Ticker

6/recent/ticker-posts

சுவனத்துக் குழந்தைகளுடன் நான்- 3


(உளவியல் ஆலோசகர் லைலா அக்ஷியாவின் அனுபவத் துளிகள்)

ஒருங்குபெறா திட்டங்கள்....!
மார்க்கக் கல்விக்கு  முதலிடம் கொடுப்பது என்பது தவறில்லை. அது இம்மைக்கும், மறுமைக்கும் அத்தியாவசியமானது.

ஆனால், அதற்கு மட்டுந்தான்  அனைத்து முன்னுரிமையும் கொடுக்கவேண்டும், முயற்சி செய்ய வேண்டும் என்றும், மற்ற தேவையெல்லாம் உலக தேவையே. அதற்கெல்லாம் பெரிய  அவசியங்கள் ஏதும் இல்லை.

இந்த சீலங்களை, உய்க்கும் வழிகளை இறைவன் அதிசயமாக, குத்ரத்தாக தானாக வழங்குவான் என்று,  கண்மூடித்தனமாக நம்பி,எம் பெற்றோர்களும், ஒரு சில சமூகத் தலைமைகள்( என்று தம்மை சொல்பவர்களும்) என்பாரும் நமது இளைய சந்ததியினரை   பலவீனமாக ஏதோ ஒரு உலகத்திற்குள் உட்செலுத்தி கொண்டிருக்கின்றார்கள்.

இங்கு 'மறுமை' மற்றும் 'இம்மை' என வெகுவாக மனித இயல்பு வாழ்க்கை பிரித்துக் காட்டப்படுகிறது.

இவ்வாறு இவர்களை உள்வாங்கும்  மார்க்கக் கல்விச்சாலைகள் கூட இதே நோக்கத்தையே சிரமேற்கொண்டு,மனனம் இடவைத்து ,சட்டக் கலைகளை கற்றுக்கொடுத்து அவர்களை அழகாக சமூகத்திற்கு வெளியாக்கி விடுக்கிறார்கள்(??) .ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருக்கிறது.

அல்ஹம்துலில்லாஹ்.

ஆனாலும்...

ஒரு ஆசிரியையாக இப்படியான  மாணவர்களிடம் தனிப்பட்ட முறையில் அமர்ந்து பேச வேண்டிய நிலைமைகள் எனக்கு அடிக்கடி பெற்றோர்களால் ஏற்படுத்தப்படுவதுண்டு.
எதற்காக??

"டீச்சர் இவர் மதரஸாவில்  இந்தளவு பாடங்களை மனனமாக முடித்தவர் . இனி இவரை  ஒரு தொழிலுக்காக இப்போ ஒரு கடைக்கு சேர்த்திருக்கிறோம்.."

"அப்படியா..சந்தோஷம்"

 "டீச்சர் .."

"ஓ. சொல்லுங்க என்னமோ தயங்றீங்க"

"மகனுக்கு கொஞ்சம் எழுத ,வாசிக்க படிச்சி கொடுக்க முடியுமா??

"என்ன பாடம்?"

கொஞ்சம் இங்லீஷ்.. முக்கியமா தன்னோட விஷயங்கள பேச , மற்றவங்க புரிந்து கொள்ற அளவுக்கு, முக்கியமான விபரங்களை வாசிக்க  இருந்தாலும் பரவல்ல.."

"சரி.
 ஆனாலும் இந்த கொஞ்ச காலத்திக்குள்ள எப்படி? அதுவும் பெரிய ஆண் மாணவர்களுக்கு நான் தனிப்பட்ட வகுப்புகள் செய்வதில்லையேமா.."

"இல்லை டீச்சர்.வேறவங்கட படிக்க அவருக்கு வெக்கமா இரிக்காம். அல்லாஹ்வுக்காக இத செய்யுங்க.  ஒரு போர்டு வாசிக்க, முக்கியமான நோட்ஸ  புரிந்து கொள்ள ஏலான்னா  இவர கடைக்கு  சேர்த்துக்கொள்ள மாட்டேன்னு சொல்றாங்க.."

