இலங்கை வம்சாவளித் தமிழரான உமா குமரன் பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ தொகுதியில் வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள இவரது கட்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகே பிரித்தானியாவில் ஆட்சி அமைக்கப் போகின்றது.
உமா குமரன் போட்டியிட்ட தொகுதியில் மொத்தம் 54.18 சதவீத வாக்காளர்கள் வாக்குகளைச் செலுத்தியுள்ள நிலையில், இவர் 19,415 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட வேட்பாளர் 17% வாக்குகளை மட்டுமே பெற்றதால் கன்சர்வேடிவ் கட்சி நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.
இவரது வெற்றியை பிரித்தானியாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்தவர்கள், மட்டுமன்றி இந்தியர்களும், புலம்பெயர் தமிழ் பேசும் மக்கள் அனைவருமே கொண்டாடி மகிழ்கின்றனர்!
கிழக்கு லண்டன் பகுதியில் பிறந்தது வளர்ந்துள்ள உமா குமரனின் பெற்றோர், இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது இவரது பெற்றோர் பிரித்தானியாவுக்கு வந்துள்ளனர். உமா குமரன் பிரித்தானிய தேசிய மருத்துவ சேவைகளில் பணியாற்றியவர்.
பிரித்தானியத் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் பலரும் போட்டியிட்டனர். தமிழ் பேசும் வேட்பாளர் எட்டுப் பேர் பல்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிட்ட நிலையில், உமா குமரன் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.
கவின் ஹரன், கன்சர்வேடிவ் கட்சி சார்பில் சவுத்எண்ட் ஈஸ்ட் மற்றும் ரோச்ஃபோர்ட் தொகுதியில் களமிறங்கி, 11,368 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
மயூரன் செந்தில், எப்சம் மற்றும் ஈவெல் தொகுதியில் ரிபார்ம் யுகே என்ற கட்சி சார்பில் போட்டியிட்டார். மருத்துவரான இவர் 10% வாக்குகளை மட்டுமே பெற்றார்.
டெவினா பால், ஹேம்பிள் பள்ளத்தாக்கு தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு, 16.2% வாக்குகளைப் பெற்று 3ம் இடம் பிடித்தார்.
கிரிஷ்னி ரேஷகரோன், சென்னையில் பிறந்துள்ள இவர், தொழிலாளர் கட்சி சார்பில் சட்டன் அண்ட் சீம் தொகுதியில் போட்டியிட்டு, 17.7% வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளார்.
ஜாஹிர் உசேன், சீர்காழியில் பிறந்துள்ள இவர், லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி சார்பில் குரோய்டன் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு, நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
கமலா குகன், ஸ்டாலிபிரிட்ஜ் மற்றும் ஹைட் தொகுதியில் லிபரல் டெமாக்ராட் போட்டியிட்டு, சுமார் 1080 வாக்குகள் மட்டுமே பெற்று கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
பிரித்தானியத் தேர்தலில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடைந்த நிலையில், கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி அமோக பெற்றதால், பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம் நிகழப் போகின்றது; புதிய பிரதமராக கீர் ஸ்டார்மரின் பொறுப்பேற்கவுள்ளார்.
பிரித்தானியாவில் மொத்தம் உள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 410 இடங்களைப் பெற்று வெற்றியையும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119 தொகுதிகளில் வென்று, தோல்வியையும் தழுவியுள்ளது. கட்சியின் தலைவர் ஸ்டார்மர் பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்பார்.
தோல்வியை ஏற்றுக்கொண்ட சுனக், பெரும்பான்மை இடங்களை வென்ற தொழிற்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பாரம்பரியத்தின் படி, தோல்வியை ஒப்புக்கொண்ட பிறகு, ரிஷி சுனக் மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு நேரில் அதனை அறிவிக்கவேண்டும்.
வெற்றி பெற்ற கெய்ர் ஸ்டார்மரும் மன்னன் சார்ல்ஸைச் சந்தித்து புதிய அரசாங்கத்தை அமைக்க முடியுமென்று அறிவிக்க வேண்டும்.
61 வயதாகும் கெய்ர், தனது இளமைப் பருவத்தில் ப்ளூட், பியானோ, வயலின் உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசிக்கும் இசைக்கலைஞராக இருந்துள்ளார். இளம் வயதிலேயே சோசலிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, தனது 16 வயதில் தொழிலாளர் கட்சியின் இளம் சோசியலிஸ்ட் கூட்டமைப்பில் உறுப்பினரானார்.
இவர், லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றுள்ளதோடு, 1987ல். பாரிஸ்டர் பட்டம் பெற்று வழக்கறிஞரானார். ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் மேற்படிப்பை முடித்து, மனித உரிமைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.
2008ம் ஆண்டு பிரிட்டன் மற்றும் வேல்ஸ் அரசு வழக்கறிங்கர்களுக்கான இயக்குனர் பதவியில் அமர்ந்துள்ளார்.
சட்டத்துறையில் இவர் ஆற்றிய பணிகளுக்காக 2014ம் ஆண்டில், இரண்டாம் எலிசபெத் மகாராணியிடன் நைட்ஹூட் மற்றும் சர் பட்டம் பெற்றார்.
அதனைதொடர்ந்து அவர் முழுமையாக அரசியலில் பிரவேசித்து, 2015ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு லண்டலில் உள்ள ஹோல்பார்ன் மற்றும் செயிண்ட் பான்க்ராஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரமி கார்பினுக்கு மிகவும் நெருக்கமானவரான கெய்ர் ஸ்டார்மர், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி தோல்வியடைந்த நிலையில் அக்கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவரது வெற்றியுடன் தொழிலாளர் கட்சியின் புதிய சகாப்தம் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.
ஐ. ஏ. ஸத்தார்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
1 Comments
வாவ் நமக்கும் பெருமையே நாமும் வாழ்த்துவோம் அங்காவது தமிழன் ஆட்சி கொள்ளட்டும் சிறுதளவாயினும் 💐💐💐💐
ReplyDelete