தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லதா, கெட்டதா என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது.
குறிப்பாக முட்டையில் உள்ள அதிகப்படியான கொழுப்பு இதய நோய் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என்ற பயம் பலருக்கும் உள்ளது.
இதனால், முட்டையைத் தவிர்ப்பது, முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தவிர்ப்பது என்பது பலருடைய வழக்கமாக உள்ளது.
தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதனால் உடல் நலக் குறைபாடு வராது. உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்தும் ஓரளவுக்கு கிடைத்துவிடும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முட்டையில் கொழுப்புச் சத்து மட்டுமே இருப்பதாக நினைத்து அதைத் தவிர்க்கின்றனர். முட்டையில் உயர் தர புரதச்சத்து உள்ளது. ஒரு முட்டையில் 7 கிராம் அளவுக்கு உயர் தரமான புரதச்சத்து உள்ளது. மேலும் இரும்புச் சத்து, வைட்டமின்கள் என ஊட்டச்சத்துகளின் பெட்டகமாக முட்டை விளங்குகிறது.
தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வருவது உடலில் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியைத் தூண்டுகிறது. குறிப்பாக ரத்த சோகை பிரச்னை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முட்டை என்ற அளவில் இரண்டு மாதத்துக்கு எடுத்துக்கொள்வது நல்லது என்றும் பரிந்துரைக்கின்றனர்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கூட முட்டையை சாப்பிடலாம். இது வயிறு நிறைந்த உணர்வைத் தருவதுடன் உடல் எடை குறைப்பு முயற்சி தோல்வியடையாமல் செல்லவும் உதவும்
முட்டை சாப்பிடும் போது நன்றாக சாப்பிட்டது போன்ற உணர்வு ஏற்படும். இது மற்ற கார்போஹைட்ரேட் உணவுகள் மீது ஆசை ஏற்படுவதைத் தடுக்க உதவும்.
தினமும் முட்டை சாப்பிட்டால் இதய நோய் வரும் என்று பலரும் கருதுகின்றனர். அமெரிக்காவின் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷியன் என்ற இதழில் மெக்மாஸ்டர் பல்கலைக் கழகம் மற்றும் ஹேமில்டன் ஹெல்த் சயின்சஸ் ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வு முடிவு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது.
அதில், “முட்டை சாப்பிடுவது இதய நோயை அதிகரிக்கும் என்பது தவறான கருத்து. இதய நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிட்டு வந்தாலும் கூட அதன் காரணமாக உயிரிழப்பு ஏற்படாது.
ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்யும் திறன் முட்டை சாப்பிடுபவர்களுக்கு அதிகரித்ததாக ஆய்வில் கண்டறியப்படவில்லை.
எனவே, தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது தவறு இல்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, எந்த கவலையும் இன்றி முட்டை சாப்பிடுங்கள்
0 Comments