குறள்வழி வாழ்வியல் சிந்தனைகள்!-75 (செந்தமிழ் இலக்கியம்)

குறள்வழி வாழ்வியல் சிந்தனைகள்!-75 (செந்தமிழ் இலக்கியம்)


வானத்தை வசப்படுத்தும் சொல்
வாய் இருக்கிறது என்பதற்காகக் கண்டதையும் பேசிவிடக்கூடாது. பயனற்ற சொல், தேவையற்ற சொல், சொல்லக்கூடாத சொல், பாதகமாகும் சொல் எது? எவை? என்று உணர்ந்தே கையாள வேண்டும். தவறும்பட்சத்தில் பேரிழப்பும், பெரும் துன்பமும் தான் ஏற்படும். அதே சமயம் சரியான சொல்லை , சரியான இடத்தில், சரியான பொருளில் கூறினால் வானம் கூட நமக்கு வசப்பட்டுவிடும். உண்மை இருந்தால், நிஜம் இருந்தால், சத்தியம் இருந்தால் நம் சொல்லுக்கு இயற்கையும் கூட கட்டுப்படும்.

இதோதிருவள்ளுவப் பேராசான் கூறுவதைப் படியுங்கள். திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினுங்கு இல். (குறள் 644) என்கிறார்.

அதாவது, சொல்லின் ஆற்றல் தெரிந்து கையாளுக, அதைவிடச் சிறந்த அறமும், இல்லை, பொருளும் இல்லை. எல்லாம் நலமாய்
இன்பமாய் அமையும் என்பதாகும்,

இதனைக் கூறும்போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது. மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன். அவன் மன்னரிடம் இந்த அரிய வகை மீனைத் தாங்கள் வாங்குவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று பணிவுடன் கூறினான். அதைக் கேட்டு மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம்பொற்காசுகள் கொடுத்தார்.

மகாராணி அதைக்கண்டு கொதித்துப் போய்விட்டார். ஒருஅற்ப மீனுக்கு இவ்வளவு பணமா? அதைத் திரும்ப வாங்குங்கள்" என்றாள். மன்னர் விரும்பி கொடுத்ததையும், முடிந்த வியாபாரத்தையும் மாற்றுவது நமக்கு அழகல்ல என்று மறுத்தார்.

சரி அவனைக் கூப்பிட்டு இந்த மீன் “ஆணா?" பெண்ணா ? என்று கேளுங்கள். ஆண், மீன் என்று அவன் சொன்னால், பெண் மீன்தான் வேண்டும் என்றும், பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன்தான் வேண்டும் என்றும் கேளுங்கள். அந்த மீனவரிடம் இருந்து பொற்காசுகளைப் பிடுங்கிவிட வேண்டும் என்றாள் மகாராணி,

ராணியின் உத்தரவு அல்லவா? மீனவன் திரும்பி அழைக்கப்பட்டான். கேள்விக் கணையை மகாராணி தொடுத்தாள். மீனவனோ உஷாராக பதில் சொன்னான். இது ஆணுமல்ல, பெண்ணுமல்ல. இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன். அதனால் தான் அதை மன்னருக்கும் கொண்டுவந்தேன் என்று.

இந்த பதிலால் மன்னர் மேலும் மகிழ்ந்து மீனவனுக்கு மீண்டும் ஐந்தாயிரம் பொற்காசுகளைக் கொடுத்தார். அதிலிருந்து ஒரு பொற்காசு நழுவி தரையில் வீழ்ந்து ஓடியது. மீனவன் அதைத் தேடி எடுத்தான். மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள்... -பேராசைக்காரன்... கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்துப் போகட்டுமே என்று விட்டானாபாருங்கள்... அற்ப புத்தி" என்றாள் மன்னரிடம்.
மீனவன் நிதானாமாகத் திருப்பி மகாராணியிடம் சொன்னான். 
அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால் கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்று.

இதைக் கேட்டு இன்னும் நெகிழ்ந்த மன்னர் அவனுக்கு மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார். இப்பொழுது மகாராணி தனது வாயை மூடிக்கொண்டாள். இது கதை. இப்போது குறள் படியுங்கள்.

ஆகவே, யாரிடம் எப்போது? எப்படி? என்ன? பேச வேண்டும் என்று உணர்ந்து பேசத் தெரிந்தவர்களே எதிலும் வெற்றியடைகிறார்கள். நாமும் நல்லதையே பேசுவோம். 

நல்லதையே சொல்லுவோம்! வாகை சூடுவோம்! நலம்பெற்று நீடுவாழ்வோம்
(தொடரும்)


Post a Comment

Previous Post Next Post