Ticker

6/recent/ticker-posts

மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-38 (வரலாறு-பாகம்-2)


கெங்கல்ல – பள்ளேகல 38
தும்பறைப் பிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள் வரிசையில் கெங்கல்ல- பள்ளேகல குடியிருப்புக்கள் பிரதான இடத்தை வகிக்கின்றன. வீதியோரக் குடியிருப்புக்களாக  விளங்கும் கெங்கல்ல, பள்ளேகல கண்டி நகரிலிருந்து பன்னிரண்டு கிலோமிற்றர் தூரத்தில் கண்டி- மஹியங்கனைப் பிரதான பாதையில் அமைந்திருக்கின்றன. முன்னர் இப்பாதை மஹியங்கன-மிடியாவத்த பாதை என அழைக்கப்பட்டதுண்டு.  மூவினத்தவர்களும்  இணைந்து வாழும் இவ்விரு குடியிருப்புக்களும் இருநூறு வருட காலத்துக்கும் அதிகமான வரலாற்றைக் கொண்டவையாகும்.

இரு குடியிருப்புக்களும்  முதலிலிருந்தே ஒரே ஜும்ஆ மஸ்ஜித் அமைப்பில்  நிறுவனப் படுத்தப்பட்டிருக்கின்றமை பாராட்டப்பட வேண்டியதாகும். ஆங்கிலேயர் வருகையைத் தொடர்ந்து அறிமுகமாகிய பணப்பயிர்ப் பொருளாதாரத்தோடு, பின்னிப் பிணைந்திருந்த பள்ளேகல இன்று மூவின மக்களையும் இணைத்து வைக்கும் கேந்திர நிலையமாக விளங்கி வருகின்றது. அவர்களுள் தென்னிந்தியத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் கணிசமான தொகையினராவர். தோட்டத் தொழிலாளர்களோடு தும்பறைப் பள்ளத்தாக்குப் பிரதேசத்தில் பூர்வீகம் முதல் குடியேறிய தமிழ்க்குடிகளும் இணைந்து கொள்கின்றனர்.

