கீழிறங்கிய தூறல்களில்
கிழிந்தது
மண்ணின் முகத்திரை.
அடர்ந்த இருளில்
பேயாகிக் கொண்டிருந்தன
அரண்டவன் கண்ணுக்கு எல்லாமும்.
பயணப்படும் பாதையில்
உடன் பயணிப்பதை பணியாய்க்
கொண்டிருக்கிறது பாதைகள்.
மூடிய விழிகளுக்குள்
தடமின்றி நுழையும்
கனவு.
அத்துமீறியது
வேலியில் நிலைச்சரிந்த
கல்கம்பம்.
ஆகாயம் அனுப்பிய
தூதுவராக பூமிக்கு வருகிறது
மழை.
நாணல்களுக்காக வருந்தினால்
மகிழ்ச்சியோடு வெள்ளத்தை
வரவேற்க இயலாது நதி...!
ஆயுதம் கொள்ளாத கவிஞன்
சொற்களைச் சூறையாடுகிறான்
களத்தில்.
மௌனத்தை
நிசப்தத்தின் வழியே
மொழிபெயர்க்கிறேன்.
பனையில் கனிந்திருந்தது
மாவென அந்தியில்
கூடடையும் சூரியன்.
Tags:
கவிதை