Ticker

6/recent/ticker-posts

வெப்பம், மழை, காற்று! தீவிரமடையப்போகும் 'எல்-நினோ'வின் தாக்கம்!


ஸ்பானிய மொழியில் 'சிறுவன்' அல்லது 'குழந்தை யேசு' என்று பொருள்படும், எல்-நினோ (El Niño) என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட அதிகமாக வெப்பமடையும் ஓர் இயற்கை காலநிலை நிகழ்வாகும்.

'பெரு' நாட்டு மீனவர்கள் கிறிஸ்துமஸ் காலங்களில் கடல் நீர் வெப்பமாவதை அவதானித்த ஒரு நிகழ்வினாலேயே இப்பெயர் உண்டானதாகக் கூறப்படுகினாறது.

பூமத்திய ரேகை பகுதியில் வழக்கமாக வீசும் காற்றானது பலவீனமடைவதனால் ஆசியப் பகுதிக்குச் செல்ல வேண்டிய வெதுவெதுப்பான நீர் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் தங்கி அப்பகுதியை வெப்பமாக்குகின்ற நிகழ்வானது, ஒவ்வொரு 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒழுங்கற்ற முறையில் தோன்றி, 9 முதல் 18 மாதங்கள் வரை நீடிப்பதையே 'எல்-நினோ' என்று காலநிலை ஆய்வாளர் குறிப்பிடுவர்.

இந்த சீரற்ற வானிலை காரணமாகவே உலகின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி, அதிக வெப்பநிலை அல்லது தீவிர மழை வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்றன ஏற்படுகின்றன.

பெருங்கடலின் வெப்ப நிலை மாறுதலால் மீன்வளம் பாதிக்கப்படுவதோடு, இன்னும் சில பகுதிகளில் பயிர்ச்சேதம் ஏற்பட்டு,உணவுப் பற்றாக்குறையும் உண்டாகின்றது.

எதிர்வரும் காலங்களில் தீவிரமடைந்து வரலாம் என எதிர்பார்க்கப்படும் 'எல் நினோ' காலநிலை மாற்றத்தால் 4.5 மில்லியன் மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும், அடுத்துவரும் ஆறு மாதங்களில் வழக்கத்திற்கு மாறாக ஏற்படப் போகும் அதிக வெப்பம் இதற்கு முக்கிய காரணமாக இருக்கப் போவதாகவும் புதிய ஆய்வு அறிக்கையொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

​போதிய உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லாத வறிய மற்றும் வளர்ந்துவரும் நாடுகளிலேயே இந்த உயிரிழப்புகள் அதிகம் ஏற்படப் போவதாகவும், இவ்வாறு பாதிக்கப்போகும் நாடுகளுள் இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா, பிரேசில் போன்றன முன்னணி வகிப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பசிபிக் சமுத்திரத்தில் வலுவடைந்து வரும் ‘எல் நினோ’வின் தாக்கமானது வங்காள விரிகுடா வளிமண்டல மாற்றங்கள் காரணமாக, இலங்கை முழுவதும் தீவிர வானிலை மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடும் என இன்னொரு எச்சரிக்கை செய்தியும் வெளியாகியுள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு இலங்கையின்  தென்மேற்குப் பகுதிகளில் தொடர் மழையும், வறண்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய ஆபத்தான மழையும் கணிசமாக அதிகரிக்கலாம் என்று கூறப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா போன்ற பகுதிகளில் இடைக்கிடையே பலத்த மழையும், மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்யலாம் என்று எதிர்வு கூறப்படுகின்றது.

காங்கேசன்துறை முதல் புத்தளம் வரையிலும், மாத்தறை முதல் பொத்துவில் வரையிலும் காற்றின் வேகம் மணிக்கு 50 - 55 கி.மீ. வரை பலமாக வீசக்கூடும்; சிலாபம் முதல் பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் அலைகள் 3 மீற்றர்கள் வரை உயரலாம் எனவும், பேருவளை முதல் மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளில் கடல் அலைகள் கரையை நோக்கி தீவிரமாக மேலெழும்பும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனால், இலங்கையின் கரையோரப் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்!

செம்மைத்துளியான்.

 


Post a Comment

0 Comments