Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா - 93


புரோகோனிஷ் கிராமத்தவர் அதிகாலையில் “ஓரினகோ” ஆற்றங்கரையில் ஒன்று கூடி,  தமக்கேயுரிய வனத்துப்பாடல்களைப் பாடியவாறு நடனங்களை ஆடிக்கொண்டிருந்தனர்!

செரோக்கியும் அவனது நெருங்கிய நண்பர்களும்  பெரியதொரு  மரக்கட்டையைக் கொண்டு வந்து ஆற்றங்கரையில் நட்டினர்.

அதன் மேற்பகுதியில் துளையிட்டு, இன்னோர் கட்டையான மரக்கட்டையை அதிலே  சொருவினர். மத்தியிலும்  இரண்டு பக்கங்களிலும் துளையிடப்பட்ட  இன்னோர் நீண்ட  மரக்கட்டையை, நடப்பட்ட மரக்கட்டையின் மேற்பகுதியில் சொருவப்பட்ட கட்டையான  மரக்கட்டையில்  சொருவி “துலா” ஒன்றைச் செய்தனர்.

துளையிடப்பட்திருந்த மரக்கட்டையின்  இரு பக்கங்களிலும் நார்களைக்  கட்டி நிலம் வரைத் தொங்க விட்டனர்.

அதன் ஒருபக்கத்தை  அலங்கரித்து  “பீடம்” ஒன்றைச் செய்து ரெங்க்மாவை அதிலே அமர வைத்தனர்.  

யோகியாரின் வேண்டுகோளை ஏற்று, அமேசான் வனத்தினுள் காணப்படும் பல்லாயிரக்கணக்கான பழ வர்க்கங்களில் ஒன்பதே ஒன்பது பழ வகைகளை தேடிக்கொண்டுவரும் நோக்கில் ரெங்க்மாவின்  நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் வனத்திற்குள் பல்வேறு பக்கங்களிலும் பிரிந்து சென்றனர்.

வேட்டையாடுவதில் புரோகோனிஷ் கிராமத்திலேயே பிரபல்யம் பெற்றிருந்த ரெங்க்மாவின் தந்தை  அவளது தாயையும் அழைத்துக் கொண்டு கிழக்குப்பக்கமாகச் சென்றார்.

சிங்கினியோடு ஒருசேர தனிமையாக வனத்துக்குள் செல்லும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட ரங்கு,  அவளை அழைத்துக்கொண்டு  வனத்துக்குள் நெடு தூரம் சென்று நான்காம் அடுக்கை அடைந்தான்.  உயரமாக வளர்ந்திருந்த மரங்களில் ஏறி பழுத்துக்குலுங்கியிருந்த பெயர் தெரியாத பழ வகைகள் பலவற்றைப் பறித்தெடுத்த அவன் அவற்றைத் தாம் கொண்டுவந்திருந்த மரப்பட்டைப் பைகளுக்குள்  திணித்துக்கொண்டு ஆற்றங்கரைக்கு வந்துசேரும்போது அந்தி சாய்ந்துவிட்டது!

கிராமத்துப் பெண்களை அலங்கரிப்பதில் பிரசித்தி பெற்றிருந்த மங்குவின் மனைவி  இதற்காகவே தபுயாவிலிருந்து வந்திருந்தாள். அவளே ரெங்க்மாவை அலங்கரித்து பீடத்தில் அமரவைத்தாள்!

“துலா”வின் ஒரு  பக்கத்துப் பீடத்தில்  தன் கால்கள் நிலத்தைத் தொட்டவாறு அமர்ந்திருந்த  ரெங்க்மாவின் கால்கள்,  வானத்திலிருந்து கொண்டுவந்த பழவகைகளை மறு பக்கத்தில் அடுக்கிக்கொண்டிருக்கும்போது, மெல்ல மெல்ல நிலத்தை விட்டும் உயரத் தொடங்கியது! 
(தொடரும்)


வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை 
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com  

Post a Comment

0 Comments