Pen Club -ஆற்றலுள்ள பெண்களின் அமைப்பு-அறிமுகம் - 21

Pen Club -ஆற்றலுள்ள பெண்களின் அமைப்பு-அறிமுகம் - 21



நிந்தவூர் மண்ணின் மீன்பிடி மற்றும் விவசாய குடும்பஸ்தர் மீராலெப்பை றஷீட் மற்றும் அஹமட் லெப்பை சுஹறா தம்பதிகளின் மூன்று பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளையாக பிறந்தவர் முஜாமலா .
இவர் வளர்ந்து வரும் பெண் எழுத்தாளராவார். முக அடையாளம் இல்லாமல் நீண்டகாலமாக கவிதைகளை முகநூலில் 
"வானம்பாடி "  எனும் புனைப்பெயரில்  எழுதிவருகிறார்.

இவர் கல்விப்பிண்ணனி பற்றிக் குறிப்பிடுகையில் ஆரம்பம் முதல் உயர்தரம் வரையில் நிந்தவூர் மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கற்றார். பாடசாலைக் காலங்களில் பாடசாலைமட்ட,  கோட்ட , மாகாண மட்டங்களில்  தமிழ்த் தினப் போட்டிகள், மீலாதுன் நபி விழா, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கவிதை,  கட்டுரை, சிறுகதையெனப் பங்குபற்றி பாராட்டுக்களையும், பரிசில்களையும், சான்றிதழ்களையும் பெற்றிருக்கிறார்.

திருமணத்தின் பின்னர்  இலக்கியம்  மீதான ஆவர்வம் இயல்பாகவே குறைந்து போக பின்னர் 2008களில் கணவரின் அனுமதியுடன் மீண்டும் இலக்கியம் மீதான பயணத்தை ஆரம்பித்து முகம் காட்டாமல் தன் படைப்புக்களை வாசகர்கள் முன் வைத்து வந்தார்.

பின்னர் இவரது "துளிப்பாக்கள்" எனும் முதல் கவிதை 2008ல்  தினகரன் தேசியப் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதனைத் தொடர்ந்து ஊர்க்குருவி, வானம்பாடி எனும் புனைப் பெயர்களில் தனது அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட இவரது ஆக்கங்கள் முகநூலில் பலராலும் அதிக விருப்புக்களை பெற்றது. 

அதன் பின்னர் பிறை எப்.எம். இன் மாலை மருதம், சந்தனக் காற்று, சக்தி எப்.எம், கெப்பிடல் எப்.எம். போன்ற வானொலிகளிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றன இன்னும், இடம்பிடித்தும் வருகின்றன.. 

எழுத்து, நீர் போன்ற வலைத் தளங்களிலும்  மெட்றோ, விடிவெள்ளி, 
தமிழன், மித்திரன், தினகரன் உள்ளிட்ட தேசிய பத்திரிகைகள், வளரி, அக்கினிச் சிறகு , துணிந்தெழு ,  தமிழ்நெஞ்சம் போன்ற  மின்னிதழ்களும் தேடல் இலக்கியம்,வெண்ணிலா போன்ற  இலக்கிய இதழ்களும் இவரது இலக்கியப் படைப்புக்களுக்கான களத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன. 

இவரது கவிதைகளில் சமூக ஒழுக்க முறைமை, சமூக தாக்கங்கள், ஏக்கங்கள் தொடர்பாகவும் இற்றைய நாட்டு நடப்பு, சமூக அவலங்களையும், உணர்வுகளையும், அனுபவங் களையும்  எழுத்தெனும் ஆயுதமூடாக கிளர்ந்தெழுதி வருகிறார்.

2019, 2020 களில் கிழக்கிலங்கை இளைஞர்கள் அமைப்பினால் முறையே  சிறந்த ஆளுமை , சிறந்த எழுத்தாளருக்கான விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 

அதன் பின்னர் 2020இல் அம்பாறை மாவட்ட செயலகமும் மற்றும் நிந்தவூர் கலாச்சார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய பிரதேச இலக்கிய விழாவில் இவரது கவிதை முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன் மாவட்ட மட்டத்திலும் வெற்றியினைத் தட்டிக் கொண்டது.


மேலும் வளரி, பன்னாட்டு கலைஞர் சங்கத்தின் அம்பாறை மாவட்ட பிராந்திய இணைப்பாளராகவும், கடற் பறவைகள் இலக்கிய அமைப்பின்  இந்நாள் பொருளாளராகவும், நிறைமதி கலை இலக்கிய மன்றத்தின் இணைச் செயலாளராகவும் , Sri Lanka Pen club யின் செயலாளராகவும் இலக்கியச் செயற்பாடுகளில் இவரது பங்களிப்புக்கள் இருந்து வருகின்றன. 

அத்துடன் இவரது கவிதைக் காதலினால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கவிதா சாளரத்தின் குரல்வழிக் கவிபாடியாகவும் தொடர்ந்து குரல் கொடுத்தும் வருகிறார். 

மேலும்,தூரிகைக்காதல் www.thoorigaikadhal.com எனும் தனது சொந்த வலையத்தளத்தினூடாக இலக்கியப் படைப்புக்களை வாசகர்களுக்கு காட்சிப் படுத்துவதுடன் அவரது வலைத்தளத்தில் "நீங்களும் எழுதலாமெனும்"பகுதியினூடாக சக படைப்பாளிகளுக்கும் களம் அமைத்துக் கொடுத்துள்ளார். 

இவரது கவி ஆர்வம் கண்டு இவரை மங்கை நிகழ்ச்சி மூலமாக youth tv இவரது நேர்காணலை ஒலிபரப்பியது. அத்துடன் தினக்குரல், தமிழன் பத்திரிகைகள் இவரது செவ்வியை வெளியிட்டமையும்  குறிப்பிடத்தக்கது. 

மேலும் கெப்டன் பதிப்பகத்தின் உடைந்த கப்பல்,  சுருக்குப் பை போன்ற கவிதைத் தொகுப்பிலும்,நிந்தபதி எனும் இலக்கிய தொகுப்பிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளது. 

இருந்தாலும் தனது முதலாவது கவிதை நூலை இவ்வருட இறுதிக்குள் வெளியிடும் முனைப்புடன் செயல்பட்டு  வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
தகவல்:
சம்மாந்துறை மஷூறா.





Post a Comment

Previous Post Next Post