2020 -2021 ஆம் ஆண்டின் அரச இலக்கிய விருது பெற்ற கெக்கிராவை ஸுலைஹா

2020 -2021 ஆம் ஆண்டின் அரச இலக்கிய விருது பெற்ற கெக்கிராவை ஸுலைஹா


கெக்கிறாவ ஸுலைஹா என்ற புனைப்பெயரில் இலக்கியப் பணியாற்றி வரும் திருமதி ஏ. ஸுலைஹா பேகம் தொழில் ரீதியாக ஒரு பாடசாலையின் அதிபர். அமைதியாக இருந்து கல்விப்பணி மற்றும் இலக்கியப்பணி புரிந்து வருகிறார். அவர் பற்றிய ஒரு சிறு குறிப்பை வழங்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகிறது.

கெக்கிறாவ ஸுலைஹா 1969 மே 27 இல் அனுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள கெக்கிறாவயில் பிறந்தார். தான் தரம் 01 முதல் தரம் 11 வரை கற்ற அவரது தாய்ப்பள்ளி கெக்கிறாவ முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் தான் இன்று அவர் ஒரு தலைமையாசிரியையாய் தொழில் செய்கிறார்.
தரம் 12-13 கண்டி பெண்கள் உயர்நிலைப் பாடசாலையில் விஞ்ஞானப்பிரிவில் கற்றார். ஆங்கில ஆசிரியையாக 1992களில் நியமனம் கிடைக்கிறது. ஆங்கில ஆசிரியராக கெக்கிறாவ முஸ்லிம் மஹா வித்தியாலயம், மரதன்கடவல அல்-அமீன் முஸ்லிம் வித்தியாலயம், மரதன்கடவல இஹலபுளியங்குளம் முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய இடங்களில் பணியாற்றியுள்ளார்.

ஆங்கிலத்தின் மீதான வாஞ்சை ஆங்கிலக்கற்கைகள் பலதின்பால் அவரை ஈர்க்கிறது. ஆதலால், ஆசிரியர் பயிற்சிக்கான பேராதனை ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை (1997-1998), ஆங்கில ஆசிரியர் டிப்ளோமாப் பயிற்சிக்காக இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம்  மிஹிந்தலை, ஆங்கில உயர் தேசிய டிப்ளோமாவுக்காக கண்டி உயர் தொழில்நுட்ப நிறுவகம், கல்விமாணி கற்கை நெறி நிமித்தம் ஆங்கிலம் தேசியக் கல்வி நிறுவகம் என்பவற்றில் தொடர்ந்தும் கற்றார். 

2009.11.20 இல் அதிபராக நியமனம் பெற்று மரதன்கடவல அல்-அமீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் கடமையாற்றி விட்டு தற்போது கெக்கிறாவ முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் பணி செய்து வருகிறார். 2021 இல் நடைபெற்ற ஜீ.சீ.ஈ. சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றிருக்கிற பாடசாலையாக அது அதிகம் பேசப்படுகிற பாடசாலை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலக்கிய ஈடுபாட்டுக்கு ஊக்குவித்தவர்கள் வரிசையில் அக்கா கெக்கிறாவ ஸஹானா, பண்ணாமத்துக் கவிராயர் திரு.ஸெய்யத் முஹம்மத் ஃபாரூக், சாச்சா பாத்திமா மைந்தன், மேமன்கவி அப்துல் ரஸாக் அவர்கள், ‘மல்லிகை’ டொமினிக் ஜீவா ஐயா அவர்கள், மகன் ‘ஜீவநதி’ கலாமணி பரணீதரன், அனுராதபுரம் உயர்திரு. அன்பு ஜவஹர்ஷா அவர்கள் மற்றும் அவ்வப்போது அவரோடு கற்பித்த ஆசிரியர்கள், அவருக்குக் கற்பித்த ஆசிரியர்கள், உறவினர்கள் என பலரை ஞாபகம் கொள்கிறார்.

