Ticker

6/recent/ticker-posts

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதம் ஒத்திவைப்பு


சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்கட்சி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த பிரேரணையில் உள்ள சில தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து சட்டமா அதிபரின் கருத்து பெறப்பட வேண்டியுள்ளதாலே, காலவரையறையின்றி விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையிலுள்ள பல அம்சங்களுக்கு விளக்கம் தேவைப்படுவதாகவும்,இது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் அரசாங்கப் பிரதிநிதிகள்,பாராளுமன்ற அலுவல்கள் குழுவின் கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.சட்டமா அதிபரின் கருத்தைப் பெறுவதற்கு காலம் செல்லும் என்பதால், அடுத்த பாராளுமன்ற வாரத்தில் இந்த விவாதத்தை நிகழ்ச்சி நிரலில் சேர்க்க முடியாமலாகியுள்ளது. எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க தெரிவிக்கையில், சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்த பின்னர் விவாதத்திற்கான திகதி தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், பாராளுமன்றம் நாளை 20 முதல் 23 வரை கூடும் என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர அறிவித்துள்ளார்.பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலிஹ் தலைமையில் வெள்ளிக்கிழமை (16) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழு கூட்டத்தில், இந்த வாரத்திற்கான பாராளுமன்ற நடவடிக்கைகள் இறுதி செய்யப்பட்டன.

ஒவ்வொரு அமர்வு நாளிலும், காலை 9.30 மணி முதல் 10 மணி வரை, நிலையியல் கட்டளை 22-இன் கீழ் உள்ள 01 முதல் 06 வரையிலான விடயங்களுக்காக நேரம் ஒதுக்கப்படும். காலை 10 மணி முதல் 11 மணி வரை வாய்மூல வினாக்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, காலை 11 மணி முதல் 11.30 மணி வரை நிலையியல் கட்டளை 27(2)-இன் கீழ் வினாக்கள் எழுப்பப்படலாம். நாளை (20) செவ்வாய்க்கிழமையன்று, எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். இம்மாதம் (21) புதன்கிழமையன்று, பொதுக் கடன் முகாமைத்துவச் சட்டத்தின் கீழான தீர்மானம் மற்றும் மேலதிக மதிப்பீடு ஆகியவை காலை 11.30 மணி முதல் மாலை 5 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து, ஐந்து சட்டப்பூர்வ நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள் விவாதமின்றி அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிக்கப்படும். மாலை 5 மணி முதல் ஒத்திவைப்பு நேரத்திலான வினாக்கள் எடுத்துக்கொள்ளப்படும். அக்டோபர் 22, வியாழக்கிழமை அன்று, ‘நச்சுப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான போதைப்பொருட்கள் கட்டளைச் சட்டத்தை’ திருத்துவதற்கான இரண்டு பிரேரணைகள் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதங்கள், முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். அதன்பிறகு, ஐந்து சட்டப்பூர்வ நிறுவனங்களின் வருடாந்திர அறிக்கைகள் விவாதமின்றி அங்கீகாரத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும். அதனைத் தொடர்ந்து, மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் நடைபெறும்.

அக்டோபர் 23, வெள்ளிக்கிழமை அன்று, ‘வெறிநாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவு செய்தல்’ தொடர்பான பிரேரணை மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம், முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். அன்றைய அமர்வின் கடைசி அரை மணி நேரத்தில், அரசாங்கம் முன்வைக்கும் ஒத்திவைப்புத் தீர்மானம் குறித்து விவாதிக்கப்படும்.

thinakaran


 


Post a Comment

0 Comments