பாரதியின் புதிய ஆத்திசூடி-9

பாரதியின் புதிய ஆத்திசூடி-9


81  மெல்லத் தெரிந்து சொல்
சொல்வதற்கு முன்னால் சொல்லும் விவரத்தைத்
தெள்ளத் தெளிவாய்ப் புரிந்துகொண்டு சிந்தித்துச்
சொல்லவேண்டும்! இங்கே அரைகுறையாய்ச் சொல்லாதே!
தொய்வெனின் நம்பமாட்டார்! சொல்.

82  மேழி போற்று
வேளாண்மை இல்லையேல் வேளைக் குணவில்லை!
வேலையின்றி வாழ்வோம் ! உணவின்றி வாழ்வோமா?
வேளாண்மை போற்றாத நாடுண்டோ?  இவ்வுலகம்
வாழ்வதற்கே அச்சாணி இஃது.

83  மொய்ம்புறத் தவம் செய்
பணவலிமை எல்லாம் வலிமையா? இல்லை
மனவலிமை ஒன்றே நிலைக்கும் வலிமை!
மனவலிமை வாழ்க்கையின் ஆணிவே ராகும்!
சுணக்கத்தைப் போக்கும் மருந்து.

84  மோனம் போற்று
அமைதியாய் எங்கிருக்க வேண்டுமோ, அங்கே
அமைதி கடைப்பிடித்தல்  பண்பாகும்! அன்றி
மனம்போன போக்கில் கண்டநேரம் பேசும்
குணமோ வெறுப்பிற்கே வித்து.

85  மௌட்டியந் தனைக் கொல்
கற்றுத் தெளியத் தெளிய அறிவொளி
பட்டொளி வீசும்!அறியாமைக் காரிருள்
சட்டென்று நீங்கும்!  அறிவால் அறியாமை
முற்றும் விலகும் உணர்.

86  யவனர் போல் முயற்சி கொள்
கடின உழைப்பு,விடாமுயற்சி மற்றும்
நொடிப்பொழுதும் மாறாத நம்பிக்கை கொண்டே
விதியெனச் சொல்லித் திரிவதை விட்டே
மதியால் யவனராக மாறு.

87  யாவரையும் மதித்து வாழ்.
மதிக்கப் பழகு மதிப்புக் கிடைக்கும்
மதிக்க மறுத்தால்  மதிக்க மறுப்பார்
மதித்துப் பழகுதல் பண்பின் மகுடம்!
மதிப்போம் அனைவரையும் நாம்.

88  யௌவனம் காத்தல் செய்.
நறுமணப் பூச்சோ அழகைக் கெடுக்கும்!
சுறுசுறுப் பொன்றே அழகைக் கொடுக்கும்!
முதுமையில் கூடசுறுசுறுப்பாய் வாழும்
மிடுக்கான பண்பேஅழகு.

89  ரஸத்திலே தேர்ச்சிகொள்
யாரென்ன சொன்னாலும் நம்பாமல் மெய்ப்பொருளைத்
தேர்ந்து தெளிந்து பகுத்தறியும் ஆற்றலில்
ஊர்மெச்சும் வண்ணம் விவேகியாய் வாழவேண்டும்!
ஊறிவரும் நற்பெயர் தான்.(தொடரும்)




Post a Comment

Previous Post Next Post