Ticker

6/recent/ticker-posts

"மோகத்தின் விலை "- 13


“ஏறுங்கள் அம்மா” என்றான் பணிவுடன்.  வேறு வழியின்றி அவள் உட்கார்ந்ததும் ஆட்டோ சிறு உறுமலுடன் கிளம்பியது.

அரைமணி நேர பயணத்தின் பின், வண்டியை இரவு உணவுக்காக திறந்திருந்த ஒரு பெட்டிக்கடையருகில் நிறுத்தினான் அவன். வண்டியிலேயே அவளை உட்கார சொல்லிவிட்டு இரவு உணவுக்கென அங்கு தயாராக இருந்த இட்டிலி பொட்டலங்களுடன் வந்தவன், தண்ணீர் பாட்டிலையும் உணவையும் நீட்டினான். 

கையில் எடுத்த உணவு தொண்டைக்குள் இறங்காமல், தொண்டையில் சிக்கிக் கொண்டு, தூங்கும் முன் அவள் அணைப்புக்காக ஏங்கி அழும் கண்ணனை நினைவுறுத்தியது.  இந்நேரத்துக்கு சிவா வீட்டுக்கு வந்திருப்பான்.  அவளைத் தேடி இருப்பான்.  என்ற எண்ணம் தோன்றியதுமே வாயில் இட்ட உணவு மொத்தமாக  இறங்க மறுத்தது.  இடது கண்ணின் ஓரமாக ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்த்தது.

“அவசரம் வேண்டாம்.  மெதுவாக சாப்பிடுங்கள்.” என்றான் அவன்.  ருசிக்காத உணவை அப்படியே விட்டு விட்டு, கை கழுவினாள் அவள். 

“அதோ, கடை பின் பக்கம் ‘வாஷிங்ரூம்’ தண்ணீர் வசதி இருக்கின்றது.  முகம் கழுவிக் கொள்ளலாமே” என்றதும்.  ‘சரி’ என்று அவளும் வாகனத்தை விட்டு இறங்கி வாஷ்ரூம் பக்கம் சென்றாள். 

முகம் கழுவி சேலையை சரி செய்து கொண்டு திரும்ப நினைத்த நிமிடம், கைபேசியில் “கோபமாடா செல்லம்?” என்றது வெற்றியின் தகவல்.  அவசரமாக அவனை அழைத்தவள், “இப்படியா நட்டாற்றில் விடுவது போல், வராமல் இருப்பாய்?” என்றாள் கோபத்துடன்.

“அடடா.. என் மகாராணிக்கு மூக்குக்கு மேல் கோபம் வருதே” என்று சிரித்தான் வெற்றி.  பின் “இனிதான் நீ உன் புதிய உலகுக்கு செல்லப் போகின்றாய்,  என்னை என்றுமே வாழ்வில் நீ மறக்கப் போவது இல்லையடி மகாராணி” என்றான் கொஞ்சலாக.

“உண்மையிலேயே அந்த ஆட்டோ டிரைவரை பார்த்து பயந்து போனேனடா!” என்றாள் தேவகி.  வாய் விட்டு சிரித்தான் வெற்றி.  “சரி சரி, கிளம்பு.  அவன் உன்னை அப்படியே விட்டுவிட்டு போய்விடப் போகின்றான் பார்” என்றான். 

“சரிடா, எனக்காக காத்திரு” என்று விட்டு வெளியே வந்தாள்.

கடைக்கு வெளியே தேநீருக்காக உட்கார்ந்திருந்த இரண்டொருவரும் எப்போதோ போய் விட்டிருந்தனர்.  கடையை சாத்தி விட்டு கடை காரரும் பக்கவாட்டில் வைத்திருந்த பைக்கை உதைத்து கிளம்பிக் கொண்டிருந்தார். 

வெளியே வந்த தேவகி கவனம் முழுக்க கைபேசியில் கொண்டவளாக “உன் ஒற்றை முத்தத்துக்காக காத்திருக்கின்றன என் அதரங்கள்” என்ற அவன் எழுத்துக்களை வாசித்து அகமகிழ்வுடன் கடையை தாண்டி ஆட்டோ நின்றிருந்த இடத்தை நோக்கி நடந்தாள்.  கவனத்தை கை பேசியை விட்டும் அகற்றி, ஆட்டோவை நோக்கியவள் அதிர்ந்தாள். 

 (தொடரும்)


Post a Comment

0 Comments