1750களுக்குப் பின்னர் கண்டி அரசியலில்  செல்வாக்குச் செலுத்திய நாயக்கர் வமிசத்தோடு தும்பறைத் தமிழ்ப் பூர்வீகம் இணைத்துப் பேசப்படுவதுண்டு. இக்காலப் பகுதியில் தும்பறைப் பிரதேசத்தில் நிலவிய தென்னிந்திய தமிழ், முஸ்லிம்  வர்த்தகர்களது  செல்வாக்கால் கெங்கல்ல, பள்ளேகல, பன்வில, தெல்தெனிய, மெதமகநுவர, வத்தேகம, ஹுன்னஸ்கிரிய போன்ற பல சந்தைப் பட்டினங்கள் உருவாகியிருக்கின்றன.  அவ்வரிசையில் தோன்றிய கெங்கல்ல, பள்ளேகலப் பட்டினங்களும்  தென்னிந்திய தமிழ் முஸ்லிம் வியாபாரிகளால் தோற்றுவிக்கப்பட்டவைகளாகும்.  சுதந் திரத்தின் பின் நாட்டில் ஏற்பட்ட அரசியல்  சமூக பொருளாதார மாற்றங்களின் பிரதிகூலங்களை அறிந்துகொண்ட இந்திய வியாபாரிகளிற் பலர் படிப்படியாக இவ்விரு பட்டினங்களிலிருந்தும் வெளியேறியதாக அறிய முடிகின்றது.  முஸ்லிம் வர்த்தகர்களது  செல்வாக்கை உறுதிசெய்வதாக 1925ம் ஆண்டு மறைந்த  காதர் பாவா என்ற வர்த்தகர் 1888ம் ஆண்டு  சின்னமுத்து ராவுத்தர்  தனது புதல்வனுக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட காணி உறுதிப்பத்திரம் சான்றாக விளங்குகின்றது.  இன்று சுமார் நூற்றைம்பது குடும்பங்கள் வாழும் கெங்கல்லைப் பட்டினத்தில்  பத்துக் கடைகள் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவையாகும். சமீபகால முதல்  கண்டியின் புறநகரங்களில் ஒன்றாக  வளர்ச்சியடைந்து வரும் கெங்கல்லையை நோக்கி புதிய குடிப் பெயர்ச்சிகள்  அதிகரித்து வருவதைக் காணலாம். நீண்ட காலமாக பிரதேச வர்த்தகத்தில் கால் பதித்திருந்த ஆரம்பக்குடியிருப்பாளர்கள் பூர்வீக வரலாற்றைக் கொண்ட கும்புக்கந்துற என்ற ஆற்றங்கரைக் குடியிருப்போடு இணைந்து செயல்பட்டதாகக் கூறப்படுவதுண்டு.   காலத்தின் தேவையை உணர்ந்த பிரதேசவாசிகள் 125 வருடங்களுக்கும் முதலில்  பள்ளேகல பட்டினத்தில் ஓர் மஸ்ஜிதை அமைத்திருக்கின்றனர். இன்று  ~மஸ்ஜிதுல் ழாபிர்’ என்னும் பெயரில் பாதையோரத்தில் அமைந்திருக்கும் மஸ்ஜிதின் காணி  கனவான் ஷேகு தாவூத் என்ற பெரியாரால் அன்பளிப்புச் செய்யப் பட்டிருப்பதாக அறியமுடிகின்றது. மஸ்ஜிதுக்குப் பக்கத்தில் தென்னிந்திய திருப்பத்தூரைச் சேர்ந்த பெரியார் ஒருவரின் அடக்கஸ்தலமும் பாதுகாக்கப்பட்டு வருவதோடு, பெரியார் ~திருப்பத்த்தூர் அவ்லியா|  என அழைக்கப்பட்டு வந்ததாக அறிய முடிகின்றது.  மஸ்ஜிதின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவர் எனப்போற்றப்படும் இப்பெரியாரின் நினைவாக  பிரதி வருடமும் ஸபர் மாதத்தில் மனாகிப் வைபவம்  நிகழ்ந்து வருவது சிறப்பானதாகும். தகரத்தால்  மறைக்கப்பட்;டிருந்த  பெரியாரின் அடக்கஸ்தலம்  1956ம் ஆண்டு நிரந்தக் கட்டடமாக நிர்மாணிக்கப்பட்டது பற்றிய குறிப்பு கட்டடத்தின் சுவர்ப்படிகத்தில் காணப்படுகின்றது.

மஸ்ஜித் ஆரம்பிக்கப்பட்டது முதல்  அதன் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்ட பலர் மக்களால் இன்றும் நன்றியுணர்வுடன் பேசப்பட்டு வருகின்றனர். அவர்களுள் கனவான்களான ஆதம் ஸாஹிப், ஏ. வரிசை முஹம்மத், ஜனாப் கனி, ஜனாப் குலாம் முஹிதீன், ஜனாப் முஹம்மது தீன், ஜனாப் முஹம்மது ரிஸ்வி ஹாஜியார்  குறிப்பிடப்பட வேண்டியவர்கள். சுமார் 250 சந்தாதாரர்களைக் கொண்ட  மஸ்ஜிதில் நீண்ட காலம் பணிபுரிந்த சமயப் பணியாளர்களுள் கும்புக்கந்துறையைச் சேர்ந்த கதீப் முஹம்மத் ஹனீபா லெப்பை, கதீப் லெப்பைக்கனி ஆலிம் ஸாஹிப் நன்றிக்குரியவர்களாவர். அவர்களுள் கதீப் முஹம்மது ஹனீபா லெப்பை  நாற்பது  வருடங்களுக்கும் அதிகமான காலம் பணிபுரிந்த  பெருமைக்குரியவர். தற்போது மஸ்ஜிதின் தலைவராகப் பணிபுரிபவர் வர்த்தகப் பிரமுகர் ஆதம் ஸாஹிப் முஹம்மது ரிஸ்வி ஹாஜியாராவார்.

