‘Ballad’ என விளிக்கப்படும் கவிதைகள் ஒருவகையில் நாடோடிக் கவிதைகளை, நடனப் பாடல்களை ஒத்தன. 15ம், 16ம் நூற்றாண்டுகளில் ஃப்ரான்சிஸ் ஐ சைலட் என்பார் இக்கவிதைகளைத் தொகுக்க ஆரம்பித்ததாகக் குறிப்புகள் காணக்கிடக்கின்றன.
‘balare’ எனப்படும் இலத்தீனிய மொழிச் சொல் நடனத்தைச் சுட்டுவது. நடனமும், பாட்டும் கலந்து மக்களை நன்னெறியின்பால் கொணர பெரும்பாலும் அவை பரம்பரைப் பரம்பரையாக இசைக்கப்பட்டும், அரங்கேற்றப்பட்டும் வந்தன.
எழுதியவர் யாரென்று இக்கவிதைகள் சுட்டுவதில்லை வழமையில். வாசிப்பு, எழுத்தில் அதிகம் கவனம் செலுத்தாத மனிதனை வழிப்படுத்த பெரும்பாலும் பாடப்பட்ட இவை சரித்திரக் கதைகளையும், இளமையையும், காதலையும், வீரத்தையும் கருவெனக் கொண்டிருந்தன. ஒரு குலத்தின் வளமான ஒரு அங்கத்தவன் இதன் வரிகளைப்பாட, மற்றவர்கள் கோரஸாய் ஒன்று சேர்வர். இசையுடனோ, இசையின்றியோ கொண்டாட்ட வேளைகளில் இவை பாடப்பட்டன. நவீன மனிதனை எங்கனுமற்ற மனிதனாய் விளிக்கும் நாடோடிவகையில் அமைந்த இக்கவிதை, அவனோடு கூடவே இருக்கும் தீர்வற்ற சமூகப் பிரச்சினைகளைகள் பற்றி இயம்பி நிற்கின்றது.
எங்கேயுமற்ற பூமியில் எவர்க்குமுதவா வண்ணம்
எங்கனுமற்ற திட்டங்கள் தீட்டியபடி அமர்ந்திருக்கும் அவன்
உண்மையில் எங்கனுமற்ற மனிதன்.
அவனுக்கென்றதொரு கருதுகோள்களில்லா
எங்கே போவதென்றும் அறியா அவன்
உங்களினதோ, எனதோ ஒரு பகுதி போலில்லை?
எங்கனுமற்ற மனிதா தயவுசெய்து செவிமடு.
எதை நீ இழந்திருக்கிறாய் என நீ அறியாய்.
எங்கனுமற்ற மனிதா இவ்வுலகு உந்தன்
கட்டளையின் கீழ் இருக்கிறது.
எந்தளவு சாத்தியமோ அந்தளவு அவன் அந்தணன்.
எதைப் பார்த்திட வேண்டுமோ அதை வெறுமனே பார்க்கிறாய்.
எங்கனுமற்ற மனிதா, என்னைக் கொஞ்சமேனும் பார்க்க முடிகிறதா?
எங்கனுமற்ற மனிதா கவலை வேண்டாம்.
நேரம் ஒதுக்கிடு, அவசரம் எதுவும் வேண்டாம்.
யாரேனும் வந்து உனக்கு உதவிக்கரம் நீட்டும்வரை
அனைத்தையும் அதனதன் போக்கில் விடு.
அவனுக்கென்றதொரு கருதுகோள்களில்லா
எங்கே போவதென்றும் அறியா அவன்
உங்களினதோ, எனதோ ஒரு பகுதி போலில்லை?
எங்கேயுமற்ற பூமியில் எவர்க்குமுதவா வண்ணம்
எங்கனுமற்ற திட்டங்கள் தீட்டியபடி அமர்ந்திருக்கும் அவன்
உண்மையில் எங்கனுமற்ற மனிதன்.
எங்கனுமற்ற மனிதன்
பீட்டில்ஸ் குழுப்பாட்டு
(The Beetles - Group Song)
0 Comments