
ஆர்யவீர் சேவாக் பவுண்டரிகளின் மூலமாக 24 பந்துகளில் 110 ரன்கள் சேர்த்து இமலாய அதிரடியை வெளிப்படுத்தி உள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் முன்னாள் வீரர் சேவாக்கின் மகன் ஆர்யவீர் அதிரடியாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சேவாக் விட்டுச் சென்ற இடத்தைப் அவரது மகன் பிடிப்பாரா? என்ற ஆவல் எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போனவர் வீரேந்திர சேவாக். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளிலும் தனது அதிரடியான ஆட்டத்தால் ரசிகர்களைக் கவர்ந்தவர். 2000 காலகட்டத்திலே டி20 பாணி ஆட்டத்தை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடியவர்.
2004-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 309 ரன்கள் விளாசி, டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் இந்த 'முல்தான் கா சுல்தான்'. மீண்டும் 2008-ல் சென்னையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 319 ரன்கள் விளாசியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முச்சதங்கள் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனைையும் படைத்துள்ளார்.
தனது அதிரடி ஸ்டிரைக் ரேட் பேட்டிங் மூலம் ஆட்டத்தின் போக்கையே சில நிமிடங்களில் மாற்றி எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த சேவாக்கின் வாரிசும் தந்தயைப் போலவே உருவெடுத்து வருகிறார். அதிரடி பேட்டிங்கில் ஆர்வம் கொண்ட ஆர்யவீர், 2024ஆம் ஆண்டு கூச் பிஹார் கோப்பை (cooch behar trophy) தொடரில் மேகாலயா அணிக்கு எதிராக 297 ரன்கள் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து உள்ளூர் இளையோர் கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது இதயத்தில் இடம் பிடித்த ஆர்யவீர், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தார். தற்போது ஓமனில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை 2026 தொடரிலும் தொடர்ந்து கலக்கி வருகிறார்.
நேபாளத்திற்கு எதிரான முதல் போட்டியில் 52 பந்துகளில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 70 ரன்களை குவித்தார். 129 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்க வீரர் ஆர்யவீர் அதிரடி தொடக்கம் கொடுத்ததுடன் அதிரடி அரைசதம் விளாசி அனைவரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமல்லாமல் இந்தியா வெற்றி பெற வழி வகுத்தார்.
ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டியில் சோபிக்காவிடினும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 17 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் அதிரடியாக 160 ரன்கள் சேர்த்து சேவாக்கின் வாரிசு என கிரிக்கெட் உலகிற்கு ஓங்கி உரைத்தார் ஆர்யவீர். அதாவது ஆர்யவீர் சேவாக் பவுண்டரிகளின் மூலமாக 24 பந்துகளில் 110 ரன்கள் சேர்த்து இமலாய அதிரடியை வெளிப்படுத்தி உள்ளார். அப்போட்டியில் முதல் 14 பந்துகளுக்குப் பிறகே தனது முதல் ரன்னை எடுத்த ஆர்யவீர், அதன் பிறகு பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார்.
அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 56 பந்துகளில் அரைசதம் கடந்து அன்டர் நைன்டீன் ஆடவர் ஆசியக் கோப்பையில் மீண்டும் அசத்தினார். நடந்து முடிந்த 4 இன்னிங்ஸ்களும் அவரது பேட்டிங் திறனையும், நீண்ட நேரம் களத்தில் நிலைத்து நின்று விளையாடும் தன்மையையும் காட்டியுள்ளது. தந்தை வீரேந்திர சேவாக் சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்தால் பல சாதனைகளைப் படைத்தவர். அதே பாதையில் மகன் ஆர்யவீரும் தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்.
வீரேந்திர சேவாக்கைப் போலவே ஆர்யவீரும் பவர்பிளே ஓவர்களில் பந்துவீச்சாளர்களின் உத்தியை குலைக்கும் வகையில் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசுகிறார். ஆர்யவீர் அதிரடியாக ஆடினாலும், சூழ்நிலைக்கு ஏற்ப பொறுமையையும் கடைப்பிடித்து நீண்ட இன்னிங்ஸ்களைக் கட்டமைக்கிறார். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பதுபோல் ஆர்யவீர் சேவாக்கும் எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுக்கும் பாதையில் பயணிப்பதாக சேவாக்கின் ரசிகர்கள் அகமகிழ்ந்துள்ளனர்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments