Ticker

6/recent/ticker-posts

குறள்வழி வாழ்வியல் சிந்தனைகள்!-69 (செந்தமிழ் இலக்கியம்)


நல்லவர்க்கு அழகு... நீதி தவறாமை
அந்த நாள் முதல்... இந்த நாள் வரை... இயற்கை மாறவில்லை ... பஞ்ச பூதங்கள் தன் இயல்பில் மாறவில்லை... இந்த இயற்கையைத் துய்த்து, அனுபவித்து மகிழ்வுடன் வாழ வேண்டிய மனிதன் மட்டும் ஏனோ தன் நிலையில் தடம் பிறழ்ந்து விட்டான். இயற்கைக்கு மாறுபட்டதால் அதன் சீற்றத்தை, துன்பத்தை அனுபவிக்கின்றான்.

இயற்கைக்கு மட்டுமா? மாறு செய்கின்றான்... தன் மனத்தையும், அல்லவா கோட்டமடையச் செய்கின்றான். பணத்தேவை, சுய நலம், புலன்களின் இச்சை இவைகளால் உந்தப்பட்டு பழிக்கு ஆளாகின்றான். நிதியைக் கண்டால் நீதியை இழக்கின்றான். இது சான்றோர்க்கு அழகல்ல. குறள் ஆசான் கூறுவதைக் காணுங்கள்....

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. ( குறள் 115 ) என்பதன் மூலம் வாழ்வும், தாழ்வும் உலக நியதி, இயற்கையாகும்... ஆதலின், இதையறிந்து

எந்நிலையிலும் நெஞ்சம் நடுவுநிலை மாறாது, நீதி தவறாது இருப்பதே நல்லவர்க்கு அழகாகும்.

இதற்கு மாறு செய்தால் இயற்கை நம்மை கணிக்கிறது... நம் கணக்கு ஒன்று. ஆனால், இறைவன் கணக்கு ஒன்றாக இருக்கிறது... இதைக் கூறும் போது ஓர் சம்பவம் நினைவிற்கு வருகிறது... இதோ!

ஒரு கோயில் மண்டபத்தின் வாசலில் இரு வழிப்போக்கர்கள் அமர்ந்திருந்தினர். இரவு நேரம்... பெருத்த மழை வேறு... அப்போது அங்கு மற்றொருவரும் வந்து சேர்ந்தார்.... வந்தவர், நானும் இரவு இங்கே தங்கலாமா? என்று கேட்டார். “அதற்கென்ன, “தாராளமாகத் தங்குங்கள்" என்றனர் இருவரும்.

சிறிது நேரம் கழித்து, பசிக்கிறது எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர்.

இருவரில் முன்னவர் சொன்னார் என்னிடம் ஐந்து ரொட்டிகள் உள்ளன என்றார் இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் உள்ளன என்றார் ஆக மொத்தம் எட்டுரொட்டிகள் உள்ளன.

இதனை நாம் எப்படி மூவரும் சமமாய்ப் பிரித்துக் கொள்ள முடியும் என்றனர் முதல் இருவரும். மூன்றாம் நபரோ, இதற்கு நான் ஒரு வழியைச் சொல்கிறேன் என்றார். (தேவை உள்ளவன்தானே தீர்வு சொல்வான்)

அதன்படி, நீங்கள் உங்கள் ரொட்டிகளை ஒவ்வொன்றும் மூன்று மூன்று துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள் என்று கூற, அதன்படி... 5 ரொட்டிகள், ஒவ்வொன்றும் மூன்று துண்டுகள் வீதம் 15 துண்டுகள் ஆக்கினார்.

இரண்டாமவர் 3 ரொட்டிகளை அதேபோல் மூன்று மூன்று துண்டுகள் வீதம் 9 துண்டுகள் ஆக்கினார். இப்போது அவர்களிடம் மொத்தம் 15+9=24 துண்டு ரொட்டிகள் இருந்தன. அதைப் பார்த்த புதியவர், இப்போது நாம் மூவரும் ஆளுக்கு எட்டுத்துண்டுகள் எடுத்துக் கொள்ளலாம்" என்றார். இதை ஏற்று அவர்களும் சம்மதித்து ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை உண்டு உறங்கினார்கள். பொழுது விடிய, மழையும் நின்றிருந்தது. மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது, அவர்களிடம் மிக்க நன்றி என்று சொல்லி எட்டு தங்க நாணயங்களைக் கொடுத்து நீங்கள் பிரித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார்.

மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் அந்தக் காசுகளைச் சமமாகப் பிரித்துஆளுக்கு நான்காய் (4 : 4) எடுத்துக் கொள்ளலாம் என்றார். மற்றவர் இதற்குச் சம்மதிக்கவில்லை... மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள், ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் (3:5) என்றார்.

மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை. என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தும் நான் பங்கிடச் சம்மதித்தேன். நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் இல்லை. நான் கொடுத்ததே சிறப்பானதாகும். ஆகவே, இருவரும் சமமாக (4:4) எடுத்துக் கொள்வோம் என்றார்.

பிரச்சனை மன்னரிடம் வர, தவ நிலையில் சிறந்த ஞானம் பெற்ற அம்மன்னர் விசாரித்து பின், மூன்று ரொட்டிகளைக் கொடுத்தவருக்கு ஒரு தங்க காசும் ஐந்த ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு தங்கக்காசும் பிரித்துக் கொடுத்தார். இதை ஒரு காசு பெற்றவர் ஏற்காமல், “இது அநியாயம் ! " என்றார். 

அவரே எனக்கு மூன்று காசு தருவதாகக் கூறினார் என, மன்னரோ, நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள், அதில் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்துவிட்டது, அவன் தந்தது பதினைந்து துண்டுகள், அவனுக்கும் எட்டுத் துண்டுகள் தான் கிடைத்தது. மீதி ஏழு துண்டுகளை அவன் உண்பதற்கு வழங்கிவிட்டான். ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு : அவர் தருமம் செய்தது ஏழுதுண்டுகள்

ஆகவே, (1:7) எனப்பிரித்துக் கொடுத்தேன். அதுவே நீதி என்றார். ஆக கடவுளின் கணக்கு சரியாகத் தான் இருக்கும்... நமக்கு எது தகுதியானதோ? கிடைக்குமோ அதுதான் நமக்கு... உண்மை மனநிலையை இறைவன் அறிவார் என்பதை நாம் மறக்கக் கூடாது... இதை உணர்ந்து, வாழ்வில் கடைப்பிடித்து நலமுடன், வளமுடன் வாழ்வோம்.(தொடரும்)


Post a Comment

0 Comments