புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா - 86

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா - 86


கடமையில் கண்ணாயிருந்த செரோக்கி, தனது விருந்தினர் வனப்பகுதியில் நிறைவேற்றிக்கொள்ள முடியாதிருந்த  காலைக்கடன்களில் ஒன்றை இப்போது நிறைவேற்றிக்கொள்வதற்காக அந்த அழகிய மங்கையின் அனுமதியோடு,  அவர்களைக் “கழிப்பறை” நோக்கி அனுப்பி வைத்தான்!

 

அங்கிருந்து திரும்பிவந்தவர்களை   ஆசாரத்தோடு வரவேற்று, அவர்கள் விரும்பியவற்றை எடுத்துக்கொடுத்து பணிவிடை செய்து கொண்டிருந்த அம்மங்கை,  தன் கடைக்கண்ணால்  செரோக்கியை அடிக்கடி  பார்த்துக்கொள்வதில் ஆர்வம் மிகக்காட்டினாள்.

 

காயப்பட்டு வந்த செரோக்கியின்   ரணத்திற்கு மருந்திடும்வேளை தன் மனதை அவள் ஒருகணம் அவனிடத்தில் பறிகொடுத்ததுண்டு.  நீண்டதொரு இடைவேளைக்குப் பின்னர் அவனை மீண்டும் சந்தித்ததானது, அவளுக்கு மன ஆறுதல் தந்திருக்க வேண்டும். அனைவரும்  உண்டு குடித்து முடித்ததும்,  செரோக்கி காசாளரிடம்  சென்று பணத்தாள்களை நீட்டினான்! அப்போது  அந்த மனிதர்கள் ஆச்சரியப்பட்டார்கள்!

 

பணப்புழக்கமில்லாமல்  தனிமைப்படுத்தப்பட்ட வனப்பகுதியில்  வாழும்  இந்த வனவாசியிடத்தில் எங்கிருந்து,  எப்படிப்  பணம் வந்தது என்பது அவர்களுக்குப் புதிராகவேயிருந்தது.  புதிருக்கு விடைகாணாமலேயே  அவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள்!

 

மறுபடி “மரவேரடி” வரை நடந்து வந்த  அவர்களை, வேலிக்கப்பால் அனுப்பிவைத்து  பிரியாவிடை பெற்றுக்கொள்ள முயன்றபோது, அந்த மொழிவலவன் ஒரு பணக்கட்டை செரோக்கியின் கைகளில் திணித்தான். வாங்க மறுத்த அவனை மொழிவலவன்  விடவில்லை. பலாத்காரமாக அதனை  செரோக்கியிடத்தில் கொடுத்துவிட்டு மரவேரடிக்கு அப்பாலிருந்த குழந்தைகள் விளையாட்டுத் திடலைத்தாண்டி  காத தூரம் சென்ற அவர்கள்  கையசைத்து  விடை பெற்றுக்கொண்டனர்!     

 (தொடரும்)

 



Post a Comment

Previous Post Next Post