Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா - 90


மறுநாள் விடிந்ததும் விடியாததுமாக  செரோக்கியின் தந்தை தன் மகனை  அழைத்து  யோகியாரிடம் சென்று ‘நல்லன’ கேட்டுவரச் சொன்னார்!

பழங்குடிக் கிராமத்தவர் சிக்கல்களில் சிக்கித்தவிக்கின்றபோதெல்லாம்   அவர்களுக்கு ‘நல்லன’ கூறிவருவதன் மூலம்,  அவர்களது   மனங்களில் யோகியார் நீண்டகாலமாக நீங்கா இடம் பிடித்திருந்தார். கிராமத்தவர் அவரது  அறிவுரைகளை தெய்வவாக்காகக் கருதி வருகின்றனர்.

முதன் முறையாக ரெங்க்மாவை அழைத்துக் கொண்டு எச்சங்களையும் மூலிகைகளையும் சேகரித்து வர வனத்துக்குள் நுழைய முற்பட்டபோது, நிகழ்ந்துவிட்ட துயரச் சம்பவம் எதோவொரு செய்தியை வெளிக்கொணர்வதாக செரோக்கி நினைத்தான்! அது நல்ல செய்தியா, கெட்ட செய்தியா என்பதில்தான்  அவன் மனம் குழம்பிப் போயிருந்தது!

சற்றேனும் தெய்வ நம்பிக்கையில்லாத வனவாசிகள், ஏதோவொரு சக்தியின் இயக்கத்தில் சிறிது  நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பது யதார்த்தம்! கிராமத்தவர்களால் ‘ஹர்கின்ஸ்’ என்று அன்போடழைக்கப்பட்டு வந்த  ‘பெரியவரு’க்குப் பிறகு அந்த நம்பிக்கையை,  கிராமத்துக்குள் ஏற்படுத்திய பெருமை யோகியாரைத்தான் சேர்கின்றது.  செரோக்கியை  அவரை நாடிச்செல்ல வைத்ததும் அந்த நம்பிக்கைதான்!

புரோகோனிஷ் கிராமத்தைத் தாண்டி – பெரியகல் அடிவாரத்தில் அமைந்திருந்த யோகியார் ஆசிரமத்திற்கு செல்வதென்பது இலேசுப்பட்ட காரியமல்ல!

செரோக்கி அடுத்த நாள் விடிந்ததும் வனத்துக்குள் சென்றான். அங்கே ஆலமரமொன்றைத்  தேடிக்கண்டுபிடித்தான்.  அந்த மரத்தில் தரையைத் தொடும் வரை நிறைய விழுதுகள் காணப்பட்டன. அதிலிருந்து சிலவற்றைப் பிடுங்கி எடுக்க முற்பட்டபோது அந்த அசரீரி கேட்டது.

“அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கி வைப்போம்!”

அவன் எச்சங்களையும் மூலிகைகளையும் திரட்டுவதற்காக வனத்துக்குச் சென்றபோதெல்லாம்  இந்த அசரீரி  அடிக்கடி ஒலித்துக் கொண்டிருந்தது அவன் நினைவில் வந்து போனது!  அப்போதெல்லாம் அவன் அதுபற்றி எந்தக் கவனமும் எடுத்துக் கொள்ளாதிருந்த அவன்,  இன்று தன் காதுகளில் ஒலித்த வாசகங்கள் தனது  உள்ளத்தை ஊரடறுவுவதை உணர்ந்தான்!

காரியத்தில் கண்ணிருந்த அவன், விழுதுகளைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு பெரிய கல்லுக்கு வந்து சேர்ந்தான்.

அவற்றை ஒன்றோடு ஒன்றாக இணைத்து கல்லின் உச்சியிலிருந்த மரமொன்றில் ஒரு நுனியை இறுகக் கட்டிவிட்டு, மறு நுனியைக் கல்லின் அடிவாரம் வரை தொங்கவிட்டுவிட்டு, அதனைப் பிடித்து கல்லடி வரை இறங்கலானான்!

சிரமங்களுக்கு மத்தியில் அடிவாரம் வரை இறங்கிவிட்ட அவன், அங்கே பண்புல் வேயப்பட்ட  சிறிய குடிசையொன்றும்  அதற்குப்பக்கத்தில் காததூரம் வரை கிளை பரப்பி வளர்ந்திருந்த பொன்னிற இலைகள் கொண்ட தம்பமரமொன்றுமிருந்ததைக் கண்டான். காற்றின் தாக்கத்தினால்   - பொன்னிற இலைகள் மரத்திலிருந்து விழுந்து, நிலத்தைப் புனிதமடையச் ச்செய்து கொண்டிருந்தன.  அந்தப் புனித  நிலத்துக்குள் செரோக்கி நுழையும்போது, யோகியார்  மரத்தடியில் தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்!

நீண்டு வளர்ந்திருந்த வெண்ணிறத் தாடியும், தலை மயிரும் அவரது வயது முதிர்ச்சியைக் கட்டின.  மரப்பட்டையினாலான அங்கவஸ்தியொன்றை அணிந்திருந்த யோகியாரது  முகத்தை, அடிக்கடி நிலத்தில் விழுந்து கொண்டிருந்த  பொன்னிற இலைகளிலிருந்து வந்த ஒளியலைகள்  தேஜசாக்கிக் கொண்டிருந்தது!

அப்போதுதான் அந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வை அவன் கண்டான்!
(தொடரும்)




 

Post a Comment

0 Comments