பிரதான வர்த்தகப் பாதையில் அமைந்திருந்த  பள்ளேகலைப் பட்டினத்தைப் போன்றே கெங்கல்லைப் பட்டினமும்  தும்பறைப் பிரதேச வர்த்தக நடவடிக்கை களுக்குப்; பெரிதும் உதவியாக அமைந்திருந்த பட்டினமாகும்.    அக்காலை பொதிமாடுகள் ஓய்வெடுத்துச் செல்லும் ஒரு கேந்திர நிலையமாக கெங்கல்லை விளங்கியதன்  விளைவாக பட்டினத்தின் பெயரும்  நாளடைவில் “கெங்கல்ல” எனப் புழக்கத்திற்கு வந்திருக்கின்றது. மாத்தளைப் பிரதேசத்திலும் கொங்காவெல என ஓரிடம்  தற்போதும் அழைக்கப்படுவது இங்கு நினைவூட்டப்பட வேண்டியதாகும்.   அக்காலை பொதிமாடுகளை எடுத்துச் செல்வோர் தங்கிச் செல்வதற்காக  கெங்கல்லையில் ஒரு சத்திரமும் அமைக்கப்பட்டிருந்தது. சிங்கள மன்னர்கள் காலமுதல் இவ்வாறான சத்திரங்கள் இடத்துக்கிடம் அமைக்கப்படுவது வழக்கில் இருந்தவையாகும். தற்போதும் பல நூறு அம்பலங்கள் நாடுமுழுவதும் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவ்வரிசையில் கெங்கல்லைப் பட்டினத்தின் மத்தியில் காணப்பட்ட சிதைவடைந்த  அம்பலம் கடைசியாக கருங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால் அது கல் அம்பலம  என அழைக்கப்படுகின்றது. இவ்வம்பலம்  பிரதேசத்தில் செல்வாக்குடன் விளங்கிய கனவான் வைத்திய லிங்கம் பிள்ளை என்பவரால் 1907ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாகும்.

சமீபத்தில் பட்டினத்தின் மத்தியில்  நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மஸ்ஜிதும், குர்ஆன் மத்ரஸாவும் பிரதேச மக்களால் நீண்ட காலமாக உணரப்பட்டு வந்த தேவைகளாக விளங்குகின்றன. ஜமாஅத்தவர்களது பாரிய முயற்சியில் உருவாகிய இம்மஸ்ஜிதை அமைப்பதற்கான நிலம்  ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் அல்ஹாஜ் Y.L. முஹம்மத் மக்கி அவர்களால் வக்பு செய்யப்பட்டதாகும்.  அவரது துணைவி மர்ஹ_மா ஹாஜ்ஜா சித்தி பிஹாலுக்குச் சொந்தமான  நாற்பது பேர்சஸ் நிலப்பரப்பைக் கொண்டிருக்கின்றது. ஜனாப் O. L. M.  மக்கி அவர்கள் கம்பளையில் வாழ்ந்த  வர்த்தகப் பிரமுகரும்  சமூக சேவையாளருமான நூர் முஹம்மத் உமர் பாட்சா அவர்ளது புதல்வராவார். 1996ம் ஆண்டு ஆரம்பமாகிய மஸ்ஜிதின் பணிகள் ஒரு வருடத்துள் நிறைவடைந்து 1997ம் ஆண்டு மார்ச் மாதம் திறப்பு விழாக் கண்டிருக்கின்றது.  பட்டினத்தைச் சேர்ந்த அதிகமான  மாணவர்கள் ரஜவல மெதடிஸ்ட் வித்தியாலயத்திலும், கெங்கல்ல தமிழ் வித்தியாலயத்திலும் கல்வியைத் தொடர்கின்றனர்.(தொடரும்)

 

Vettai Email-vettai007@yahoo.com  

Post a Comment

0 Comments