Ticker

6/recent/ticker-posts

"மோகத்தின் விலை "- 12


“நான் வந்து விட்டேன், நீ எங்கே?” என்ற அவளின் தகவலுக்கு, “கோபப் படாதே என் செல்லமே, அவசரமாக ஒரு வேலை, தலை போகின்ற காரியம்,  இன்னும் சில நிமிடங்களில் வந்து விடுவேன்,  பொறுத்திரு மகாராணி” என்றது கைபேசியில் தகவல்.

இரவு என்ற போர்வைக்குள் உறங்கத் தயாரான உலகத்தில் தனியளாக நின்றிருந்த தேவகியை நோக்கி, ஓட்டி வந்த ஆட்டோவை தூரமாக நிறுத்தி விட்டு, மெதுவாக நடந்து வந்தது ஒரு உருவம்.  நடுத்தர வயதுடைய அந்த மனிதனின் கண்கள் சிவப்பு நிறத்தில் ஜொலிக்க, உடலில் இருந்து வீசிய வியர்வை நாற்றம் அவன் பக்கத்தில் வந்ததுமே தேவகிக்கு குமட்டலை தந்தது.

“நீங்கள் தானே மேகா எனும் தேவகி?” வெற்றியைத் தவிர அவள் முகநூலுக்காக வைத்துக் கொண்ட பெயர் வேறு யாருக்கும் தெரிந்திருந்திருக்க எந்த வாய்ப்பும் இல்லை என்பதால் அவனை அதிர்ச்சியுடன் நோக்கினாள் தேவகி. 

அவன் வெற்றிலை கறை படிந்த பற்கள் தெரிய சிரித்துக் கொண்டே. “நீங்கள் தானே மேகா?” என்றான் மீண்டும்.  பயத்துடன் அவனைப் ஏறிட்டாள் தேவகி. 

“ஐயா அவசர வேலையாக வெளியே போயிருக்கின்றார்.  உங்களை பத்திரமாக தங்குமிடத்தில் கொண்டு போய் சேர்க்கச் சொன்னார்.  அதனால் தான் வந்தேன், வாருங்கள் போகலாம்” என்றான் அந்த மனிதன். 

அவசரமாக அவள் கைபேசியை அழுத்த, “சுவிட்ச் ஆப்” என்றது கைபேசி. என்ன செய்வது என்றறியாத நிலையில், “எங்கே போவது?” என்றாள் தேவகி. 

“பயம் வேண்டாம் அம்மா,  வெற்றி சீக்கிரம் வந்து விடுவார், ரொம்ப நேரம் இங்கே நிற்க வேண்டாமே..” என்றான் அவன்.

“முடியாது, வெற்றியில்லாமல், உங்களை யார் என்று அவர் சொல்லாமல் நான் உங்களுடன் வருவதாயில்லை” என்றாள் தேவகி,

“சரி, அப்படியே ஆகட்டும், நான் கிளம்புகின்றேன்.  இரவு நேரம், தெரியாத இடம், தனியாக நீங்கள் நிற்பது உங்களுக்கு நல்லதல்ல, அப்புறம் உங்கள் இஷ்டம்” என்று சொல்லியவாறே அவன் திரும்பி நடக்கத் தொடங்கினான்.

எங்கிருந்தோ நாயொன்று குரைக்கும் சத்தமும், சுற்றியிருந்த இருட்டின் அடர்த்தியும் அவளை மிகவும் பயத்திற்கு தள்ளியது. மறுபடியும் அவள் கைபேசியில் வெற்றியை தொடர்பு கொள்ள முயன்று தோற்றவளாக, எட்டி சென்ற, ஆட்டோவில் வந்த அவனை வழி மறித்தாள்.

“அண்ணே, வெற்றிதானே உங்களை அனுப்பியது?” தயக்கத்துடன் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் நமுட்டுச் சிரிப்புடன் தூரத்தில் நின்றிருந்த ஆட்டோவை நோக்கி அவன் நடக்க, தளர்ந்த நடையுடன் அவனை அவள் பின் தொடர்ந்தாள்.

(தொடரும்)


 

Post a Comment

0 Comments