குறள் 514
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.
மருமவன.. ஒரு பெரிய பொறுப்புக்கு ஆளுங்களை ஆராய்ந்து நியமிக்கணும். நாம எவ்வளவுதான் சோதிச்சு ஆட்களை அந்த பொறுப்புக்கு கொண்டு வந்தாலும், நெறைய வேரு செயல் படும்போது, வேற வேற மாதிரி தான் நடந்து கொள்வாங்க.
குறள் 517
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
கண்ட பயலுவளை எல்லாம் நம்பி எந்த சோலியையும் கண்ணை மூடிட்டு குடுத்திறாதடே. இந்த சோலிக்கு இவன் லாயக்கு தானாங்கிறதை நாலுவேர்ட்ட நல்ல விசாரிக்கணும்டே. குடுக்கிற சோலியை, இவஞ் சரியா செய்வான் னு தெரிஞ்ச பொறவு தான் நீ அந்த சோலியை அவங்கிட்ட குடுக்கணும்.
குறள் 522
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
மாப்ள... நாம எந்த நெலைமையில இருந்தாலும், பாசக்கார சொந்தக்காரங்க மட்டும் நமக்குக் கெடச்சிட்டுண்ணு வச்சுக்க, அது நமக்கு நல்ல ஆக்கமும் ஊக்கமும் தந்து நம்மை ஒசத்தி விடும்.
குறள் 523
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
மாப்ள... கரைகளே இல்லாத கொளத்துக்கு போற தண்ணி, அங்கே தேங்கி நிய்க்காது. அதுனால யாருக்காவது பலன் உண்டா? அது மாதிரி தான் மாப்ள சொந்தக் காரன், சொக்காரன், பக்கத்து வீட்டுக் காரன் னு சுத்தி இருக்கவொளோட பேச்சு வார்த்தை இல்லாதவனுவொ வாழ்க்கையும் பலனில்லாமதான் போவும் மாப்ள.
குறள் 524
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.
மருமவன... எப்பொவும் நம்ம சுத்தி அன்பான சேக்காளிங்க, பாசமுள்ள உறவுக்காரங்க.. . இப்பிடி ஒத்தாசையா இருக்கது தான் மருமவன நாம சொத்து சேத்ததுக்குண்டான நன்மை.
குறள் 527
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
மருமவன.. இந்த காக்கா இருக்குல்லா. அதுக்கு எங்கியாவது சாப்பாடு கெடச்சாக்கா, அதை தாம் மட்டும் கமுக்கமா சாப்புடாது. கா.. கா.. ன்னு கத்தி மத்த காக்காவையும் கூப்புடும். அதுகள்ளாம் வந்த பொறவு இருக்கதை சேந்து சாப்புடும்.
இந்த மாதிரி கொணம் இருக்க நம்ம ஆளுங்க சொந்த பந்தத்தோட் நல்லா இருப்பாங்க மருமவன. (தொடரும்)


0 Comments