நான் ஒரு தீவு.
அருளுக்கும் குறைவில்லை
என் அழகிற்கும் குறையில்லை.
எல்லாமிருந்தும்
எனக்கில்லை நிம்மதி.
நடுக்கடலில்
தத்தளிக்கிறேன்.
கிடைத்த சுதந்திரம்
பறக்கிறது காற்றில்
தேசியக் கொடியாக மட்டும் .
சர்வ அதிகாரங்களும்
நடத்துகின்றன ஆட்சி
ஜனநாயகம் என்ற பெயரில்.
இங்கே மனிதர்கள்
வாழ்கிறார்கள்
வெறும் ஜடங்களாக.
மனிதமும் வாழ்கிறது
வெறும் பிணமாக.
எல்லாமிருந்தும்
எனக்கில்லை நிம்மதி.
நடுக்கடலில்
தத்தளிக்கிறேன்.
இங்கு ஏழைகள்....
ஏழைகளாகவே இருப்பது
எழுதப் பட்ட விதி.
நடுத்தர வர்க்கம்....
நசுக்கப் படுவது அவர்களது
தலைவிதி.
இங்கு வாழும்
மக்களை....
எந்தளவு சீண்டினாலும்
எதையுமே உணராதவர்கள்.
சூடு சொரணையற்ற
நல்லவர்கள்.
வாக்குரிமை....
அது
மீண்டும் மீண்டும்
முட்டாள் தனத்தை நிரூபிக்க
மக்களுக்கு வழங்கப்படும்
ஒரு ஓட்(டு)டை உரிமை.
அரசியல்....
அது
பொய்யையும், திருட்டையும்
மூலதனமாகப் போட்டு
ஆரம்பிக்கப்படும்
ஒரு வியாபாரம்.
நாடாளுமன்றம்....
அது
சாக்கடை நாற்றமடிக்கும்
பாழடைந்த
துப்புறவுத் தொழிற்சாலை.
சுதந்திரம்....
அது
ஆண்டுக்கு ஒருதடவை
கொண்டாடப்படும்
பண்டிகை.
ஒற்றுமை....
அது
ஒருசிலர் மட்டும்
சொல்லிக் கொள்ளும் வார்த்தை.
பொதுவாகவே
பலருக்கும்
அது ஒவ்வாத வார்த்தை.
வன்முறை....
அது
அரசியல் வாதிகளுக்கு
"மதம்" பிடிக்கும் போது
அரங்கேற்றப் படும் நாடகம்.
இனவாதம்....
இங்கே
"மதம்" கொண்டவர்கள்
கடைப்பிடிக்கும் நாகரிகம்.
ஊடகம்....
அது
வயிற்றுப் பிழைப்புக்காக
வன்முறைகளைத் தூண்டி
வேடிக்கை காட்டும்
ஒரு ஈனப் பிறவி.
பணம்....
அது
ஏழைகளுக்கு எட்டாக்கனி.
நடுத்தரத்துக்கு
தற்காலிகமாகக் காட்டப்படும்
ஒரு காட்சிப் பொருள்.
விலைவாசி....
அது
வியாபாரிகள்
விளையாடி மகிழும்
பொழுது போக்குச் சாதனம்.
ரூபாய் நோட்டு....
அது
மக்களுக்காக
அடிக்கடி அச்சடிக்கப்படும்
பெறுமதியற்ற
கடதாசித் துண்டு .
கலப்படம்....
இங்கே
எல்லாவற்றிலும் கலந்திருக்கும்
மூலப் பொருள்.
வியாபாரி....
காற்றுள்ள போதே
தூற்றிக் கொள்வதில்
கவனமாகவே இருக்கும்
மகா புத்திசாலி.
விவசாயி....
முதலாலியல்ல
அவன் உழைப்பாளி.
விதைத்து விதைத்தே
அவன் மட்டும் வளராத
வியாபாரி.
பொருளாதாரம்....
அது
எழுந்து நடக்க முடியாமல்
படுக்கையில் கிடக்கும்
ஒரு நோயாளி.
வறுமை....
ஏழை வீட்டில்
சரளமாகப் பேசும் மொழி.
நடுத்தர வீட்டில்
அடிக்கடி
பேசிக் கொள்ளும் மொழி.
பணக்கார வீட்டில்
பாவனையில் இல்லாத
ஒரு பாஷை.
எதிர்காலம்....
அது
ஓட்டத் தெரியாத மாலுமியுடன்
நடுக்கடலில்
சிக்கித் தத்தளிக்கும்
ஒரு ஓட்டைக் கப்பல்.
கரை சேருமா
கடலில் மூழ்குமா
காலம் தான் பதில் சொல்லுமா...?
0 Comments