முதல் இலக்கிய ஆக்கம் ‘மல்லிகை’யில் 90களில் பிரசுரமான மொழிபெயர்ப்புக் கவிதை “ஓ! ஆபிரிக்காவே” ஆகும்.
இதுவரை வெளியீடு செய்த நூல்கள் பின்வருமாறு
பட்டுப்பூச்சியின் பின்னுகை போலும்…’ (2009) மொழிபெயர்ப்புக் கவிதைகள்,
‘அந்தப் புதுச்சந்திரிகையின் இரவு’ (2010) மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்,
‘இந்த நிலம் எனது’ (2011) மொழிபெயர்ப்புக் கவிதைகள்,
‘ஞாபகிக்கத்தக்கதோர் புன்னகை’ (2014) மொழியாக்கக் கட்டுரைகள்,
‘வானம்பாடியும் ரோஜாவும்’ (2015) மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்,
‘ஞாபகம் உதிராப் பூவென..’ (2017) மொழியாக்கக் கட்டுரைகள், 
'கிழக்கினை எதிர்கொண்டு..'( 2020) மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்,
'பூக்களின் கனவுகள்'( 2020) மொழிபெயர்ப்புச் கவிதைகள்.

‘தினகரன்’, ‘விடிவெள்ளி’, ‘வீரகேசரி’, ‘தினக்குரல்’  போன்ற பத்திரிகைகளில் ஆக்கங்கள் வெளிவந்தன. ‘மல்லிகை’, ‘ஜீவநதி’, ‘ஞானம்’ சஞ்சிகைகள் நிறைய தன்னை ஊக்குவித்து வளர்த்தமை பற்றி நினைவு மீட்டுகிறார்.

விருதுகள் பல பெற்றிருக்கிறார் கெக்கிறாவ ஸுலைஹா. பெற்ற பரிசுகளில்  குறிப்பிடத்தக்கவை என்று ‘பட்டுப்பூச்சியின் பின்னுகை போலும்…’ 

மொழிபெயர்ப்புக் கவிதைகள் நூலுக்காகக் கிடைத்த இலங்கை அரசின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய மண்டலப்பரிசு, மற்றும் மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கிய விருது (2009), 

‘வானம்பாடியும் ரோஜாவும்’ நூலுக்காகக் கிடைத்த இலங்கை அரசின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய மண்டலப்பரிசு(2015),  

‘ஞாபகிக்கத்தக்கதோர் புன்னகை’ மொழியாக்கக் கட்டுரைகள் நூலுக்காகக் கிடைத்த ‘துரைவி’ விருது (2014), 

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் 2016 இல் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வு பொன்விழா மாநாட்டில் அவரின் இலக்கியப் பணிக்காகக் கிடைத்த விருது, 
மேலும் (2019) யாழ்ப்பாண மகளிர் விவகார அமைச்சு சர்வதேச மகளிர் தினத்தன்று நடத்திய நிகழ்விலே வழங்கப்பட்ட கௌரவ விருது (Inspirational Women Award ) என்பவற்றைச் சொல்லலாம். 

மேலும், இலங்கை இலக்கியப் பேரவையின் ‘அந்தப் புதுச்சந்திரிகையின் இரவு’ (2010) மொழிபெயர்ப்புக் கட்டுரை நூலுக்காவும் ‘இந்த நிலம் எனது’ (2011) மொழிபெயர்ப்புக் கவிதைகள் நூலுக்காகவும் கிடைத்த சான்றிதழ்களும் ஞாபகம் கொள்ளத்தக்கன.

2020 இல் வெளியிடப்பட்ட அவரது ‘கிழக்கினை எதிர்கொண்டு…’ நூலுக்கு இலங்கை அரசின் சிறந்த சிறுகதை மொழிபெயர்ப்புக்கான சாகித்திய மண்டலப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை உயர் விருதுகள் பெற்றாலும் , எத்தனை நூல்களை மொழி பெயர்த்து வெளியிட்டாலும் கிஞ்சித்தும் பெருமை கொள்ளாப் பணிவான குணமும், அடக்கமாக அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்வதும் அவரது போற்றத்தக்க பண்பாகும்.

 அவர் மேலும் பல விருதுகளையும் பெற்று உச்சம் தொட  எமது வேட்டை சஞ்சிகை சார்பாக வாழ்த்துகள்.


Post a Comment

Previous Post Next Post