அது
செவ்விதழ்களை விரித்திருந்தால்
தன்னை அழகாக்கி
அகமகிழ்ந்திருக்கும்
செடி
வழி தவறி திரிந்த
ஒரு வண்ணத்துப்பூச்சியின்
திசை திரும்பியிருக்கும்
தேனுண்ட மயக்கத்தில்
தன்னை இழந்து
மகிழ்வில் திளைத்திருக்கும்
ஏதேனும் ஒரு வண்டு
ஸ்பரிசம் தந்த மென்மையை
அதிசயித்து போயிருக்கும்
தனக்குள்ளே தென்றல்
ஒரு குழந்தையின் அழுகையை
சிரிப்பாக மாற்றும்
பிரமிப்பை நிகழ்த்தியிருக்கும்
எட்டிப் பறிக்க எத்தனிக்கும்
சிறுமியோடு
தனியாகத் தொட்டு விளையாடியிருக்கும்
விழுங்கும் விழிகளோடெல்லாம்
புன்னகையை உதிர்த்துவிட்டு
மெல்ல அசைந்திருக்கும்
வெளியே வீசி விடவும்
மனமில்லை
கையில் ஏந்தி செல்லவும்
மனமில்லை
சுகமான சுமையாய்
கொஞ்சநேரம்
என்னை கலவரப்படுத்தி விட்டது
மனம் கவர்ந்ததால்
நான் கை நீட்டிப் பறித்த
அந்த அழகான ரோஜாமொட்டு.
2 Comments
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்
ReplyDeleteஎனது கவிதையை மிகவும் சிறப்பாக வெளியிட்டதற்காக இதயம் நிறைந்த நன்றிகள் ...
இனிமையான படைப்புகள்
ஒவ்வொரு இதழும் மெருகேறி வருகிறது ...
இனிய வாழ்த்துகள்..
ஐ.தர்மசிங்
நன்றி.தொடர்ந்தும் எழுதுங்கள்
ReplyDelete