திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-14

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-14


குறள்
 551
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.

பொது மக்களுக்கு கெடுதல் செய்ற அரசு இருக்கே.. அது ஆளைக் கொல்லுததயே தொழிலா வச்சிருக்க கொலைகாரப் பாவியை விட மோசமானது மாப்ள. 

குறள் 552
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.

நாட்டை ஆளுத மன்னன் சட்டம் போட்டு மக்கள்ட்ட வரிங்கிற பேர்ல பணத்தை தா... தா ன்னு புடுங்குதது எப்பிடி இருக்கு தெரியுதா மாப்ள?.. 

ராத்திரி நேரத்துல திருட்டுப் பயலுவொ வழியில நின்னுக்கிட்டு கத்தியைக் காட்டி  போற வாரவங்களை மெரட்டி வழிப்பறி செய்யுத மாதிரி இருக்கு. 

குறள் 553 
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.

மருமவன.. ஆட்சியில இருக்கவங்க ஒவ்வொரு நாளும், தங்களது ஆட்சியில் நடக்கும் நல்லது பொல்லது பத்தி நல்ல விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கேத்தமாதிரி நடத்துக்கிடணும். இப்படி முறையாச் செய்யாத அரசாங்கம் இருந்துச்சுன்னா நாடு கெட்டு குட்டிச்சுவராப் பொயிரும். புரியுதா மருமவன.. 

குறள் 554
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.

ஏல.. மாப்ள.. நாட்டோட உண்மை நெலைமை என்னன்னு சரியா தெரியாம, அடக்குமுறை ஆட்சி செய்யும் அரசாங்கம் இருந்துச்சுன்னா... அது அரசாங்க வருமானத்தையும் இழந்து, பொது மக்களோட ஆதரவையும் இழந்து விடும்.. 

குறள் 555
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

மாப்ள.. எந்த ஒரு ஆட்சியிலயும்,  மக்கள் ரொம்ப தும்பப்பட்டு, அதைப்  பொறுக்க முடியாம, ரத்தக் கண்ணீர் வடிச்சாங்கன்னா, அந்தக் கண்ணீர் பலம் வாஞ்சதா இருக்கும். அந்த மோசமான ஆட்சியை அழிக்க வெளிய இருந்து பகையாளி யாரும் வர வேண்டாம் மாப்ள. மக்கள் சிந்துத அந்த கண்ணீரே ஆட்சியை அழிச்சிறும். 

குறள் எண் – 562
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.

மாப்ள.. தப்புத் தண்டா எதும் நடக்காம இருக்கணும்னா, ஒருத்தனை கண்டிக்கும் போது  கடுமையா பேசணும். அப்டிச் செஞ்சா அவன் செஞ்ச தப்புக்கு வருந்துவான்.

அதே நேரம் தண்டிக்கும் போது கொஞ்சமா, லேசா தண்டிக்கணும். அப்பம் அவன் நல்ல திருந்துவான். 

நீ இப்படிச் செஞ்சண்ணு வச்சுக்க, ஓஞ் செல்வாக்கு ஆண்டாண்டு காலம் நெலச்சு நிய்க்கும். (தொடரும்)

Post a Comment

Previous Post Next Post