“கொடுப்பனவு!”

“கொடுப்பனவு!”


நீண்ட நேரமாக என் பார்வை  அந்த மனோரம்மியமான காட்சியிலேயே இலயித்திருந்தது.

நான் மேலும் ஒரு முறை அந்த ஜன்னல் வழியாக என் பார்வையைச் செலுத்துகின்றேன்.
 
பருவத்தால் பூத்துக் குலுங்கும்  மங்கையானவள், ஒரு குழந்தையை முத்தமிடுகின்றாள்.
 
ஒரு தாயானவள் தன் குழந்தையை முத்தமிட்டுக் கொண்டிருந்தால்,
அதில் ரசிப்பதற்கு எதுவுமே இருந்திருக்க முடியாது.
ஏன்?  அவள் ஒரு தாயல்லவா?  குழந்தை மீது வைத்திருக்கும்
தாய்மையுணர்வை முத்தத்தின்  மூலந்தானே வெளிக்காட்ட முடியும்?

ஆனால், தாய்மையே ஆகாத பருவ மங்கை  குழந்தையொன்றை  மாறி மாறி முத்தமிடுவதை  என்னென்பது?

இயற்கையிலேயே அவளுக்கிருக்கும் தாய்மையுணர்வை வெளிக்காட்டுகின்றது என்பதா? அல்லது பொங்கி வழிந்து கொண்டிருக்கும்  பருவத்தின் துடிப்பை, உணர்ச்சிகளின் கொந்தளிப்பை  வெளிப்படுத்துகிறாள் என்பதா?

எதையுமே  எடைபோட்டுக் கொள்ள முடியாத ஒரு நிலை. மீண்டும் ஒருமுறை அந்த ஜன்னல் வழியே  பார்வையைச் செலுத்துகின்றேன்.
பச்சைப் பசேலென்ற புற்றரையிலே அவள் அமர்ந்திருப்பதே அலாதியான அழகைத் தருகின்றது! தனது நீண்ட பாவாடையை ஒருமுறை இழுத்து உள்ளங்கால் தவிர்ந்த ஏனைய பகுதிகளை முற்றுமுழுதாக  மூடிக் கொள்கின்றாள். ரோஜாப்பூ நிறத்திலான அவளது முந்தானை சரிந்து விடத் துடிக்கின்றது!
 
தனது கரங்களுக்குள்  அகப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த மழலையின்செந்நிற இதழ்களில் அவள் தொடர்ந்து முத்தமிடுவதும், இடைக்கிடையே அவளது பார்வை தன்னைச்சுற்றி வட்டமிடுவதுமாக இருந்தது!

அவளிருக்குமிடத்திலிருந்து  சுமார் பத்தடி தூரத்திலுள்ள மேட்டு நிலத்தில்  அயலவர்கள் சிலர் வரிசையாக உட்பார்ந்து ஒருவர் தலையை ஒருவர் கோதிக் கொண்டிருந்தனர்.
 
பலமுறை மழலைச் செல்வத்தின் செந்நிறக் கன்னத்தில்  முத்தம் பொழிந்ததன் காரணமாகவோ என்னவோ அவளது தடித்த உதடுகள் சிவந்து போயிருந்தன.

சரிந்து கிடந்த முந்தானையை இழுத்து மாரை மூடிக்கொண்டவள், கலைந்து கிடந்த கருங்கூந்தலை ஒருமுறை கோதிவிட்டுக் கொள்கின்றாள்!
 
இன்று நேற்றல்ல, இற்றைக்குப் பதினேழு  ஆண்டுகளுக்கு முன்பிருந்தேஅவளை எனக்குத் தெரியும். அப்போதிருந்தே அவள் எதிர்வீட்டில் குடியிருக்கின்றாள்.
 
அவளது தாய், தந்தையர் தவிர வேறு உறவுகள் அவளுக்கில்லை. அவள் கொஞ்சிக் குழாவிக் கொண்டிருக்கும் குழந்தை கூட அடுத்த வீட்டாரினதே!

“முனீரா, இங்க வாயேன். வந்து இந்தக் காகிதம் எங்கீந்து வந்தீக்கிதுன்னு பாரேன்!”

அவளது வீட்டுக்குள்ளிருந்து வந்த தாயின் குரலை அவள் அசட்டை செய்கின்றாள்.
 
