Ticker

6/recent/ticker-posts

யார் கொடுத்தார் ?


இயற்கையின் கையில்
தூரிகையைக் கொடுத்ததும் யார்
உலகெங்கும் ஓவியம் வரைய

எழுவானின் கையில்
எழுதுகோலைக் கொடுத்ததும் யார்
காலைப் பொழுதை கவிதையாய் வடிக்க

சூரியனின் கையில்
சாவியைக் கொடுத்ததும் யார்
வெளிச்சத்தை திறந்துவிட

பகலின் கையில் 
விலங்கை கொடுத்ததும் யார்
இருளைச் சிறைப்பிடிக்க

காற்றின் கையில் 
கவிதையைக் கொடுத்ததும் யார்
இசையமைத்துப்  பாட

கடலின் கையில்
ஒலிவாங்கியைக் கொடுத்ததும் யார்
கச்சேரி வைக்க

தென்றலின் கையில்
விசிறியைக் கொடுத்ததும் யார்
தேகங்களைக் குளிரூட்ட

அருவியின் கையில்
ஆர்மோனியத்தை கொடுத்ததும் யார்
அழகழகாய் சுருதி மீட்ட

மாரியின் கையில்
மழையைக் கொடுத்ததும் யார்
ஏரிகளின் தாகம் தீர்க்க

பூங்காவின் கையில்
புன்னகையை கொடுத்ததும் யார்
வருவோரை வரவேற்க

முகிலின் கையில்
முந்தானையை கொடுத்ததும் யார்
வெயிலுக்கு  முக்காடு போட

இரவின் கையில்
நிலவைக் கொடுத்ததும் யார்
உலகை உவப்பில் ஆழ்த்த

நிலவின் கையில்
தேனூற்றைக் கொடுத்ததும் யார்
நிலம் முழுக்க வினியோகிக்க

ஆகாயத்தின் கையில்
அதிகாரத்தை  கொடுத்ததும் யார்
பூமியை ஆட்சி செய்ய

Post a Comment

0 Comments