Ticker

6/recent/ticker-posts

"மோகத்தின் விலை "-2

வாசகர்களுக்கு!
மர்ஹூம்நசீமா முஹம்மத் அவரகள் வேட்டையில்  தொடராக எழுதிய, வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்ற "மோகத்தின் விலை "என்ற தொடர்கதையை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க  மீண்டும் பதிவேற்றுகின்றோம்.
வேட்டை 

பருவச்சிட்டாய் தேவகி அவனை வளைய வந்த நேரம் சிவா சொந்தமாக  தொழில் தொடங்கி இருந்தான். வயதான பெற்றோர் எப்போதோ இறையடி சேர்ந்திருந்தனர்.  
தான் மட்டும் தனியனாக போராடி வெற்றிகரமாக தொழிலும் தொடங்கி இருந்த நேரம், பொழுது போக்காக என்று மட்டுமன்றி, தன் ஒரே இலட்சியம் எழுதுவது என்பதை கொள்கையாக கொண்டிருந்த சிவராமன், பத்திரிகைக்களுக்கு நிறையவே எழுதிக் கொண்டு இருந்தான்.  அவன் கதைகளில் ஈர்ப்புக் கொண்டு இரசிகையாக அறிமுகமானவள் தான் தேவகி,  நாளடைவில் கடிதங்களின் பரிமாற்றம், தொலை பேசிகளில் தொடர்ந்து, பின் காதலாக கனிந்தது. 

பெற்றவர் யாரென்று அறியாதவளாய் ஆசிரமத்தில் வளர்ந்தவள் தேவகி. அவளின் விருப்பம் அறிந்து, சிவராமனின் சம்மதத்துடன், அவளின் திருமணத்தை நடத்தி வைத்தனர் ஆசிரமத்தின் காவலர்கள்.  நல்லதொரு வாழ்க்கையை அமைத்துத் தந்த இறைவனுக்கு நன்றி பகர்ந்தவளாய்,  மணவாழ்வில் அடியெடுத்து வைத்தாள் தேவகி. 

மிகுந்த கூச்ச சுபாவமும், சிவராமன் மேல் அதீத காதலுமாய் இருந்தாள் தேவகி.  தன் கதைகளில் வருவது போன்றே, அமைதியான ஆற்றோரமாய், தனியான வீட்டில், மரங்கள் சூழ இயற்கையான சூழ்நிலையில், நகரத்தின் சுவாசம் இன்றி நிம்மதியான வாழ்வு வேண்டுமென்று எண்ணிய சிவா, அவர்களுக்கான இல்லத்தை அவன் கனவு போலவே அமைத்துக் கொண்டான்,  எவரின இடையூறும் இன்றி அவர்கள் வாழ்வு இன்புறவே இருந்தது.    
 
இல்லறத்தின் இன்பத்துக்கு அடையாளமாக கண்ணனும் பிறந்தான்.  குழந்தை பிறந்த குதூகலத்தில் தன்னையே மறந்தான் சிவா.  தேவகியை தலை மேல் வைத்துக் கொண்டாடினான்.  வீட்டு வேலைக்கென பணிப்பெண்ணை அமர்த்தினான்.  உடன் தோட்டத்தை கவனிக்க ஆறுமுகத்தை நியமித்தான்.   தனக்கு தகப்பன் என்ற அதிகாரத்தை தந்தவள் ஒரு குறையுமின்றி சந்தோசமாக வாழ வேண்டும் என்பதை மட்டுமே இலட்சியமாக கொண்டான்.

அதிகமான கவனிப்பில் ஆரம்பத்தில் பெருமையுடன், இறுமாந்திருந்த தேவகிக்கு போகப் போக அந்த சந்தோசம் கசக்கத் தொடங்கியது.  தன்னையே காதலுடன் வளைய வந்த கணவன், தனக்கு காவல்காரனாக மாறி விட்டது போல் உணரத் தொடங்கினாள்.  அதுவே காலப்போக்கில் தான் தனிமைப் படுத்தப் பட்டது போல் உணர வைத்தது. 

 சிவா, பாவம் தேவகி, நாள் முழுதும் குழந்தையோடு தனியாக பாடு படுகின்றாள்,  அவள் தூங்க வேண்டும், நாம் ரொம்பவும் அவளைப் படுத்தக் கூடாது என்ற எண்ணத்துடன், கொஞ்சம் எட்டியே இருப்பான்.  மேலும், எழுத்துக்களின் மேல் இருந்த மோகம், அவனை வேலை நேரம் முடிய, அனேகமாக கையேடும், பேனாவுமாக தேநீருடன் மணிக்கணக்காக உட்கார வைத்து விடும்.

நாளும் பொழுதும் குழந்தையுடனும், பணியாட்களுடனும் மட்டுமே கழிக்கும் தேவகிக்கு, சிவாவின் அருகாமை இல்லாதது பெரும் குறையாக தோன்றும்.  அப்படியே அருகே இருந்தாலும், சிறு பிள்ளையை தாலாட்டுவது போல், அவளை உறங்க வைக்க அவன் முயற்சிப்பதும்,  எங்கே அவள் சோர்ந்து விடுவாளோ என்ற கவலையுடன் தாங்கித் தாங்கி கவனிப்பதும் ஒரு விதத்தில் அன்புத்தொல்லையாகவே தோன்றியது.  தன் காதலை,  தன் தேவைகளை அவனுக்கு உணர்த்த, வார்த்தைகள் இன்றி, கலந்து பேசும் தைரியமும் இன்றி, தன் கூச்ச சுபாவத்தினால் ஊமையாக,  இயந்திரம் போன்ற வாழ்க்கைக்குத் தள்ளப் பட்டாள் தேவகி. (தொடரும்)

மர்ஹூம்நசீமா முஹம்மத்



Post a Comment

0 Comments