குழந்தை தன் பிஞ்சு முரசுகளைக் காட்டி கலகலப்பாகச் சிரித்தவாறே, தன் பிஞ்சுக் கால்களால் அவள் மார்பை உதைக்கின்றது.  அந்த உந்தல் காரணமாகவோ என்னவோ கலகலப்பாகச் சிரிக்கும்  குழந்தையோடு சேர்ந்து அவளும் எக்காளமிட்டுச் சிரிக்கின்றாள்!
 
மீண்டும் அவளது தாயின் அதே குரல், இப்போது சிறிது கண்டிப்புக் கலந்ததாக ஒலிக்கின்றது! தாயின் குரல் அப்பொழுதுதான் அவள் காதுகளில் விழுந்தது போன்று, குழந்தையை இடுப்பில் சொருவிக் கொண்டு வீட்டுக்குள் நுழைகின்றாள்.
 
அவள் வீட்டுக்கு சென்றதைக்  கூட அறியாமல் நான் மெய்மறந்து தொடர்ந்தும்  ஜன்னலினூடாக என் கண்களை ஓட்டிக்கொண்டிருக்கின்றேன்.
 
திடீரெனத் திடுக்கிட்டு உணர்வுக்கு வந்தவன், அவள் அங்கில்லாதது கண்டு திகைத்துப் போகின்றேன்! ஆனால் என் நெஞ்சத்தை நெருடிச் சென்ற அவள் நினைவுகள் என்னுள் நிழலாடுகின்றது!
நான் அப்படியே எழுந்துபோய் கட்டிலில் வீழ்ந்து தலையணையில் சாய்கின்றேன்.
 
என் கடந்த கால நினைவுகளில் அவள் சம்பந்தப்பட்டவை என் மனத்திரையில் வந்து போய்க்கொண்டிருக்கின்றன.

000000

அப்பொழுது எனக்கு வயது ஆறாயிருக்கலாம்.  நான் பாடசாலைக்குப் போய்க் கொண்டிருக்கும் காலமது. அக்காலத்தில் என் வீட்டுக்கு முன்னாலிருந்த குடிசை வீட்டில் குடியேறுகின்றது ஒரு குடும்பம்.
 
இப்பொழுதுபோல் அற்றைக்கு என் வீட்டுக்கு முன்னால் போக்குவரத்துக்கேற்ற பாதையிருக்கவில்லை. வெறும் செம்மண் பாதை.  மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக இருக்கும்.  சேற்றுக்குள் ஒவ்வொரு அடியடியாக வைத்து, பாடசாலைக்குச் செல்வதென்பது மிகவும் கஷ்டமாகவிருக்கும். பாடசாலை போகின்றபோது பலமுறை வழுக்கி விழுந்தது எழுந்து சென்ற அனுபவங்கள் பல!

அந்தப் பாதைக்கு தார் போட்டு சீர்செய்ய எங்கிருந்தோ தொழிலாளர் கூட்டமொன்று வந்து சேர்ந்தது. எங்கள் வீட்டுக் முன்னாலிருந்த குடிசையில் குடியேறியவர் முத்துவாப்பா. அந்தப் பாதை செப்பனிடுவதற்கு அவரே ஓவசியராக இருந்தார்.

நாங்கள் எல்லோரும் சிறுவயதிலிருந்தே அவரோடு அன்பாகப் பழகுவோம்.  “முத்து வாப்பா….முத்துவாப்பா…” என்று
நானும் தம்பியும் அவரையே சுற்றி வருவோம்.  அவரும் தன் ஒரே குழந்தையுடன் வைத்திருக்கும் அன்பையே எம்மிடமும் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார்.
 
முத்து வாப்பா வேலைக்குச் சென்று திரும்பும்போது, மாம்பழம், கொய்யாப்பழம், ஜம்புப்பழம், வெரலிப்பழம்… இப்படி என்னென்னவோ தன் மகளுக்குக் கொண்டு வருவதில் எனக்கும் தம்பிக்கும் பகிர்ந்து தருவார்.
 
காலம் கடந்து கொண்டிருந்தது. எங்கள் வயது நகர்ந்து கொண்டிருந்ததன.

நான் கொழும்பு போகும்வரை முனீராவும் நானும் இணை பிரியாதவர்களாகப் பழகிக் கொண்டிருந்தோம். வகுப்பில் ஆசிரியர்கள் தரும் வீட்டு  வேலைகளை  ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக செய்து முடிப்போம்.
 
நான் அவளுக்கு முன்னரே எனது பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு,வாப்பாவுக்குதவியாக கொழும்புக்குச் சென்றுவிட்டேன்.

