குறள்வழி வாழ்வியல் சிந்தனைகள்!-76 (செந்தமிழ் இலக்கியம்)

குறள்வழி வாழ்வியல் சிந்தனைகள்!-76 (செந்தமிழ் இலக்கியம்)


அன்பால் மனங்களை வெல்வோம்!
அன்பு ஒரு வலிமையான ஆயுதம், அதன் ஆற்றலை உணராதவர்கள் அதன் வலிமையை ஒருபோதும் அறிவதில்லை. அன்பிற்கு அஃறிணை உயிர்கள்கூட கட்டுப்படும். அறம் சார்ந்த அமைதிச் செயல்களுக்கே அன்பு துணையாகும் என்று நினைப் போர்க்குத் தெரியாது. பகைவர்களை வெல்வதற்கும் கூட அன்பேதுணையாகும் என்பது.

அந்த அன்பை உணராது. மனமாச்சரியம் கொண்டு, சுயநலத்துடன் செயல்பட்டு பிறர் மனங்களை ரணமாக்கும் மாந்தர்களை எப்படி தண்டிப்பது... இதோவள்ளுவர் கூறுவதைப் படியுங்கள்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். (குறள் 314) தீமை புரிபவர்களையும் துன்பம் விளைவிப்பவர்களையும் தண்டிக்க ஒரு வழி உண்டு. அதாவது, அவர்கள் வெட்கம் அடையும்படி அவர்களுக்கு

நாம் நன்மை புரிவதே அந்தத் தண்டனையாகும் என்பதாகும். இதனைச் சொல்லும்போது ஒருகதை நினைவுக்கு வருகிறது.
அந்த கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனது பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். அவனிடம் அவன் வேட்டைக்குப் பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. வேட்டைக் காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டிச் சென்று விவசாயியின் ஆட்டுக் குட்டிகளைத் துரத்துவதும், கடித்துக் குதறுவதுமாக இருந்தன.

இது விவசாயிக்கு மிகுந்த மன வருத்தத்தைக் கொடுத்தது. அவனும் அண்டை வீட்டுக்காரனான வேட்டைக்காரனிடம் அப்பா உன் நாய்களைக் கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளைத் தாக்குவதும், காயப்படுத்துவமாக உள்ளன" என்றான். அதை வேட்டைக்காரன் கண்டுகொள்ளவே இல்லை. 'செவிடன் காதில் ஊதிய சங்காக' அவை பயனற்றுப் போனது. இந்நிலை தொடர....

ஒருமுறை வேட்டைக்காரன் சற்று கோபத்துடன் “இதோ பார் ஆட்டை துரத்துகிறது. கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்றும் செய்யமுடியாது. உன்னால முடிஞ்சதைப் பாத்துக்கோ" என்றான். 

இது ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் புகாராக வர அவர் விவசாயியிடம் "என்னால் பஞ்சாயத்தைக் கூட்டி அந்த வேட்டைக்காரனைத் தண்டித்து, அபராதம் விதித்து, அவன் நாய்களைக் கட்டிப்போடச் செய்ய முடியும். ஆனால் நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியைச் சம்பாதிக்க நேரிடும். இருவரும் அருகருகில் வசிப்பவர்கள். ஆகவே, பக்கத்து வீட்டுக்காரன் உனக்கு நண்பனாக இருப்பதில் விருப்பமா? அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?" என்று கேட்டார்.

அவர் கூற்றில் உள்ள உண்மையை உணர்ந்த விவசாயி. "அவன் எனக்கு நண்பனாக இருப்பதில்தான் விருப்பம்” என்றான். "சரி அதற்கு நான் சொல்வதைப் போல் செய்" என்று கூறி சில விஷயங்களைச் சொன்னார்.

அதன்படி, மறுநாள், தன் பட்டியில் இருக்கும் ஆட்டுக் குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி விளையாடப் பரிசளித்தான். குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் ஏக
குஷி, தன் குழந்தைகளின் புதிய தோழர்களைப் பாதுகாக்க தற்போது நாய்களை சங்கிலியில் சுட்டிப் போட வேண்டி இருந்தது.

யாரும் சொல்லாமலே வேட்டைக்காரன் நாய்களை சங்கிலியில் பிணைத்தான். தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததைத் தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி. தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களைப் பரிசளித்தான் வேட்டைக்காரன். ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.

மேற்கூறிய கதைபோல அன்றாடம் பலருக்கு நடப்பதுதான். பிரச்சனை தான் வேறு வேறு. நம்மிடம் நியாயம் இருக்கிறது என்பதற்காகவோ, நம்மிடம் வலிமை இருக்கிறது என்பதற்காகவோ வீணாக எதிரிகளைச் சம்பாதித்துக் கொள்ளக்கூடாது.

நமக்குத் தேவை மன அமைதி. நிம்மதி. அது உதவுவதன் மூலம் கிடைத்தால் நல்லதுதானே! எதிரியும் கூட மனம் திருந்தும்போது நல்லோர் நிலை கூறவும் வேண்டுமோ!

இப்போது குறள் படியுங்கள் வாழ்க்கை இனிக்கும். மனம் அமைதியறும். நலம் பெற்று நீடுவாழ்வோம்!(தொடரும்)





Post a Comment

Previous Post Next Post