Ticker

6/recent/ticker-posts

Ad Code



பிரியாத வரம் வேண்டும்!


பறவைகள் கூட்டம்
வானில் சஞ்சரித்து
ஒன்றாகி
உயிரோடு உயிராகி..
பிரிக்க முடியாத நட்பாகி...
ஒரே கூட்டில்!

பிரியும் பொழுது
கருக்கல் நேரம்
கார் மேகமாய்க்
கவலை மேகம் 
முக வீதியில்
சூழ்ந்து கொள்ளும்!
கண்களில் நீர்
கோர்த்துக் கொண்டு
இது
மழைக்காலமோ?
பிரிவு வலியின் 
பிரஸ்தாபமோ?

வருடங்களும் கணங்களாக
ஓடிப்போக
இந்தத் தருணத்தில்
இறுதி நாழிகைகளில்
நிமிடங்களை 
வருடங்களாக்கத் 
துடிக்குது இதயம்!!
ஏங்கும் மனது,
கனத்துப் போய்
வாடுது!! தள்ளாடுது!!

நட்பு எப்போது
பிரிந்தது?
இது வெறுமனே 
இல்லாத ஒன்றுக்கான விழாவோ?
கற்பனையில் வருகின்ற
முடிவோ?

பிரிவின் வலியில்
துயரம் தாங்காமல்
தன்னிலை மறந்து
உயிரில் கரையும் 
உன்னத உறவுகள்!
இதுவே ஆத்ம நட்பு..
இந்த வலியே 
நரம்புகளில் தேவகானம்
நயந்து இசைக்கும் ...
நட்பை உணர்ந்து
இணைக்கும்!!

பாங்காய்ப் பாங்கர் 
பரிதவித்தே 
கண்ணீர்த் துளிகளைப்
பிரவாகமெனப் பிரசவித்து
பிரியா விடை பெற்றாலும்
பெருவெள்ளமாய்
ஆலாபிக்கும் 
உயிர்ச்சுவட்டின் ஆகாயத்தில்
நினைவுத் துளிகள் 
ஈரத்தோடு பசுமையாய்
நெஞ்சின் ஓரம்
பூத்திருக்கும்
என்றும் இனிமையாய்!!
முடிவிலி இன்பமாய்!!

நெருங்குவதும்
விலகுவதும் 
ஞாலத்தின் நியதி என்று
விளம்புகின்றார்
இச்சிறு பந்தின்
சுழற்சியிலே
வாழ்வெனும் நதி
ஓட்டத்திலே
நெருங்கிய நண்பன்
கண்ணில் படுவான்
நெஞ்சமதிலே
நினைவுகளால் தொடுவான்
அக்கணத்தில் 
வானமே முடிவாய் 
எல்லை இல்லா 
மகிழ்ச்சியின் விடிவாய்!

வரிகள் யாவும் கண்ணீர் 
துளிகள் ஆகின்றன
கண்ணீர் துளிகளோ
மாலைகள் ஆகி
உத்தம நட்பை 
கட்டிக் கொள்கின்றன.
ஒன்றாக எம்மைக்
கைது செய்கின்றன

நன்றி கூறிட,
கூறிப் பிரிந்திடவா 
இந்த விழா
இல்லை இல்லை
மீண்டு வருக 
மீண்டும் மீண்டும் வருக
என்ற வார்த்தைகள்
வராதா என்று
எதிர்பார்த்து,
கனாக்கள் கண்டு
வாடிப்போய் கிடக்கிறோம்.
இயந்திரமாக மாறி விட்ட 
மனமும் உடலும்
நகர மறுக்கிறதே
ஏகிய நல்
இடத்தை விட்டு!!

வரலாறாகும் கற்கையில்
வாசனை பரப்பி
வாழ்க்கை எனும் 
ஒரு வழிப் பாதையின்
பாடசாலை வாழ்க்கை
எனும் எல்லையில்
மயிலிறகாய் வருடிய
வசந்தங்களே..
கூட்டமாய் சேர்ந்து
கோசமிட்டன
எங்கள் கைகளே..
மாறுமோ இந்த பந்தம்?
மரணம் வந்து 
மன்றாடிடினும்?

மாண்புறு நட்பே
மேதினியில் உயர்வு!!

Vettai Email-vettai007@yahoo.com 

Post a Comment

0 Comments