00000

சரியாக மணி ஐந்து அடிக்க… நான் எனது கபினை விட்டும் வெளியேறினேன்.

மொபைல் அலறியது “ஹலோ….” நான் கேட்டேன்.
“நான்தான்…. வாப்பா பேசுறேண்டா…?”
“….”
“அங்க … இங்க… சுணங்கிக் கொள்ளாம இப்பவே ஊருக்கு வா… நாளைக்கு உனக்குக் கலியாணம் பேசி வாராங்க…”

“….”நான் எதுவும் பேசவில்லை.

எனது மௌனத்தைக் கலைக்க மீண்டும்  வாப்பாவே பேசினார்.
“நீ இப்பவே புறப்பட்டு வா…. உனது உம்மாவின் நச்சரிப்புத் தாங்கலைடா… அவட மண்டயில எதையோ போட்டுக் கொண்டு, உனது கல்யாணப் பேச்சில பதட்டப்படுறா.”

“இந்த ராவுல….. மழ வேற பேயுது வாப்பா…எனக்கு ஊருக்கு வர ஏலாது…!”

“சரிடா…. கார்லதானே வாறே…. பயப்படாம மெதுவா வந்து சேர்….”
வாப்பா போனைக் ‘கட்’ பண்ணிவிட்டார்…!

மறுபடி ‘மொபைல்’ அலறியது.

“ஹலோ…!”

“எங்கடா… நீ…. போய்த் தொலஞ்சே…?  ஓனக்கொரு  நல்ல நியூஸ்டா…. ஓனக்கு கலியாணம் பேசி வாராங்க…” உம்மா பேசினார்!

“….” நான் பேசவில்லை.

“ஆமாடா….. முன்னூட்டு முனீராவடா….. இப்பவே புறப்பட்டு வா…..!
என்னடா என் பாட்டுக்கு பேசிக்கொண்டிருக்கிறேன். நீ ஒண்டும் பேசிறாயில்ல….! எனக்கெண்டா றொம்ப புடிச்சிருக்குடா… அவள எப்படியும் என் மருமகளாக்கிப் பார்க்கணுமுன்னு ஆசைடா….
ஒண்ட வாப்பா முரண்டு புடிக்கிறார்டா…. நான் விடல்ல…மகனே வரட்டும்…. பேசிக்கலாம்… என்று கூறி வச்சிருக்கிறன்…
ஒனக்கு முனீராவ புடிச்சிருக்குதானே!  உனக்கு விருப்பம்தானேடா?”
உம்மா மூச்சுவிடாமல் பேசி முடித்தாள்.

உம்மாவும் வாப்பாவும் ஒரு கணம் என் மனக்கண் முன் தோன்றி மறைந்தனர்.
 
அதனூடே தன் பளிங்குப் பற்களை வெளிக்குக்காட்டிச் சிரிக்கும் முனீராவும்  ஒரு கணம் வந்து போனாள்…!

நான் உம்மாவை ஆதரித்தால் வாப்பாவை எதிர்க்க வேண்டும். வாப்பா பேச்சைக் கேட்டால் முனீரா எனக்குக் கிடைக்க மாட்டாள்…. தீர்க்கமான முடிவு எதுவுமே இல்லாமல், காரில் ஏறி அமர்ந்தேன்.

கார் கண்டிக்கு வர எவ்வளவு நேரம் சென்றதோ தெரியவில்லை. ஆனால்  கண்டியிலிருந்து ஊருக்கு முப்பது நிமிடங்களில் வந்து விட்டேன்!
 
எனது முடிவு வாப்பாவையும் பாதிக்கக் கூடாது…. உம்மாவும் என்னோடு கோபித்துக் கொள்ளக் கூடாது. முனீராவையும் நான் இழக்கக்கூடாது…!

அதற்கு நான் இப்போ என்ன செய்ய வேண்டும்?  வாப்பா - உம்மாவின் வாயை அடைக்கச் செய்ய வேண்டும்…!

 “இப்போது எனக்கு திருமணத்தில் விருப்பமே இல்லை. நாளைக்கு எதுவும் வேண்டாம். எல்லாத்தயும் அப்படியே விட்டுடுங்க.  நான் அதுபற்றி யோசிக்கின்றபோது எனது முடிவைக் கூறுகின்றேன். இத மீறி நீங்கள்  ‘ஙொய் …. ஙோய் …’ என்றிருந்தால்… நான் இனிமேல வீட்டுப் பக்கமே வர மாட்டன்…” என்று உறுதியாகக் கூறிவிட்டேன்.
எனது முற்றத்து மல்லிகை என்னை விட்டு எங்குதான் போய்விடும் என்ற நினைப்பில் …!
 
