குறள் 602
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
மாப்ள.. ஒருத்தனோட குலம் சிறக்கணும்னா, மொதல்ல அவன், அவங்கிட்ட இருக்க சோம்பேறித்தனத்தை வெரட்டி விடணும்.
எதையும் செய்யணும்னா, ஊக்கத்துடன் முயற்சி எடுக்கணும். சரிதானா மாப்ள.
குறள் 603
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
மருமவன.. இந்த சோம்பேறித் தனம் இருக்க.. அது எல்லாத்தையும் சப்சாடா காலி பண்ணிரும். இப்படிப்பட்ட குணத்தை கொண்டுள்ள முட்டாப் பயா இருக்க குடும்பம், அவன் போய்ச் சேரதுக்கு முந்தியே அழிஞ்சு பொயிரும். புரிஞ்சிக் கிட்டயா மருமவன..
குறள் 604
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
மாப்ள.. நம்மைச் சுத்தி சில முழுச் சோம்பேறிகள் இருப்பாங்க. அவங்க உருப்படியா எந்த முயற்சியும் எடுக்கமாட்டாங்க.
அவங்களால குடும்பப் பேர் கெட்டுப் போவும். அவங்க செய்யுத குற்றங்களும் கூடிக்கிட்டே போவும் மாப்ள.
குறள் 605
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.
சீக்கிரம் முடியுத வேலையை ரொம்பவும் இழுத்து அடிக்கது...
எதையும் நெனைவுல வய்க்காம மறந்து போறது..
சுறுசுறுப்பு இல்லாம எப்பமும் மந்தமா இருக்கது..
பகல்ல நல்ல தூக்கம் போடுதது..
இந்த நாலும் நம்மட்ட இருக்கது, வயித்துல கல்லை கட்டிக்கிட்டு கெணத்துல குதிக்கமாதிரி...
குறள் 611
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
இந்தச் சொலி யெல்லாம், நமக்கு தோதுப் பட்டு வராது ன்னு நெனச்சு அதை விட்டுட்டு் வேற ஒரண்டியும் போயிரக் கூடாது மாப்ள.
நீ எடுக்கப் போற முயற்சியால, அந்தச் சோலியைச் செய்யதுக்கு வேண்டிய தெறமை ஒனக்கு தன்னாப்ல வந்துரும் மாப்ள.
குறள் 612
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
மாப்ளை.. ஒரு வேலையை செய்யணும்னு எறங்கிட்டா, அதுல கண்ணுங் கருத்துமா இருந்து செஞ்சு முடிக்கணும். நம்மாலல்லாம் எப்பிடிச் செய்யமுடியும்னு, நெனச்சு அரை குறையா விட்டுட்டோம்னு வச்சுக்க, மத்த எல்லாரும் நம்மை கை கழுவிருவாங்க மாப்ள..
(தொடரும்)
Tags:
செந்தமிழ் இலக்கியம்