Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-21


குறள் 738
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.

மருமவன... பொது மக்கள் எந்த சீக்கும் இல்லாம இருக்கணும்.  அவொளுக்கு தட்டுப்பாடு இல்லாம செல்வம் கெடைய்க்கணும்.  அவொளுக்கு செழிப்பான வயக்காட்ல வெளஞ்ச பொருள் நெறைய இருக்கணும். அவொ எப்பமும் கவலை இல்லாம சந்தோசமா இருக்கணும்.  அவொளோட பாதுகாப்புக்கு காவல் நல்லபடியா இருக்கணும். 

இந்த அஞ்சும் தான் மருமவன.. ஒரு நாட்டை அழகா காட்டுத நகை நட்டுங்க. 

குறள் 772
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

உருவத்துல சிறுசா இருக்க மொயல் காட்டுக்குள்ள  வெரசலா ஓடும். அதை குறிபாத்து நீ அடிச்சு சாய்க்கிறது பெருமை இல்லை மாப்ளை. 

ரொம்பப் பெரிசா இருக்க யானை அசைஞ்சு அசைஞ்சு பையத்தான் நடந்து போவும். அதக் குறி பாத்து  வேலை எறியும் போது, குறி தப்புனாக் கூட பரவாயில்லை. அது தாம் மாப்ளை ஒனக்குப் பெருமை. 

ஏம்னா நீ குறி வச்சது ஒண்ணும் சுண்டக்கா மொயலுக்கு இல்ல.பெரிய யானைக்கு மாப்ளை.

குறள் 783
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

மாப்ள.. நாம எவ்வளவுக் கெவ்வளவு நெறைய நூல்கள் படிய்க்கமோ,  அதுக்கு ஏத்தமாதிரி  புதுசு புதுசா தெரிஞ்சுக்கலாம். அப்ப நமக்கு நெறைய சந்தோசம் உண்டாகும் மாப்ள. 

அது மாதிரிதான் மாப்ள.. நாம நல்ல சேக்காளிங்க கூட பழகும்போது நம்ம சந்தோசம் அப்பிடியே பொங்கும். 

குறள் 786
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

வெறுமன சிரிச்சு சிரிச்சு பேசுதவனையெல்லாம் சேக்காளின்னு சொல்லிற முடியாது மருமவனே! 
நம்ம மனசு குளிருத மாதிரி பேசணும், பளகணும். அப்படிப்பட்டவொ தான் மருமவன உண்மையான சேக்காளி! 

குறள் 788.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

திடீர்னு வேட்டி அவுந்துரும். அப்பம்பாத்து  மின்னல் வேகத்துல நம்ம கை வேட்டியை இடுப்போட சேத்துப் புடிச்சிக்கிடும்.  இது மாதிரி தான், நம்ம சேக்காளி் எவனாவது இக்கட்டுல மாட்டிக்கிட்டாம்னா வெரசலா போய் 
ஒதவணும். புரிஞ்சுதாவே.

குறள் 828
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.

 நம்ம ஆளுங்க யாரையும் லேசுல நம்பிறக்கூடாது மாப்ள. நம்மைப் பாத்து கும்புடுவானுவொ. ஆனா கைகளுக்குள்ள நம்மை சோலியை முடிக்கதுக்குண்டான கத்தியையோ அரிவாளையோ மறைச்சு வச்சிருப்பானுவொ மாப்ள. 

இது மாதிரிதான் மாப்ள..நம்ம எதிராளிங்களும். நம்மட்ட வந்து, கண்ணீர் விட்டு அழுவானுவொ. ஆனா அதுல ஒரு உள் குத்து இருக்கும். நாம தான் மாப்ள கவனமா இருக்கணும். 
(தொடரும்)




Vettai Email-vettai007@yahoo.com 

Post a Comment

0 Comments