Ticker

6/recent/ticker-posts

குறள்வழி வாழ்வியல் சிந்தனைகள்!-67 (செந்தமிழ் இலக்கியம்)


எண்ணம் தரும் ஏற்றம் 
மனித குலம் சிறக்க, மனித வாழ்வு தழைக்க, வாழ்வில் நலங்கள் பல பெருக நமக்கு அடிப்படைத் தேவை நல்லெண்ணங்களே ! அதிலும் நேர்மறை எண்ணங்களே நம்மை வடிவமைக்கும். நம்மைச் செதுக்கும். இவ்வாறான எண்ணங்களைச் செயல்படுத்த முழுமூச்சுடன் செயல்பட வேண்டும். இதனைக் கூறும்போது நம் குறளாசான் கூறிய கருத்து எம் சிந்தனையில் சிறகுவிரிக்கிறது.

ஆம்

எண்ணித் துணிககருமம்; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. (குறள் 467)
இதன் பொருள் : எச்செயல் ஆயினும் செய்யத் தொடங்கு முன்னரே நன்றாக எண்ணிச்செய்தல் வேண்டும். அவ்வாறன்றி செய்யத் தொடங்கிய பின் எண்ணிக்கொள்ளலாம் என்பது தவறாகும். அதாவது, மனத்தூய்மை, மன உறுதி, மனத் தெளிவு, இவைதனை முதலீடாக்கி நல்லெண்ணத்தை விதையாக்கிச் செயல்பட்டால் நாம் நினைத்ததை அறுவடை செய்யலாம்.

இதுதானே வாழ்க்கைத் தத்துவமாகும்.

நம் வாழ்க்கைப் பாதையில் இறைப்போராற்றல் நமக்குப் பல வாய்ப்புகளை வாரி வழங்கியுள்ளது. வழங்குகின்றது... வழங்கும் அதுவே இயற்கையாகும். இது இயற்கை நமக்கு வழங்கும் வரங்களாகும். ஏனோ இதைப் புரிந்துகொள்ள நாம் மறந்து விடுகின்றோம் அல்லது மறுத்துவிடுகின்றோம். ஆழமான எண்ணம் நம்மை அதுவாகவே மாற்றுகின்றது!

இதைச் சொல்லும் போது ஒரு கதை நினைவிற்கு வருகின்றது. ஒரு திருடன் திருடுவதற்காக ஓர் அரண்மனைக்குள் புகுந்தான். அவன் குதித்த இடம் அரசனின் படுக்கையறை அவன் பதுங்க, மன்னர் அரசியிடம், “நல்ல சாதுக்கள் பலர் நம் ஊரின் ஆற்றங்கரைப் பக்கம் வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கு நம் மகளைத் திருமணம் செய்து கொடுக்கலாம்" என்று கூறியதைக் கேட்டான். ஆஹா ! என்ன அதிர்ஷ்டம். என நினைத்து மகிழ்ந்து, மறுநாள் சாதுவேஷம் போட்டுக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்று சாதுக்கள் கூட்டத்தில் ஒருவனாகச்சென்று அமர்ந்துகொண்டான்.

மன்னர் கருத்துப்படி, மந்திரி பிரதானிகள் வந்து ஒவ்வொரு சாதுவிடமும் மன்னர் மகளை மணம் செய்ய வேண்டினர். அனைவரும் மறுத்துவிட, நம் திருட்டுச் சாது மட்டும் மௌனமாக இருந்தான். இச்செய்தி மன்னரின் கவனத்திற்கு வர, ஒரு வேளை மன்னரே நேரில் வந்து வற்புறுத்தினால் அந்த சாது சம்மதிப்பார் என்று எண்ணி, அவரே நேரில் வந்து அந்தக் கபட சாதுவிடம் தம் மகளை மணம் புரியுமாறு கனிவுடன் வேண்டினார்.

அரசரே நேரில் வந்து வேண்டியதால் திருட்டுச் சாதுவின் மனப்போக்கு மாறிவிட்டது. தன் பொய்யான ஜடாமுடி, தாடி தண்டு, கமண்டலங்களை ஒருமுறை பார்த்தார். இந்த வேஷத்திற்கே, தனக்கு அரசகுமாரி கிடைத்தால், இது எவ்வளவு புனிதமான வேஷம். நான் உண்மையிலேயே சாதுவாகிவிட்டால் இதைவிட உயர்ந்தவை எல்லாம் நமக்குக் கிடைக்குமல்லவா?என எண்ணினான்.

அதன் விளைவு... தான் இனிமேல் உண்மையான சாதுவாக வாழ்வேன் என எண்ணினான். அதில் உறுதியாக நின்று பெரிய மகான்எனப்பெயர் எடுத்தான்,போலி வேடம் போட்டாலும், வேடத்திற்குரிய எண்ணங்கள் வரும். இதில்உள்ள பேருண்மை என்னவெனில், உருவம் எண்ணத்தை மாற்றும். நம் எண்ணங்கள் மற்றும். நம் எண்ணங்கள் நம் வாழ்வை வளமாக்கும். 

மாற்றமும் ஏற்றமும் தரும். நாம் உயர்ந்தவராக விரும்பினால் உயர்ந்தவற்றையே எண்ண வேண்டும். பேச வேண்டும். செயல்படுத்த வேண்டும். ஆகவே தான், எண்ணம் போல் வாழ்வு என்று ஆன்றோர் கூறுவர். ஆதலின், அற்ப விஷயங்களில்கவனம்செலுத்தக்கூடாது.

தீட்டத் தீட்டத்தான் வைரம் ஜொலிக்கும்; சுடச்சுடத்தான் தங்கம் ஒளிரும்; அரைக்க அரைக்கத்தான் சந்தனம் மணக்கும் : சிந்திக்க சிந்திக்கத் தான் மனிதன் உயர்வு பெறுகின்றான். ஆகவே நல்லதை எண்ணி அதில் உறுதியாக நின்று செயல்படுத்துவோம். நலம் பெற்று வளமுடன் நீடு வாழ்வோம்!(தொடரும்)

Post a Comment

0 Comments