முடியாது என்று சொல்லாத தர்மசங்கடமான நிலை . விளக்கங்கள், அறிவுறுத்தல் நிறைய கொடுக்க வேண்டி மனம் சொன்னாலும்  அவற்றை எல்லாம் அந்த நேரத்தில் வெளிப்படுத்தி அவர்களுடன் விவாதிக்க  விரும்பவில்லை.

"சரி நாளை அனுப்புங்கள்"

"தம்பி..உங்களால வாசிக்க முடியுமா? மூன்றெழுத்து சொற்களை அல்லது நான்கெழுத்து சொற்களை நான் சொன்னால் எழுத முடியுமா?"

"இல்ல டீச்சர்" 

"சரி உங்களைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு ஐந்து விடயங்கள் கூறுவீர்களா."
"இல்லை "

"சரி உங்கட மொழியிலேயே  இந்த சொற்களை எழுதி காட்டுங்கள்.."

மிகச் சாதாரணமாக நிறைந்திருந்த எழுத்துப்பிழைகள். சொற் பிழைகள். அத்தோடு கவலைக்கிடமான நிலையில் வாசிப்பு??

"சரி. எழுத்துக்கள் எவ்வளவு தெரியும் என்று எனக்கு எழுதிக் காட்டுங்கள் .தெரியாவிட்டால் பிரச்சினை இல்லை தம்பி."

"முதல்ல தைரியமாக இருங்க தம்பி"

பாதி எழுத்துக்கு மேல் தொடரமுடியாமல் தலைகுனிந்து இருக்கிறது அத்தர் மணமணக்க அப்பாவியாய் ஒரு   எதிர்காலமும்,முகக் கவசத்திற்கு மேலாக முகமூடிப் போர்த்திய எதிர்காலமும்.

இது போன்று நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளை இதுவரை சந்தித்து விட்டேன்.

திட்டங்கள் வகுக்கும்போது எதிர்காலத்தை முன்வைத்து வகுப்பதொன்றே உசிதம். எதிர் காலங்களில் என்னென்ன வகையில் அது அனுகூலங்களாக இருக்கப்போகிறது என்பது மட்டும் தீர்மானிக்காது ,  எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் எப்படி முகம் கொடுப்பது என்பது பற்றி திட்டவட்டமாக ஆராய்ந்து, தகுதியானவர்களால் ஒருமித்து கலந்தெடுப்பதே ஒரு சமூகத்திற்கு ஆரோக்கியமான திட்டமாக வகை குறிக்கப்படுகிறது.

எம் இளைய சமூகத்தினர் எழுதப் படித்து, வாசிக்கத் தெரிந்து, சமூகத்தோடு, சர்வதேசத்தோடு சுமுகமான  தொடர் பாடலைக்கொண்டு,பிறருக்கு தெளிவுகளை எத்தி வைக்கும் அளவிற்கு மொழிஅறிவும், பேச்சுத் தெளிவும், உள வீரியமும் கொண்டவர்களாக செதுக்கப்பட்டு ;வீட்டிற்கும், சமூகத்திற்கும் ,நாட்டிற்கும் பொறுப்பு வாய்ந்த ஒரு பிரஜையாக, ஒரு வர்த்தகத்தை நடத்திச் செல்வதற்குரிய தலைமைத்துவப் பண்பு (leadership) பயிற்சி, தொழில்நுட்ப அறிவு கம்பீரம் ,சுய கவுரவம், தன்னம்பிக்கை, தைரியம் போன்ற அடிப்படை அம்சங்கள் கல்வியறிவோடு இணைத்து, ஆரம்பத்திலிருந்தே பயிற்றுவித்து விட வேண்டிய அவசியம் ஏன் இங்கு முன்னெடுக்கப்படுவது இல்லை? 

இத்தனையும் உலகக் கல்வியென இவை  ஒரு சிலரின் திட்டங்களால் உதாசீனப்படுத்த படுகிறதா?

