Ticker

6/recent/ticker-posts

மங்கல என்கின்ற ஒரு மனிதன்


அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்லுகின்றேன்
நெருக்கடியான காலங்களில் இந்த தேசத்தில்  
உருப்படியாக இருந்த மனிதர்களுல் நீங்களும் ஒருவர்.
சங்கறுத்து கதிரைகளுக்காக சாஸ்திரம் பார்த்துக் கொண்டிருக்கின்றவர்களுக்கிடையே
மங்கள நீங்கள் ஒரு மனிதராக தெரிந்தீர்கள்
மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால்
மந்திரங்கள் உசச்ரித்துக் கொண்டிருக்கின்ற 
கொடூரமான பொழுதுகளில் 
நீங்கள் மனிதத்தின் பெயரால் 
மனிதாபிமானத்தின் பெயரால்
மகா ஜனங்களுக்கு பிரசங்கம் செய்து கொண்டிருந்தீர்கள்.
அரசியல் பள்ளத்தாக்குகளில் மேய்ந்து திரிகின்ற 
கருப்பாடுகளுக்கும் கருங்குரங்குகளுக்கும் மத்தியில்
வெள்ளாடாக இருந்ததால்தான்
நீங்கள் ஒரு வெள்ளந்தியாக இருந்தீர்கள்.
அதனால்தான் ஒரு கட்டத்தில்
அரசியலின் சதுரங்கப் பலகையிலிருந்தே 
விலகிக் கொண்டீர்கள்..

மக்கள் வயிற்றிலடித்து 
அரசியலின் பெயரில் 
கோடிகளில் சொத்துகள் குவிப்பதில்
கவனமாக இருக்கின்ற போது
மக்கள் வயிறு பற்றி கவலை கொண்டீர்கள்..
உலை கொதிக்க அனுமதி மறுத்த
விலை வாசி பற்றி 
உணர்வோடு துயருற்றவரே
அலை கடலென இன்று எத்தனை பேரிங்கே
உங்கள் மரணத்துக்காக
அழுதார்ப்பரித்துக் கொண்டிருக்கின்றார்கள் பாருங்கள்.
எல்லாரும் எதிர்த்த போதும் 
நியாயமானதென்று பட்டதனை 
நீங்கள் தனித்து குரல் கொடுத்தீர்கள்
இல்லாத பொல்லாததையெல்லாம் சொல்லி 
ஒரு 
இனத்துக்கு குறி வைத்த போதுகளில்
அதிகாரத்துக்கெதிரான கலகக் குரலாக
உரு மாற்றம் பெற்றீர்கள்.
பிணங்களை வைத்து  
பீடமேறுகின்ற பொழுதுகளில்
இனங்களை வைத்து
இதிகாசம் எழுதப்படுகின்ற நாட்களில்
யாருக்கும் தலை வணங்கவில்லை நீங்கள்
ஜனநாயகத்தின் காலடியில் மட்டுமே 
சரணகாதியானீர்கள்.

உச்சம் கொடுக்கின்ற கொதி வெப்பத்தில்
உங்களை ஒரு பனித்துளியெனப் பாரத்தார்கள்
அச்சமூட்டுகின்ற இருட்டின் வெளியில்
உங்களை 
ஒற்றை வெளிச்சப் புள்ளியாகக் கண்டார்கள்.
அத்தனை சீக்கிரத்தில் அந்தப்புள்ளியை 
இதோ மரணம் அழைத்துக் கொண்டு சென்றிருக்கின்றது
அத்தனை துயரங்களுக்கு மத்தியிலும்
மங்கல நீங்கள் ஆறுதலாக இருந்தீர்கள்.
அந்தகார இருட்டு ஓர் நாள் விடியுமென்கின்ற 
பெரு நம்பிக்கையை அளிப்பவராக இருந்தீர்கள்.
ஒன்று மட்டும் உண்மை மங்கல நீங்கள் 
மனிதனாக வாழ்ந்து மரணத்திருக்கின்றீர்கள்.
போய் வாருங்கள் தோழரே 
அவ்வளவு லேசில் உங்களை மறந்து விடாது

இந்த அழகான தேசமும் அதன் மக்களாகிய நாங்களும்.
மிக நீண்ட காலத்தின் பின்னர் ஒரு அரசியல் தலைவன் 
எப்படி இருக்க வேண்டுமென்றுநீங்களும் ஒரு புத்தகத்தை 
எழுதி விட்டுச் சென்றிருக்கின்றீர்கள். 
வரலாறு அதனை எப்போதும்
வாசித்துக் கொண்டேயிருக்கும்.
இழப்பின் போது 
வழிகளிலிருந்து வெளியேறுகின்ற 
கண்ணீர்த் துளிகளின் எண்ணிக்கைதான்
நான் இந்த பூமியில் எப்படி வாழ்ந்தேன் என்பது பற்றிய
கடைசி அறிக்கையினை 
காலத்துக்கு சமர்ப்பிக்கின்றது.
உங்கள் மரணத்திலும் நான் அதனைத்தான்
உணர்ந்து கொண்டிருக்கின்றேன். 

நன்றி;Sabarullah Caseem (whatsapp)
Lawyer from Kinniya
2021-08-24

Post a Comment

0 Comments