப் பாதுகாப்பாகப் பேணுவதற்கும் இந்திய நிதியுதவியின் கீழ் 60 தோட்டப்புறப் பாடசாலைகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படவுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் (07) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி இராதாகிருஷ்ணன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரமர் மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டில் ஆறு மாகாணங்களிலுள்ள 849 தோட்டப்புறப் பாடசாலைகளில், தற்போது மூன்று பாடசாலைகளுக்கு மாத்திரமே மின்சார வசதி இல்லை. அவற்றுள் இரண்டு பாடசாலைகளுக்குப் புதிய கட்டடங்களை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய பாடசாலை தற்காலிகக் கட்டடமொன்றிலேயே நடத்தப்பட்டு வருகிறது.

டிஜிட்டல் உபகரணங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கும், உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் இந்திய நிதியுதவியின் கீழ் 60 தோட்டப்புறப் பாடசாலைகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகளை அமைப்பதற்கும், அவற்றைப் புனரமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளது. இது தவிர, மேலும் 75 தோட்டப்புறப் பாடசாலைகளின் கட்டடங்களைப் புனரமைப்பதற்கு 101 மில்லியன் ரூபாவும், புதிய கட்டடங்களை அமைப்பதற்கு நடப்பாண்டில் 500 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆரம்பத்திலிருந்த 864 தோட்டப்புறப் பாடசாலைகளில் 711 பாடசாலைகளுக்கு இணைய வசதி இருக்கவில்லை. அவற்றுள் 446 பாடசாலைகளுக்கு இணைய வசதியை வழங்கும் பணி ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவும், பிரதமர் அலுவலகத்தின் டிஜிட்டல் கல்விச் செயலணியும் இணைந்து, 2026 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதியை வழங்கி முடிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்த டிஜிட்டல் சாதனங்களைப் பராமரிப்பதற்காகக் கேகாலை வலயத்திற்கு 860,000 ரூபாவும், தெஹியோவிட்ட வலயத்திற்கு 400,500 ரூபாவும் உட்பட, சம்பந்தப்பட்ட மாகாணங்களுக்கு 1,903,368 ரூபா ஒதுக்கப்பப்பட்டுள்ளது. அதேபோன்று, தமிழ்மொழி மூல ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட பயிற்சித் திட்டங்களின் கீழ், தோட்டப்புறப் பாடசாலைகளின் 376 ஆசிரியர்களுக்கும், வட மாகாணத்தில் 214 ஆசிரியர்களுக்கும், கிழக்கு மாகாணத்தில் 223 ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கி முடிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரியை அபிவிருத்தி செய்வதற்காக 2026ஆம் ஆண்டுக்கு 71,129,848 ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதுடன், அடுத்த ஐந்து வருடங்களுக்குள் திட்டத்தைப் பூர்த்தி செய்வதற்கு 1,520 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டமொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாணவர் விடுதிகள், ஆசிரியர் விடுதிகள் மற்றும் ஓய்வறைகளைப் புனரமைப்பதற்கும் பெருந்தொகை நிதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, செயற்கை நுண்ணறிவு பாடத்தைப் பாடசாலைக் கல்வியில் இணைப்பதற்கும், கூகுள் வகுப்பறை மற்றும் தொகுதி ஊடாகக் கற்றல் முகாமைத்துவ முறைமைகளின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கும், அனைத்துக் கல்வியியல் கல்லூரிகளுக்கும் வை-ஃபை (Wi-Fi) உள்ளிட்ட அதிவேக இணைய வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என்றார். 

tamilmirror


 


Post a Comment

0 Comments