அல்லது இவற்றையெல்லாம் நீங்களாகவே தேடிக்கொள்ளுங்கள் என பொறுப்புகள் நழுவப்படுகிறதா?

"விசுவாசம் கொண்டோரே நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணை வரை ஒருவருக்கொருவர் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால் அதை எழுதிக் கொள்ளுங்கள். எழுதிக்கொள்வது அடைந்து விடாதீர்கள்..."(அல்பகறா: 282 )

என வணக்கத்தை வலியுறுத்திய அதே மார்க்கம்தான் வர்த்தகத்தையும் வியாபாரத்தையும் கல்வி அறிவோடு தொடர்புபடுத்தி நடத்திச் செல்லுமாறு கூறி இருக்கிறது. இத்தகைய இறைவாக்குகள் ஒன்றல்ல இரண்டல்ல. நிறையவே உள்ளன.

"மனிதர்களே! வானங்களில் உள்ளவற்றையும்,பூமியில் உள்ளவற்றையும் தன் அருட்கொடைகளையும் வசப்படுத்தித் தந்திருக்கின்றான் என்பதனை நீங்கள் பார்க்கவில்லையா?

 ஆனாலும் மனிதர்களில் சிலர் கல்வியறிவோ, நேர்வழியோ, ஒளிமிக்க வேத ஆதாரமோ  இன்றி அல்லாஹ்வைப் பற்றி வீணாக தர்க்கிக்கின்றனர்.."
(லுக்மான்:20)

இத்தகைய கல்வியறிவை ஈருலகிற்கும் சார்ந்து, மத்தியதரமாக கடைபிடிக்காமல் பிரித்துப் பார்ப்பதனால் , எம் சந்ததியினரை பிற சமூகத்திடம் தலை குனிய வைத்து எம்மை எங்கு கொண்டுபோய் சேர்க்கின்றார்கள் இவர்கள்?அறிவை வலியுறுத்தும் அழகான மார்க்கத்தில் இவர்கள் அதை 'உலகக் கல்வி , மறுமைக் கல்வி' என்று பிரித்துப் பார்ப்பதன் அவசியம்தான் என்ன?

இத்தகைய ஆளுமைப் பண்புகள் எப்படி குறுகிய ஒரு காலத்துக்குள், சில மணி நேர வகுப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்புகிறார்கள்? 

ஏன் இவர்கள் ஒருவித பயந்த சுபாவத்துடன்,
கல்வி மட்டத்தில், தொடர்பாடலில் பின்னமர்ந்து, மற்றவர் கேலிக்கும், கேள்விக்கும் பேசுபொருளாக உள்ளாகி சமூகத்தில் உலா வருகிறார்கள்?

தன்நம்பிக்கையை, தைரியத்தை, பிறரை தெளிவுபடுத்தக் கூடிய அந்த 'கெத்தான' அறிவை, பருவம் கடந்து எப்படி வளர்த்துக் கொள்ளப் போகிறார்கள்? 

கேள்விகள் விரிந்து கொண்டே செல்கின்றன..

மதரஸா அவல நிலைக்குள் வெளிப்படையாகவே இதை கொண்டு வருகின்றேன்.

இவற்றையெல்லாம் பேசுவதால் அது இறைவனை நிந்திப்பதாகவோ  அல்லது மார்க்கத்தைப்  விமர்சிப்பதாகவோ ஒருவகையான  போலி அச்சுறுத்தலை  உருவாக்கி உலவ விட்டிருக்கிறது ஒரு பிரிவு .

பிழைத்து போன திட்டங்களால் எல்லாமே பிழையாகி கொண்டிருக்கின்றன என்பதனை சமூகம் எப்போது பொறுப்புடன்  உணரப்போகிறது?

 விமர்சிப்பதற்கு முன் விடைகளை தாருங்கள்.!
(தொடரும்)

Laila Akshiya.
(skills Insight)
Dip in psychology & counselling.






Post a Comment

0 Comments