
சிங்கள தேசம் கொண்டாடும் பல கலைஞர்கள், எழுத்தாளர்கள், இடது சாரி அரசியல்வாதிகள் பிறந்த பூமி மாத்தறை. எஸ் ஏ விக்கிரமசிங்க போன்ற தலைவர்கள் 1930 களிலேயே அப்பிரதேசத்தில் கம்யூனிச கருத்துக்களை பரப்புரை செய்து, தேர்தல்களில் வெற்றியீட்டியிருந்தார்கள். அங்கு எப்பொழுதும் கம்யூனிஸ்ட் கட்சி வலுவானதாக இருந்து வந்துள்ளது. அந்தச் செழுமையான பாரம்பரியத்தில் வந்தவர் தான் மங்கள சமரவீர.
பொதுவாக அரசியல்வாதிகளின் மரணத்தின் போது வெளியிடப்படும் அஞ்சலிக் குறிப்புக்களில் சலிப்பூட்டும் அளவுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சொல் ‘ஈடு செய்ய முடியாத இழப்பு’ என்பது. அது வெறுமனே சம்பிரதாயத்திற்காக கூறப்படும் ஒரு சொல் என்பதனை எல்லோரும் அறிவார்கள். ஆனால், நீண்ட நாட்களுக்கு பின்னர் அச்சொல்லை அதன் முழுமையான அர்த்தத்தில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பினை எமக்கு வழங்கிவிட்டு, பிரியாவிடை பெற்றுச் சென்றிருக்கிறார் மங்கள சமரவீர.
இலங்கையின் அண்மைக் கால அரசியல் வரலாற்றில் அவர் அளவுக்கு வசைகளையும், அவதூறுகளையும் எதிர்கொண்ட ஓர் அரசியல்வாதி இல்லை என்றே கூற வேண்டும். அந்த அவதூறுகளையும், நிராகரிப்புக்களையும் ஒரு ஞானிக்கேயுரிய மனப்பக்குவத்துடன் எதிர்கொண்டார் அவர். அவருடைய அரசியல் எதிரிகளும் கூட ‘இவரைப் போல் எம்மால் இருக்க முடியவில்லையே’ என்ற ஆதங்கத்தில் ஒருவித லேசான பொறாமையுடன் அவரை உள்ளுர நேசித்தார்கள்.
தனது பாராளுமன்ற வாழ்க்கையின் 30 ஆவது ஆண்டு நிறைவை குறிக்குமுகமாக 2019 பெப்ரவரி மாதம் கொழும்பில் ஏற்பாடு செய்பட்டிருந்த ஒரு நிகழ்வில் உரை நிகழ்த்திய மங்கள சமரவீர, (அங்கு பிரசன்னமாகியிருந்த) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அச்சந்தர்ப்பத்தில் விசேடமாக தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். தனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில் பக்கபலமாக இருந்து, பல்வேறு வழிகளிலும் தனக்கு உதவிய மகிந்த ராஜபக்சவை ஒரு போதும் மறக்க முடியாது என்றார் அவர். அதுவே அவர் பின்பற்றிய அரசியல் நாகரீகம்.
அடுத்த தேர்தலில் வெல்வதற்கான வியூகங்களை வகுப்பதில் மட்டுமே குறியாக இருந்து வரும் அரசியல்வாதிகள் மலிந்த ஒரு சூழலில், ‘இப்படிப் பேசினால் இனி அநேகமாக தேர்தலில் வெல்ல முடியாது போகும்’ என்பதை நன்கு தெரிந்து கொண்டே, தனது மனச்சாட்சிக்கு சரி என்று தோன்றிய கருத்துக்களை துணிச்சலுடன் கூறி வந்த அரசியல்வாதி அவர்.
நாகரீக உலகின் நெறிமுறைகளை அப்பட்டமாக மீறும் விதத்தில் செயற்பட்டு வரும் ஒரு சில ஊடக நிறுவனங்களின் பக்கபலத்துடன் அண்மைக் காலமாக இலங்கையில் கட்டமைக்கப்பட்டு வரும் சிங்கள பேரினவாத கதையாடலின் முதன்மையான கூறுகளை நிராகரித்து, ‘இலங்கை இந்நாட்டில் வாழ்ந்து வரும் அனைத்துச் சமூகங்களுக்கும் சொந்தமான ஒரு தேசம்’ என்ற நிலைப்பாட்டில் நின்று, துணிகரமான விதத்தில் மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கும் திராணி அவருக்கு இருந்தது. அந்தப் பயணம் ஆபத்தானது, அதற்காக செலுத்த வேண்டிய விலை மிக உயர்வானது என்பதை நன்கு தெரிந்து கொண்டே அப்பாதையை அவர் தெரிவு செய்திருந்தார். அதுவே அவரை இலங்கையின் ஏனைய சராசரி அரசியல்வாதிகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டிய சிறப்பம்சம்.
அரசியல் ஆதாயத்திற்காக இனவாதத்தையும், மதவாதத்தையும் கையில் எடுக்கும் எந்தவொரு சந்தர்ப்பவாத அரசியல்வாதிக்கும் மங்கள சமரவீரவுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் அனுதாபச் செய்திகளை வெளியிடும் அருகதையோ, தார்மீக உரிமையோ இருந்து வரவில்லை என்ற விடயத்தை இந்தத் தருணத்தில் முக்கியமாக வலியுறுத்த வேண்டும்.
அவர் விட்டுச் செல்லும் அவருக்கே தனித்துவமான அரசியல் பாரம்பரியத்தை (Legacy) தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு இப்போதைக்கு இலங்கையின் மைய நீரோட்ட அரசியலில் எந்தவொரு தலைவரும் இருந்து வரவில்லை என்ற கவலை மேலிட, குறிப்பாக, சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் மங்கள சமரவீரவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்கள்!
Mansoor Mohamed


0 Comments