"மோகத்தின் விலை "- 14

"மோகத்தின் விலை "- 14


ஆட்டோ நின்றிருந்த இடம் காலியாக இருந்தது. சுற்றி விட்டது போன்ற பிரமையுடன் அதிர்ந்து நின்றாள் தேவகி.  கடைக்காரரும் அவளைத் தாண்டி சென்று புள்ளியாக மறைந்து போனார். சுற்றி மண்டிக் கிடந்த இருளும் தனிமையும் அவளை பயத்தின் எல்லைக்குத் தள்ளியது. எங்கிருந்தோ கேட்ட ஆந்தையின் அலறல், “ஏனடி உனக்கிந்த நிலை” என்று எக்காளமிடுவது போல் தோன்றியது.  அகதியைப் போல் தான் நின்றிருந்த நிலை அவளை மிகவும் தடுமாற வைத்தது. மீண்டும் அவள் வெற்றியை தொடர்பு கொள்ள முனைந்தபோது கைபேசி தன் கடைசி மூச்சை விட்டு ஆப் ஆனது. 

அழுகையுடனும், பயத்துடனும் அவள் தடுமாறி நின்ற போது, இந்தப் பயணம் நாம் வராமலே இருந்திருக்கலாமே என்று எண்ணவும் தோன்றியது.
 
காரியாலத்தில் எல்லா பணிகளையும் முடித்துக் கொண்டு, டாக்டரையும் சந்தித்து விட்டு வீட்டுக்கு நேரம் கழித்தே வந்தான் சிவா.  வாகனத்தை விட்டு இறங்கும் போதே, பணிவுடன் வரவேற்கும் ஆறுமுகத்தின் முகத்தில் தெரிந்த சோகம் கலந்த கலவரத் தோற்றத்தை  கவனித்த சிவா, “என்ன? சுகமில்லையா?” என்றான் பரிவுடன். 

“அப்படி ஒன்றும் இல்லை ஐயா!” என்று விசனத்துன் பதில் சொல்லி விட்டு சிவானின் கைகளைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தான் ஆறுமுகம்.

முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு வந்த சிவா, “கண்ணன் தூங்கி விட்டானா?” என்றான்.

சிவாவின் கேள்விக்கு “ஆம்” என்றவன் அவனுக்கு உணவுகளை பரிமாறத் தொடங்கினான். 

வீட்டின் அமைதியான தோற்றம் சிவாவுக்கு கொஞ்சம் புதிதாக தோன்றியது.  சிவாவின்  முக பாவனையிலேயே அதை புரிந்து கொண்ட ஆறுமுகம். “எல்லோரும் சாப்பிட்டு தூங்கியாச்சு, நீங்கள் மட்டும் தான்....” என்று இழுத்தான்.

“ஓ.. தேவகியும் தூங்கி விட்டாளா? சரியாக சாப்பிட்டாளா?  சரி, பாவம், காலையில் இருந்தே கண்ணன் பாடாய் படுத்தி இருப்பான்” என்ற சிவா,  பசியின்மை இருந்தும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமே என்பதற்காக சிறிது உணவை அருந்தி  விட்டு மாத்திரைகளை எடுத்துக் கொண்டான்.

தூங்கும் மகனையும், மனைவியையும் தொல்லைப் படுத்த வேண்டாமே என்ற எண்ணம் தோன்ற, காற்றோட்டமாக வீட்டுக்கு வெளியே வந்தமர்ந்தான். நிழலாய் சிவாவை தொடர்ந்து வந்த ஆறுமுகம், மிகவும் கலக்கத்துடன் சிவாவை நோக்கியவாறு நின்றான்.

“என்ன?  ஏதும் வேண்டுமா?” என்ற சிவாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் தயங்கினான் ஆறுமுகம்.  சிறிது நேரம் மௌனமாய் நின்றவன், சிவாவின் காலடியிலேயே உட்கார்ந்தான்.  பின் தயங்கித் தயங்கி “ஐயா,  அம்மா ...” என்று சொல்ல வந்தவன், மேலும் ஏதும் சொல்ல வார்த்தையின்றி தயங்கி நின்றான். 
(தொடரும்)





Post a Comment

Previous Post Next Post