ஆண் தேவதை

ஆண் தேவதை


ஒற்றைவிரல் பிடித்து
நம்பிக்கை ஊட்டுவதும்
அச்சம் தவிர்ப்பதும்
தோளால் உயர்த்தி
மார்போடு ஆரத்தழுவி
உலகைக் காட்டுவதும்
நெஞ்சில் துயில வைத்து
 விழிநீரை விலக்குவதும்
கல்விக் கூடம் சேர்த்து
கனவுகளை விதைப்பதும்
வருங்கால வாழ்வுக்கு
பாதை சமைப்பதும்

பிள்ளைகளின் கனவுக்காக
பசியைத் தவிர்ப்பதும்
தனக்கான புத்தாடைக்கு
காலத்தைத் தள்ளிப் போடுவதும்
தழுவும் தூக்கத்தை
ஒத்தி வைப்பதும்
துளிர்க்கும் வியர்வைகளை
விதைகளாக்குவதும்
அவமானங்களின் அவலங்களை
தன்னுள்ளே மறைப்பதும்
வழியும் கண்ணீரை
கைக்குட்டைக்குள் சேமிப்பதும்
தனக்கான கனவுகளை
அடையாளம் தெரியாமல் அழிப்பதும்

மரணம் புன்னகைப்பது வரை.
" எனக்கு எதுக்குப்பா? 
எனக்கு வேண்டாம்மா...
எனக்கு இதுவே போதுமடி...
நான் நல்லா இருக்கேன்..."

உயிர் உறவுகளுக்காக
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும்
மெய்களாலும் பொய்களாலும்
மென்மையாகக் கடந்து போகிறவர்

மண்விழுங்கிய பிறகுதான்
பலருக்கு வெளிப்படுகிறார்
ஆண் தேவதையாக
அப்பா...



Post a Comment

Previous Post Next Post