அன்று வப்ப உம்மாவிடம்   எனது முடிவைக் கூறிவிட்டு, திருமணப் பேச்சுளக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்! அன்றிலிருந்து என்னோடு எவரும் திருமணப் பேச்சு பேசியதே கிடையாது!

அதன் பிறகு வழமையோல் எல்லாமே நடந்து கொண்டிருந்தன.

நான் வீட்டுக்கு வருவதும்  கொழும்புக்குப் போவதுமாக  கொஞ்ச நாள் காலத்தை ஓட்டினேன். நாட்செல்ல நான் திடீரென மேற்படிப்புக்காக நாட்டை விட்டும் வெளியேற வேண்டி ஏற்பட்டது.

00000000

வருடங்கள் இரண்டு ஓடிவிட்ட நிலையில்… வெளிநாட்டுப் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு  தாய்நாடு வந்து சேர்ந்தேன்.

ஊருக்கு வந்த நான்…வீட்டிலிருந்தபோது….   அன்றைய பத்திரிகையைக் கையிலெடுத்துக் கொண்டு காற்றோட்டத்தை நாடி  ஜன்னல் பக்கமாக வந்தேன் … எதேச்சையாக ஜன்னல் வழி நோக்கினேன்….
 
அதே ஜன்னல்….. அதே முனீரா…. ஆனால் அதே பாவாடை - சட்டையல்ல…!  சாரியணிந்து…முக்காடிட்டு…  குழந்தையொன்றைக் கொஞ்சிக் கொண்டிருக்கின்றாள்….!
 
அந்தக் குழந்தையை மாறி மாறி முத்தமிடுவதும்… “ங்…ங்…ஆ…” என்று அந்தக் குழந்தையின் மழலை மொழியில் பேசுவதும்…. அது அவளது மாரில் உந்தித் தள்ளுவதும்.... அதனூடே அவளும் … குழந்தையும் மாறி மாறிக் கலகலப்பாகச் சிரிப்பதும்…. நிழற்படம்போல் தெரிகின்றது…!
ஒரு காலத்தில் இதைத்தானே ரசித்துப் பார்த்தேன்… இப்போ  இதில் இரசிப்பதற்கு எதுவுமில்லாமற் போய்விட்டது போன்ற மனநிலை!  நான்  மாறிவிட்டேனோ?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு…. நேரில் காண்கின்ற  முனீரா, என் நிலைவில் வராது போனதேனோ ? எனது இதயத்தின் மூலையொன்றில் முடங்கிக் கிடந்த…குழந்தைப் பாசத்தில் திளைத்துப் போகின்ற அவளது உள்ளம் இப்போதுதான்  வெளிப்படுகின்றதா…?  எதுவுமே எனக்குப் புரியவில்லை.

இனிமேலும்  அவளை நான் இழந்துவிடக்கூடாது  என்ற நினைப்பில்…! கையிலிருந்து பத்திரிகையை அங்கேயேயே கைவிட்டு விட்டு மெதுவாக…. மிக மிக மெதுவாக…. அப்படியே அடுப்பங்கரைப் பக்கம் போகின்றேன்…!

“உம்மா …. முனீரா நல்ல பொண்ணில்ல… எவ்வளவு அடக்க ஒடுக்கமானவ…. அங்க பாத்தாயா அவ அந்தக் குழந்தையக் கொஞ்சுற விதத்த…? அவள்ட்ட இன்னமும் நல்ல .......இரக்க குணமிருக்கில்ல…?”

“ஆமாடா… நல்ல இரக்க குணமுள்ள பொண்ணு அவ…! அவள் அவள்ட குழந்தைய அப்படித்தான் இரக்கமாக் கொஞ்சுவா…”

உம்மாவின் வார்த்தைகள் ஆயிரம் சம்மட்டி கொண்டு தலையில் ஓங்கி அடித்தது போலிருந்தது எனக்கு …! நான் அங்கிருந்து அப்படியே நகர்ந்து… வீசியெறிந்ததைத் தேடுகின்றேன் … வாசிப்பதற்கு! முன் பக்கச் செய்தியாக ‘எக்ஸ்ப்ரெஸ் பேர்ல் கப்பல் கடலுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கின்றது…’ என்றிருந்து!
(யாவும் கற்பனை)
நன்றி: “சிந்தாமணி” - 14.08.1977

Post a Comment

Previous Post Next Post