பல ஆண்டுகளாய் நடந்தோம்.
பல நாட்களை இழந்தோம்.
பல இரவுகளை,பல பாதைகளை
நாம் இழந்தோம்.
மென் தளிர்களுடன்
துளிர்த்துச் சிரித்திருந்த வயல்களை,
பச்சைப்பசேலென்று
பூத்துக் குலுங்கிய நெல்வயல்களை,
நம் நெல்வயல்களை
நாம் இழந்தோம்.
களைப்புற்றுப்போன
வயோதிகரைப்போல
குனிந்து மண்டியிட்டு கெஞ்சிய
புகையிலை மரங்களை,
அந்த இலைகளின் நறுமணத்தை
நாம் இழந்தோம்.
கடற்கரைகளையிழந்து,
காலைச் சூரியனோடேயே
உழைப்பைக் கொணர்ந்து
கொட்டிய படகுகளை,
வலைகளையிழந்து,
காலைச் சூரியனையும்
நாம் இழந்தே போனோம்.
எங்கள் இல்லங்களை,
எங்கள் கிணறுகளை,
எங்கள் ஆலயங்களை
எங்கள் அகதி முகாம்களையும் கூட,
ஏன் மழையில் நனையாவண்ணம்
நம்மைப் பாதுகாத்த
பிளாத்திக்கு கூரைகளைக் கூட
நாம் இழந்தே போனோம்.
ஈரம் மாறா இரவொன்றில்
நம் சொந்தங்களை
காய்ச்சலில் இழந்தோம்.
நம் தேவைகளை பூர்த்தி செய்த
ஒரே ஒரு பாலமும்
தடை செய்யப்பட்டபோது
நாம் இறந்துபோன உறவினர்களைப்
புதைக்க எடுத்துச் செல்லும்
உரிமையை இழந்தோம்.
நாம் பல ஆண்டுகளாய் நடந்தோம்.
பல பாதைகளை இழந்தோம்.
பல ஆண்டுகளை இழந்தோம்.
நாம் பல பாதைகளில் நடந்தோம்...
The Lost Sun
By:- Amirthanjali Sivapalan
தமிழில்:- கெக்கிராவ ஸுலைஹா
By:- Amirthanjali Sivapalan
தமிழில்:- கெக்கிராவ ஸுலைஹா
'பட்டுப் பூச்சியின் பின்னுகை போலும்...'
தொகுப்பிலிருந்து...
0 Comments