
2012ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. தொடக்க விழாவின்போது ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அறபு, ஸ்பானிய, உருது மற்றும் அவுஸ்திரேலிய மொழிகள் உட்பட பல மொழிகளில் அரங்கேற்றப்பட்டதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள்!
வில்லியம் ஷேக்ஸ்பியர் 26.04.1564ல் இங்கிலாந்திலுள்ள “ஸ்ட்ராட்போட்” என்ற இடத்தில் பிறந்தார். அவர் பிறந்த காலத்தில் அவ்வூரில் 200 குடும்பங்களில் சுமார் 1500 பேர் வாழ்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
அக்காலை அவரது தந்தை ஜோன் ஷேக்ஸ்பியர் கையுறைத் தொழிற்சாலையொன்றை நடாத்தி வந்தார். அன்னையின் பெயர் மேரி அன்ட்ரூ.
ஷேக்ஸ்பியர் 1582ம் ஆண்டு தனது 18வது வயதில் தன்னை விட எட்டு வயது அதிகமான “அன்னே ஹதாவே” என்ற மங்கைகைய மணந்தார். இவர்களது முதற்குழந்தை சுசானா 1583ல் பிறந்தார். அடுத்து மகன் ஹம்னட், மகள் ஜூடித் என்ற இரட்டையர்களும் 1585ல் பிறந்தனர். மகன் ஹம்னட் தனது எட்டாவது வயதில் மரணத்தைத் தழுவிக் கொண்டார்.
ஷேக்ஸ்பியரின் கலைத்துறையின் ஆரம்பம் அவரது இருபது வயதிலாகும். சொந்த ஊர் ஸ்ட்ராட்போட்டாக இருந்த போதிலும் ஷேக்ஸ்பியர் தமது அதிக காலத்தை லண்டனிலேயே கழித்துள்ளார்.
அவர் லண்டனில் வாழ்ந்தபோது ஏற்பட்ட காதல் விவகாரம் தொடர்பான ஹாலிவூட் திரைப்படமொன்று "ஷேக்ஸ்பியர் இன் லவ்" என்ற பெயரில் வெளியாகி, ஏழு ஆஸ்கார் பரிசில்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது இறுதிக்காலத்தில் அவர் தன் சொந்த ஊரிலேயே வாழ்ந்துள்ளதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஆங்கிலக் கலை - இலக்கியத்திற்கு கவிதைகள், நாடகங்கள் போன்ற பல்வேறுபட்ட துறைகளின் மூலம் தொண்டாற்றியுள்ள இவர், இங்கிலாந்தின் தேசியக் கவிஞராக மதிக்கப்படுகின்றார்.
இவரது முதலாவது ஆக்கம் 1592ல் வெளியானது. இவர் ஹெம்லட், ஜூலியஸ்ஸீஸர், ரோமியோ ஜூலியட், மெகாபட் ஆண்டனீ அன்ட் கிளியோபாட்ரா, ஓதெல்லோ போன்ற 38 நாடகங்களையும், "சொன்னட் வீனஸ் அண்ட் அடோனிஸ்" போன்ற கவிதைகளையும் உருவாக்கியுள்ளார். ஷேக்ஸ்பியரின் ஆக்கங்கள் காலத்தால் அழியாதவைகளாகும்.
ஷேக்ஸ்பியரின் ஓதெல்லோ, ரோமியோ ஜுலியட் போன்ற நாடகங்கள் காதல் காவியங்களாகும். இரண்டு நாடகங்களிலும் காதலர்கள் இறந்து விடுகின்றனர்.
ஓதெல்லோ நாடகத்தின் கதை வெனிஸ் நகரத்தையும், சைப்பிரஸ் தீவையும் சுற்றி நடக்கின்றது. இவரது நாடகங்களில் பெரியது “ஓதெல்லோ”. சிறியது “த கொமெடி ஒப் எர்ரர்”.
ஷேக்ஸ்பியர் நாடக எழுத்தாளராக மட்டுமன்றி நடிகராகவும் அக்காலத்தில் புகழ் பெற்றமையால், விரைவில் பணக்காரரானார். 1597ல் ஸ்ட்ராபோட்டில் பிரமாண்டமாதொரு அழகிய வீட்டின் சொந்தக்காரரானார்.
1599ல் “குலோப் தியேட்டர்” திறந்தவெளி நாடக அரங்கின் உரிமையாளரானார். 1616, ஏப்ரில் 23ம் திகதி மரணமான இவரது சடலம் ஸ்ட்ராபோட்டிலுள்ள புனித திருத்துவ ஆலயத்தில் அடக்கப்பட்டுள்ளது.
“ஷேக்ஸ்பியர்” என்ற பெயரில் ஆக்கங்களை உருவாக்கியவர்கள் என்று காலத்திற்குக் காலம் பலர் உருவெடுத்துள்ளனர். கிறிஸ்தோபர் மார்லோவி, எட்வட் வெரேக், வில்லியம் ஸ்டேன்லி, மேரி ஸிட்னி, றோஜர் மேர்னஸ் என்போர் அவர்களிற் சிலர்.
“வில்லியம் ஷேக்ஸ்பியர்“ என்ற பெயரில் "அமெலியா பஸ்ஸானோ லேனியர்" என்ற பெண்மணியே ஆக்கங்களை உருவாக்கியுள்ளதாக அண்மைக்காலத்தில் "ஜோன் ஹட்சன்" என்ற ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார். ஹட்சனின் இக்கூற்று இலக்கிய உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அமெலியாவின் படைப்புக்கள் ஷேக்ஸ்பியரின் படைப்புக்களை ஒத்ததாக அமைந்திருப்பதும், அமெலியா தனது படைப்புக்களில் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளும் கவிதை ஆக்கங்களும் பெரும்பாலும் ஷேக்ஸ்பியரின் ஆக்கங்களுக்கு மிகப் பொருத்தமானதாக அமைந்திருப்பதுவுமே ஹட்சனின் இந்த முடிவுக்குக் காரணமாகும்.
அமெலியா வாழ்ந்த காலத்தில் பெண்கள் கவிதைகள் உள்ளிட்ட ஆக்கங்களை உருவாக்குவது அனுமதிக்கப்படாமையே அமெலியா தனது சொந்தப் பெயரை உபயோகிக்காமல் “ஷேக்ஸ்பியர்” என்ற பெயரில் ஆக்கங்களை உருவாக்கியிருக்கலாம் என்று ஹட்சன் கருதுகின்றார்.
பல பல்கலைக் கழகங்களில் பல்வேறு பட்டங்கள் பெற்றவரான ஹட்சன், ஷேக்ஸ்பியரின் படைப்புக்கள் பற்றி விரிவாக ஆராய்ந்தவராவார்.
அமெலியா பஸானோ லேனியர் (Amelia Bassano Lanier) 1570ல் பிறந்து 1654ல் மரணமானார். இவர் வெனிஸ் நகரிலிருந்து லண்டனுக்கு வந்து குடியேறிய இத்தாலிய யூதக்குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.
அமெலியா 1611ம் ஆண்டில் முதன் முதலாக எழுதிய கவிதைத் தொகுதி சால்வே டியூஸ் ரெஸ் ஜுடாரியம் என்பதாகும். ஒரு பெண்ணால் எழுதப்பட்டு நூலுருவில் வெளியான முதல் கவிதைத் தொகுதியும் இதுவாகும்.
ஐ.ஏ. ஸத்தார்



0 Comments