Ticker

6/recent/ticker-posts

"மோகத்தின் விலை "- 21

வாசகர்களுக்கு! 

மர்ஹூம்நசீமா முஹம்மத் அவரகள் வேட்டையில் தொடராக எழுதிய, வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்ற "மோகத்தின் விலை "என்ற தொடர்கதையை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் பதிவேற்றுகின்றோம். 

வேட்டை

நடந்தது என்ன என்று கிரகித்துக் கொண்டதும், பயத்தில் வீறிட்டாள் தேவகி.  தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட நிலையில் ஓலமிட்டு அழத் தொடங்கினாள். அன்பே உருவான கணவனும், அவள் அணைப்பில் இதம் காணும் கண்ணனும் கண்ணுள் வந்து போயினர்.  முகம் அறியா வெற்றி எனும் கபட நாடகம் ஆடி தன்னை இழி நிலைக்குத் தள்ளியவனை எண்ணி மனம் குமைந்தது. 

புண்ணாக வலித்த உடம்பு, எத்தனை காமுகர் கையில் பட்டேனோ என்று பட்டியலிட அறியாது அரற்றியது. கேவலம், காமம் என்ற மோகத்தீயில் தவறான வழியில்  அணுகியதால் தனக்கு கிடைத்த தண்டனையை எண்ணி அழுது மாய்ந்தாள் தேவகி.  உதவுகின்றேன் என்று தன்னை அழைத்து வந்த தாயம்மாள் எங்கே போனாள் என்று தெரியாமலும், கொண்டு வந்த பணம், நகை அனைத்துடன் தன் மானத்தையும் தொலைத்து விட்டவளாக பிரமை பிடித்தவள் போலானாள் தேவகி.

தன்னையும் குழந்தையையும் ஒதுக்கி விட்டு எங்கோ சென்று விட்ட தேவகி எப்படி இருக்கின்றாள் என்று அறியாமல் மனம் தவித்தாலும், தனக்கே என்று ஒரு வாழ்வை தேர்ந்து எடுத்தவள், கண்ணனையும் தன்னையும் துறந்து சென்றவள், தன் இஷ்டம் போல் சந்தோஷமாக தான் இருப்பாள் என்ற எண்ணத்தில், தன் சோகத்தை மறக்க, இல்லை மறைக்க முயன்று தோற்றுக் கொண்டிருதான் சிவா.

போதை தெளிந்து தன்னிலைக்கு வந்தால் அந்த நரகத்தில் இருந்து வெளியேற அழும் தேவகிக்கு அவ்வப்போது, உணவுடனோ, ஊசி மூலமாகவோ மீண்டும் தன்னிலை அறியா நிலைக்குத் தள்ளப் பட்டாள்.  யார் வருகின்றார்கள், யார் செல்கின்றாகள் என்று கூட உணர முடியாத அளவுக்கு ஒரு இயந்திரம் போல் ஆக்கப் பட்டாள் தேவகி.

நாளடைவில் உடல் நிலையில் நலிவுடனும், பயத்திலும், அளவுக்கதிமாக பலவந்தமாக திணிக்கப் படும் போதை மருந்தின் காரணமாகவும் நோயாளியானாள். 

சீக்கான அவளை சீண்டுவார் அற்று இன்று சாலையோரம் ஒரு மரத்தடியில் கண் திறந்தாள் தேவகி.  எவ்வளவு காலமாக அந்த நரகில் இருந்தோம் என்று கூட அறியாத நிலையில் அரை மயக்கத்தில் கிடந்தாள்.  விழுந்து கிடந்த அவளுடன் பாதையோரம் இருந்த பூனைக் குட்டியோன்று ஒட்டிக் கொண்டது.  தாய்ப் பூனை எங்கு சென்றதோ, என்னவோ.. தனியான குட்டி மட்டும் அவளின் உடலின் சூட்டில் இதம் காண்பது போல் வெகுவாக அண்மித்து, “மியாவ்” என்றது.  கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்க கண்ணனை நினைத்துக் கொண்டாள் தேவகி. 

“ஐயோ.. நான் இல்லாமல் எப்படி எல்லாம் அழுதானோ?  உடல் நிலை சரியில்லாத சிவா என்ன பாடு பட்டானோ?  ஒரு நாள் எனினும் அவனின் உடல் நிலையைப் பற்றி கவலைப் படாமல், எவ்வளவு முட்டாளாக நடந்து கொண்டேன்” என்றெல்லாம் நினைந்து மாய்ந்தாள் தேவகி.   பசியின் வாட்டமும், நோயின் தாக்கமும், நடக்கக் கூட சக்தியற்றவளாக அப்படியே கிடத்தியது. 

(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com

 

Post a Comment

0 Comments