அந்த நல்ல மனிதர்களை வேலிக்கப்பால் அனுப்பிவைத்துவிட்டு பிரியாவிடை பெற்றுக்கொண்ட செரோக்கி, “மொழிவலவன்” தன் கைகளில் திணித்துச் சென்ற பணக்கட்டோடு, மறுபுறம் திரும்பி புரோகோனிஷ் நோக்கி நடக்கலானான்!
இடையில் இடப்பக்கமாகத் திரும்பி தனது இரு சக்கரவண்டி சொருவி வைக்கப்பட்டிருந்த கல்லிடுக்குவரை சென்று, வண்டியை இழுத்தெடுத்து அதில் தாவி ஏறியவனகாக மரமரவேரடிக்கு வந்து தனது நகரத்து உடைகளை மாற்றிக்கொண்டவனாக மறுபடியும் “ஸ்ட்ராபெர்ரி” உணவகம் நோக்கிச் சென்றான்.
இனிப்புப் பதார்த்தங்கள் சிலதை இரண்டு வெவ்வேறு பொதிகளில் வாங்கி எடுத்துக் கொண்டவன், சிறுவர் விளையாட்டுத் திடலைத் தாண்டி “மனாஸ்” நகர் நோக்கி விரைந்தான்.
இர்வினின் வீடு முன்றலை செரோக்கி அடைந்தபோது, இரவின் தனது வண்டியை இயங்க வைப்பதற்காக உதைத்துக் கொண்டிருந்ததைக் கண்டான்!
திடுதிப்பென செரோக்கியைத் தனது முன்றலில் கண்டபோது, திகைத்து நின்றான் இரவின்.
இர்வினின் வீட்டு முன்றல் பலவர்ண மலர்களைத் தன்னகத்தில் தாங்கி இருந்தது. இடைக்கிடை இருவர் அமரக்கூடிய மெருகூட்டப்பட்ட கற்கதிரைகள் காணப்பட்டன.
இர்வின் கைலாகு கொடுத்து வரவேற்கப்பட்ட செரோக்கியை கற்கதிரைகளில் ஒன்றில் அமரச் செய்து, தானும் அவனை நெருங்கி அமர்ந்து கொண்டான்.
ஏதோ நினைத்த செரோக்கி திடுத்ப்பென்று ஓடிச் சென்று, தனது இரு சக்கரவண்டியில் வைத்திருந்த இனிப்புப் பொதிகளில் ஒன்றை எடுத்து வந்து இர்விநிடத்தில் கொடுத்துவிட்டு, கற்கதிரையில் அமர்ந்து தனது ரெங்க்மா ஆற்றில் மூழ்கி காப்பாற்றப்பட்ட கதையை மெல்ல ஆரம்பித்து, “மொழிவலவன்” பணக்கட்டு ஒன்றைத் தன் கரங்களில் திணித்துச் சென்றதுவரை அனைத்தையும் தனக்குத் தெரிந்த திக்கு மொழியில் சொல்லி முடித்தான்!
இர்வினுக்கு ஆச்சரியமாகவிருந்தது!
ரெங்க்மாவை அவர்கள் காப்பாற்றியது மனிதாபிமானம்! செரோக்கி வாழ்ந்து கொண்டிருப்பது பணப்புலக்கமில்லாத வனப்பகுதி என்பது அந்த மனிதர்களுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை! அதனால் பணக்கட்டு ஒன்றை அவர்கள் செரோக்கிக்குக் கொடுத்துச் சென்றதை எந்த வகையிலும் சரி காண முடியாத நிலையில் இர்வின் குழம்பிப்போய்விட்டான்!
ஆனாலும் இதனை செரோக்கியிடத்தில் காட்டிக்கொள்ளாதவனாக, ரெங்க்மாவின் தற்போதைய நிலைபற்றி விசாரிக்கலானான்!
(தொடரும்)
Tags:
தொடர்கதை