
சவூதி அரேபிய நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட அனோஜன் சிவராசாவுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டாம் என சவூதி அரேபியாவின் அரசுத் தரப்பு வழக்குத் தொடுநர் அலுவலகம் தீர்மானித்துள்ளதாகவும், அவரை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவதூறானதாகக் கருதப்படும் Facebook பதிவு தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 2026 செப்டெம்பர் 17ஆம் திகதி சவூதி அரேபியாவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதித்திருந்தது.
எனினும், இராஜதந்திர மற்றும் ஏனைய தலையீடுகளின் அடிப்படையில், கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் இரத்துச் செய்தது. தொடர்ந்து, அவருக்கு விதிக்கப்பட்ட ஏனைய தண்டனைகளிலிருந்தும் விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளின் விளைவாக தற்போது அவர் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளின்போது, ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரின் ஆலோசனைகளுக்கு அமைய, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா ஆகிய இருவரும் நேரடியாகத் தலையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அனோஜன் சிவராசாவின் குடும்ப உறவினர்கள் இன்று வெளிவிவகார அமைச்சுக்கு வருகை தந்து, தமது மகனை விடுவிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட, இந்த நடவடிக்கையில் தொடர்புபட்ட அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சரியான வழிகாட்டல், அமைச்சர் விஜித ஹேரத்தின் இராஜதந்திரத் தலையீடு மற்றும் ஏனைய இராஜதந்திர முயற்சிகளின் ஊடாகவே அனோஜன் சிவராசாவை விடுதலை செய்ய முடிந்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இதற்காகத் தலையிட்ட சவூதி அரேபிய அரசாங்கம், அந்நாட்டு நீதிமன்றம், சவூதி மற்றும் இலங்கையின் இராஜதந்திர நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள், அத்துடன் இதற்காக சவூதி அரேபியாவுக்குச் சென்ற சட்டத்தரணிகள் குழுவினர் ஆகியோருக்கும் இந்த விடுதலைக்கான பெருமை உரித்தாகும் என்றும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments