பேதம் மறப்போம்...!

பேதம் மறப்போம்...!


எண்ணும் வாழ்வு
மண்ணில் தொலைந்து
ஏக்கம் கொண்டொரு காலம்
பண்ணும் செயல்கள்
பாவச்சுமையாய்
பதியில் நிறைந்தொரு கோலம்
கண்ணில் தெரியும்
தீமைச்செயலால்
கவலையில் தோய்ந்திட்ட
மனிதம்
மண்ணில் வாழ்வு
விரையும் வினையாய்
மகிழ்வுதேடும் தேகம்
   
நீதி தொலைந்து
நியாயமழிந்து
நிம்மதியகலும்  வாழ்வு
சாதிச்சண்டையில்
மோதி மனிதமும்
சாந்தியிழந்திங்கு வீணாய்
வேத வழியதும்
பக்தி வாழ்வதும்
வீணோர் செயலெனும் கூற்றாய்
மோதுமுலகில் 
மோகித்தலைந்து
மண்ணில் அலைவதா
சிறப்பு
   
போட்டி பொறாமை
பொய்யும் களவும்
புரிவோர் மேலோராகி
காட்டிக்கொடுப்பும்
பகை கழுத்தறுப்பும்
கயமையும் நலமென்றாகி
கூட்டுக்குடும்ப
உறவைப்பேணா
கொள்கை வெறியென்றாகி
ஆட்டும் வாழ்வில்
அவதியே நிலையாய்
ஆவதா மனித ஏற்றம்
     
மார்க்கம் பலது
மண்ணில் வந்தும்
மனிதன் ஓரினம்தானே
மூர்கங்கொண்ட
சாதிப்பிரிவால்
மனிதம் மண்ணில் வளரா
நேர்மை வாய்மை
அன்பு பண்பாய்
நலமொன்றாகிடயிணைந்து
சேர்வோம் சாதிப்
பேதம் மறப்போம்
செகத்திலொற்றுமை
காண்போம்



Post a Comment

Previous Post Next Post