Ticker

6/recent/ticker-posts

Ad Code



காணாமல் போன காதலி!(எமைப் பிரிந்த 2021க்காக)


நாள் முன்னூற் றறுபதிலும்
நாளிகையும் பிரியாது
என்னோடு சேர்ந்து
இல்லறத்திலே இணைந்து
உடலோடும் உளத்தோடும்
ஒன்றாய்க் கலந்துவிட்டு
ஓடித்தான் போய்விடாள்
ஒரு நொடிக்குள் எங்கேதான்
நாளெல்லாம் எனக்கு 
நச்சரிப்பு தந்ததாலா
போ என்று சொல்லு முன்னே
போய்விடாள் என்னை விட்டு
விடிந்தெழுந்து பார்த்தேன்
விறாந்தை எல்லாம் திறந்திருக்கு
வெட்கத்தில் தானோ ஏனோ
வீட்டைவிட்டு ஓடிவிட்டாள்
மனம் கலங்கும் வேளை எனை
மார்பில் அணைத்ததில்லை
அன்பைச் சொரிந்தெனக்கு
ஆறுதல்கள் தந்ததில்லை
பண்பை இழந்திரவில்
படிதாண்டிச் சென்று விட்டாள்
எனது துயரினிலும்
இதயமுறும் சுமையினிலும்
அனுதினமும் பங்கெடுக்க
அவளால் முடியவில்லை 
அற்ப நொடிக்குள் நான் 
அறியாமல் ஓடிவிட்டாள்
பதுப்புது நோய்கள் தந்தாள்
பூதஉடல் எரிக்க வைத்தாள்
வீட்டுக்குள் முடங்கவைத்தாள்
வேலைகளை முடக்க வைத்தாள்
இருந்தினியும் துன்பமென்றா
என்னை விட்டு ஓடிவிட்டாள்
அரங்கம்என் அந்தரங்கம்
அனைத்தும் அவளாயிருக்க
உறங்க எனை வைத்துவிட்டு
ஓடிவிட்டாள் எங்கேதான்
ஒரு வார்த்தை தானும்
ஓடுவதாய்ச் சொல்லாமல்
நடுராவில் மாறிவிட்டாள்
நானெங்கே தேடுவது
வெயிலில் துளி மழையில்
வீசும் பனிக்காற்றில்
அருகில் இருந்தென்னை
அணைத்தெடுக்க முடியவில்லை 
வலியைக் குணப்படுத்த
வக்கும்தான் இருக்கவில்லே
தொலைவில் இருந்து புது
துணைக் கொருத்தி வந்ததாலோ
தூங்கி எழுவதற்குள் 
துணிச்சலுடன் ஓடிவிட்டாள்
என்னோடு சேர்ந்து
இன்பம் தர இயலாமல்
கண்மூடித் திறப்பதற்குள்
காற்றாகப் பறந்து விட்டாள்
படுக்கையை நாள்முழுதும்
பங்கு போட்டுக் கொண்டவளா
திடுக்கெனவே பறந்துவிட்டாள்
திசைகூடச் சொல்லாமல்
நிழல் போலே அவளோடு
நீண்ட நாட்கள் நான் வாழ்ந்தேன்
களவாகிப் போனாளே
கவலைகளைக் கொடுத்து விட்டு 
என்னைப் பிரிந்தவளும்
எள் நொடியும் இருந்ததில்லை
இருள் சூழ்ந்த நள்ளிரவில்
எங்கேதான் போனாளோ
அவளாலே அனுபவித்த
அல்லல்கள் போதுமடா
இன்னொருத்தி இன்று
எனைவந்து சேர்ந்துவிட்டாள்
பழையவளால் பட்ட கஷ்டம்
பக்கம் பக்கமாய் இருக்கு
காசிருந்தும் வாங்க 
கடையில் பொருள் இல்லா கஷ்டம் 
பாலில்லா மஞ்சளில்லா
பசளையில்லா கஷ்டம் 
சாந்தில்லா மருந்தில்லா
சலவைக்கல் இல்லா கஷ்டம் 
கேஸ் இல்லா கரண்ட் இல்லா 
பெற்றோல் இல்லா கஷ்டம் 
போற இடமெல்லாம் 
போலீனால் கஷ்டம்
மணிக்கணக்காய் நின்று
மருந்து போல் கேஸ் வாங்கிவந்தும்
வெடிக்கும் வெடிக்கும் என்ற
வேதனையில் படும் கஷ்டம்
இன்னும் இன்னும் இருக்கிறது
எனக்கவளும் தந்த கஷ்டம் 
இருபத்தி ரெண்டு வந்து 
இன்னல்கள் தீர்க்கும் என்றா
இருபத்தி ஒன்றவளும்
எடுத்தெடுப்பில் ஓடிவிட்டாள்
இருபத்தி ரெண்டுடன் நான் 
இதயத்தைப் பகிர்வேன் என்றா
இருபத்தி ஒன்றவளும்
என்னை விட்டுப் பிரிந்தாளோ
என்னதான் செய்யலாம் நான்
இறை நாட்டம் அப்படித்தான்
வாழ்ந்துவிட்டு என்னோடு - ஒரு
வார்த்தை சொல்லாப் போய்விட்டாள்!




Post a Comment

0 Comments